தாவரவியல் - பரவல் அழுத்தப் பற்றாக்குறை (Diffusion Pressure Deficit – DPD) அல்லது உறிஞ்சு அழுத்தம் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
தூய கரைப்பான் (ஹைப்போடானிக்) அதிகமான பரவல் அழுத்தம்
கொண்டது. இதில் கரைபொருளை சேர்க்கும்போது கரைப்பானின் பரவல் அழுத்தம் குறைகிறது. குறிப்பிட்ட
வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் உள்ள ஒரு கரைசலின் பரவல் அழுத்தத்திற்கும்
அக்கரைசலின் கரைப்பானின் பரவல் அழுத்ததிற்கும் இடையேயான வேறுபாடே பரவல் அழுத்தப் பற்றாக்குறை (DPD) எனப்படுகிறது.
இதற்கு பெயரிட்டவர் மேயர் (1938) ஆவார். ஒரு கரைசலில் கரைபொருளின் அளவை அதிகரிப்பதன் மூலம்
பரவல் அழுத்தப் பற்றாக்குறையினை அதிகரிக்க இயலும். பரவல் அழுத்தப் பற்றாக்குறை அதிகமானால்
அது உட்சவ்வூடு பரவலை (எண்டாஸ்மாஸிஸ்) ஏற்படுத்தும் அதாவது அது ஹைப்போடானிக் கரைசலில்
இருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் ரென்னர் (1935) இதனை உறிஞ்சு அழுத்தம் என்று அழைத்தார். உறிஞ்சு
அழுத்தம் ஒரு செல்லில் சவ்வூடுபரவல் அழுத்தத்திற்கும் மற்றும் விறைப்பழுத்தத்திற்கும்
இடையே உள்ள வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும். கீழ்க்கண்ட மூன்று சூழ்நிலைகள் தாவரங்களில்
காணப்படுகின்றன. .
• இயல்பான செல்லில்
பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
பரவல் அழுத்தப் பற்றாக்குறை = சவ்வூடுபரவல் அழுத்தம்
- விறைப்பு அழுத்தம்.
• ஒரு முழுமையான
விறைப்புத் தன்மை பெற்ற செல்லில் பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
முழுமையான விறைப்புத் தன்மை கொண்ட செல்லில் சவ்வூடு
பரவல் அழுத்தமானது எப்போதும் விறைப்பு அழுத்தத்திற்குச் சமமாக இருக்கும்.
• சவ்வூடுபரவல் அழுத்தம் = விறைப்பு அழுத்தம் அல்லது
சவ்வூடுபரவல் அழுத்தம் - விறைப்பு அழுத்தம் = 0. இதன் காரணமாக ஒரு முழுமையான விறைப்புத்
தன்மை பெற்ற செல்லில் பரவுதல் அழுத்தப் பற்றாக்குறை எப்பொழுதும் பூஜ்ஜியமாக இருக்கும்.
• நெகிழ்வான செல்லில்
பரவல் அழுத்தப் பற்றாக்குறை:
நெகிழ்வான செல்லில் விறைப்பழுத்தம் காணப்படாததால் விறைப்பழுத்தம்
பூஜ்ஜியம். எனவே பரவுதல் அழுத்தப் பற்றாக்குறை = சவ்வூடு பரவல் அழுத்தம்.