Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கன்பூசியனிசமும், தாவோயிசமும்

வரலாறு - கன்பூசியனிசமும், தாவோயிசமும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 10:37 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

கன்பூசியனிசமும், தாவோயிசமும்

கி.மு.(பொ.ஆ.மு) 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள் இருவர் தோன்றினர். இவர்கள் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்குமான சமூக நடத்தைகளையும் ஒழுக்க விதிகளையும் உருவாக்கினார்கள்.

கன்பூசியனிசமும், தாவோயிசமும்

கி.மு.(பொ..மு) 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகிய மாபெரும் சிந்தனையாளர்கள் இருவர் தோன்றினர். இவர்கள் தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்குமான சமூக நடத்தைகளையும் ஒழுக்க விதிகளையும் உருவாக்கினார்கள். ஆனால், இவர்களது மரணத்திற்குப் பிறகு, இவர்கள் நினைவாகக் கோவில்கள் கட்டப்பட்டு, இவர்கள் போதித்த தத்துவங்கள் மதங்களாக மாற்றப்பட்டன. இவை முறையே கன்பூசியனிசம், தாவோயிசம் என்று அழைக்கப்பட்டன. இவர்களுடைய நூல்கள் சீனாவில் மிகவும் மதிக்கப்பட்டன. கன்பூசியனிசம் சீனாவின் ஆளும் வர்க்கத்தின் மீது மட்டுமல்லாது சாதாரண மக்கள் மீதும் செல்வாக்கு செலுத்தியது.

 

கன்பூசியஸ் (கி.மு. (பொ..மு). 551 - 478)

கன்பூசியஸ் கி.மு. (பொ..மு). 551இல் சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் பிறந்தார். அவர் வரலாறு, கவிதை, தத்துவம், இசை ஆகியவற்றைப் பயின்றார். அவர் ஐந்து முக்கியமான படைப்புகளை எழுதினார்.

1. ஆவண நூல் - இது மனித சமூகத்தை நெறிப்படுத்தும் அறவியல் கோட்பாடுகளைக் கூறுகிறது.

2. இசைப்பாடல் நூல் - ஒழுக்க நெறிமுறைகளைப் பாடல் வடிவில் கூறுகிறது.

3. மாற்றம் குறித்த நூல் மெய்ப்பொருளியல் பற்றிப் பேசுகிறது.

4. இளவேனிலும் இலையுதிர் காலமும் அரசியல் ஒழுக்க நெறி பற்றிக் கூறுகிறது.

5. வரலாற்று நூல் - சீனாவின் பண்டைய மதங்கள் பற்றிய நிகழ்வுகளையும் புராணக்கதைகளையும் கூறுகிறது.

 

கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்


1. மனிதத்தன்மை

2. நேர்மை

3. நன்னடத்தை

4. மெய்யறிவு

 5. நம்பகத்தன்மை

மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ். ஓர் ஒழுக்கமான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்கதனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்கவேண்டும். கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார். குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்" என்றும் தெளிவாக முன்மொழிகிறார். அரசு குறித்து அவரிடம் கேட்ட போது, ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்" என்றார்.

 

தாவோயிசம்

கன்பூசிய காலக்கட்டத்திற்கு முந்தைய தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் லாவோட்சே.  இவர் கன்பூசியஸை விட 53 வயது மூத்தவர். லாவோட் சே கி.மு. (பொ..மு). 604இல் பிறந்தார். அந்தக் காலகட்டத்து அரசியல்வாதிகளின் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றால் மனம் வெறுத்த அவர் நாட்டை விட்டு வெளியேறி, ஒரு உறைவிடத்தில் அமைதியாக வாழ்ந்தார். ஐயாயிரம் சொற்கள் கொண்ட ஒரு நூலை இரண்டு பாகங்களாக எழுதினார். பின்னர் அவர் அந்த இடத்திலிருந்து அகன்று சென்றார். அவர் எங்கே இறந்தார் எனத் தெரியவில்லை. அவரது நூலான தாவோ டே ஷிங் என்பது வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும்.

 

லாவோட்சேவின் போதனைகள் (தாவோயிசம்)

உலகில் மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம்மனிதர்களின் சுயநலம்தான். சுயநலம் என்பது நிறைவு செய்ய இயலாத அளவற்ற ஆசைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.

இயற்கையில் அனைத்துமே இயற்கை வழியிலேயே இயங்குகின்றன. மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

மனிதர்கள் யாரோ ஒருவர் ஒழுங்குபடுத்திய ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அறிவைப் பெற்ற மனிதர்கள் தமது களங்கமில்லாத தன்மையை இழந்ததுதான் இதற்குக் காரணம். தமது திரட்டப்பட்ட அறிவினைக் கொண்டு அவர்கள் ஒரு நகர நாகரிகத்தை ஏற்படுத்தி, தம்மைத்தாமே மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


Tags : History வரலாறு.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Confucianism and Taoism History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : கன்பூசியனிசமும், தாவோயிசமும் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்