Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சமணமும், பௌத்தமும்

வரலாறு - சமணமும், பௌத்தமும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 10:44 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

சமணமும், பௌத்தமும்

கங்கைச் சமவெளி விவசாயத்திற்குக் காளைகளைப் பயன்படுத்துவது அவசியமாக இருந்தது. எனவே,வேதசடங்குகள், யாகங்களுக்காக ஏராளமான கால்நடைகள் பலியிட்டது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

சமணமும், பௌத்தமும்

கங்கைச் சமவெளி விவசாயத்திற்குக் காளைகளைப் பயன்படுத்துவது அவசியமாக இருந்தது. எனவே,வேதசடங்குகள், யாகங்களுக்காக ஏராளமான கால்நடைகள் பலியிட்டது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. சமணரும் புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர். அவர்களது துறவும், இரந்துண்ணுதலும், சொத்துகளைத் துறந்து வாழும் முறையும் அப்புதிய போதகர்களை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின. வேதச் சடங்குகளின் ஆடம்பரம், விலங்குகளைப் பலியிடுதல், சொத்துகள் மீதான ஆசை போன்ற செய்கைகள் மக்களை வெறுப்புறச் செய்தன. இதுவே காலப்போக்கில் அவர்களை சமணம் மற்றும் புத்த மதங்களை நோக்கி இட்டுச் சென்றது.

மகாவீரரும் புத்தரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் புகழ்பெற்ற மகத அரசர்களான பிம்பிசாரர், அஜாதசத்ரு ஆகியோரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். கௌசாம்பி, குஷிநகரம், பனாரஸ், வைஷாலி, இராஜகிருஹம் போன்ற வடபுறத்து நகரங்கள் வணிக நோக்கில் வளர்ச்சி அடைந்த போக்கு வைசியர்களின் முக்கியத்துவத்தை அதிகரித்தது. வைசியர்கள் தமது சமூக நிலையை மேலும் உயர்த்திக் கொள்ளும் ஆவலில் சமணம் மற்றும் பௌத்தம் நோக்கித் திரும்பினார்கள்.

 

சமணம்


மகாவீரர்: பிறப்பும் வாழ்வும்

வர்த்தமான மகாவீரர் வைஷாலிக்கு அருகே உள்ள குந்தகிராமத்தில் கி.மு. (பொ..மு). 599இல் பிறந்தார். அவருடைய தாய் திரிசலை, லிச்சாவி இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார். அவர் தனது இளமைக்காலத்தை ஓர் இளவரசராகக் கழித்தார்.

யசோதா என்ற இளவரசியை மணந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகாவீரர் தனது முப்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார். சுமார் பன்னிரண்டாண்டு காலம் அவர் கடுமையான தவம் செய்து பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். துறவற வாழ்வின் பதின்மூன்றாவது ஆண்டில் அவர் உயரிய ஞானத்தை (கைவல்யம்) அடைந்தார். அப்போது முதல் அவர் ஜீனர் (உலகை வென்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார். சமணர்கள், அவர் தீர்த்தங்கரர்களின் நீண்ட பரம்பரையில் வந்தவர் என்றும் அவர்தான் இருபத்துநான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் கருதினார்கள். ரிஷபர் என்பவர்தான் முதல் தீர்த்தங்கரர். பார்சுவநாதர் என்பவர் மகாவீரருக்கு முந்தைய இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர். மகாவீரர் மகதம், விதேகம், அங்கம் ஆகிய நாடுகளில் விரிவாகப் பயணம் செய்து உபதேசம் செய்தார். மகத மன்னர்களான பிம்பிசாரரும், அஜாதசத்ருவும் அவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். 30 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, கி.மு. (பொ..மு).527இல் தமது 72வது வயதில் ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மகாவீரர் காலமானார்.

 

மகாவீரரின் போதனைகள்

மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமணமதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்:

1. நன்னம்பிக்கை - மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.

2. நல்லறிவு - கடவுள் இல்லை, என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வது, படைத்தவன் - இன்றியே உலகம் இயங்கி வருகிறது. அனைத்துப் பொருள்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.

3. நன்னடத்தை - இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது. அவையாவன - 1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது 2.நேர்மையுடன் இருப்பது 3. கருணை 4. உண்மையுடன் இருப்பது 5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது

 

 சமண மதம் பரவுதல்

தமது புதிய கொள்கையைப் பரப்புவதற்காக மகாவீரர் மடாலயங்களை நிறுவினார். வசதிகளை ஒதுக்கிவைத்து, மிகக் கடுமையான எளிய வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த சமணத் துறவிகளை நியமித்தார். வட இந்தியாவில் இந்தப் புதிய மதத்திற்குத் தனநந்தர், சந்திரகுப்த மௌரியர், காரவேலன் போன்ற அரசர்களின் ஆதரவு கிடைத்தது. கி.மு. (பொ..மு). 4ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்திலும் மேற்கு இந்தியாவிலும் இந்த மதத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தது. சமணம் அனைவரிடத்திலும் ஒரு பொது உணர்வை உருவாக்கியது. வர்ணாசிரம முறையை எதிர்த்தது. இதைப் பின்பற்றத் தொடங்கிய மக்கள் அதிகச் செலவு பிடிக்கும் ஆடம்பரச் சடங்குகளையும் பலிகளையும் கைவிட்டனர். உயிருள்ள, உயிரற்ற என அனைத்துப் பொருள்களுக்கும் ஆன்மாவும் உணர்வும் உண்டு; அவற்றால் வலியை உணர முடியும் என்றும் மகாவீரர் போதித்தார்.

உங்களுக்குத் தெரியுமா?


கர்நாடகாவில் உள்ள சிரவண பெலகொலாவில் உள்ள பாகுபலியின் சிலைதான்  (இவர் கோமதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்) இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான (57 அடி) சமணச் சிலை இதுவே ஆகும்.

 

சமணத்தில் பிளவு

காலப்போக்கில் சமணம் திகம்பரர் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்), சுவேதாம்பரர் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்) என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

உங்களுக்குத் தெரியுமா?

சமணக் காஞ்சி:

கி.பி.(பொ.) ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் சமணமும் ஒன்று. பல்லவ மன்னரான மகேந்திர வர்மன் சமண சமயத்தைச் சார்ந்தவர். அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் தாக்கத்தால் அவர் சைவ சமயத்துக்கு மாறினார். தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்திருக்கிறது. அங்கே சமணக் கோயில்களை நீங்கள் காணலாம். அவற்றுள் முக்கியமானது திருப்பருத்திக்குன்றம் சமணக் கோயிலாகும். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

 

சமணத்தின் வீழ்ச்சி

அரச ஆதரவு இன்மை , அதன் கடுமை, பிரிவு மனப்பான்மை, புத்த மதத்தின் வரவு எல்லாம் சேர்ந்து இந்தியாவில் சமணம் வீழ்ச்சியடையக் காரணமாயின.

 

பௌத்தம்


கௌதம புத்தர் - பிறப்பும் வாழ்வும்


கௌதம புத்தர் இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்தார். அவருடைய தந்தை சாக்கியர்கள் எனும் ஒரு சத்திரிய இனக்குழுவின் தலைவராக இருந்த சுத்தோதனார் ஆவார். கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். அவர் சாக்கிய இனத்தவர் என்பதால் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார். அவர் கி.மு. (பொ..மு). 567இல் கபிலவஸ்து (தற்போது நேபாளம்)விற்கு அருகில் உள்ள லும்பினி வனத்தில் பிறந்தார். அவருடைய தாயார் மாயாதேவி (மஹாமாயா) அவர் பிறந்த சில நாட்களிலேயே மரணமடைந்தார். எனவே அவர் தம்முடைய சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். உலக விவகாரங்களை நோக்கி அவரது கவனம் செல்லாதிருக்க, சித்தார்த்தரின் தந்தை அவருக்குப் பதினாறாவது வயதில் யசோதரா என்ற இளவரசியை மணமுடித்து வைத்தார். சித்தார்த்தர் யசோதராவுடன் சிறிது காலம் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு வாழ்ந்தார். அவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.

ஒருநாள் மாலை, சித்தார்த்தர் நகர்வலம் வந்தபோது, உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு முதியவர், வலியால் கதறிக்கொண்டிருந்த ஒரு நோயாளி, இறந்த உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்த உறவினர்கள் ஆகியோரைப் பார்த்தார். இந்தக் காட்சிகளால் சித்தார்த்தர் மனவேதனை அடைந்தார். உலகைத் துறந்த துறவி ஒருவர் எந்த விதமான துயரமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். இந்த நான்கு பெரும் காட்சிகள்' அவரை உலகைத் துறக்கவும், துன்பங்களுக்கான காரணத்தைத் தேடவும் தூண்டின. கி.மு. (பொ..மு). 537இல் தனது முப்பதாவது வயதில் அவர் தனது மனைவி, மகனைத் துறந்து, அரண்மனையை விட்டு வெளியேறி, உண்மையைத் தேடி காட்டிற்குச் சென்றார். அங்குமிங்கும் திரிந்தலைந்து மெய்யறிவை நாடினார். இக்காலத்தில் ஒரு நாள் ஓர் அரச மரத்தின் கீழ் அமர்ந்தார். தொடர்ந்து பல நாட்கள் அமர்ந்திருந்த அவருக்கு மெய்யறிவு கிட்டியது. அவர் மெய்யறிவு அடைந்த அந்த இடம் இன்றைய பீஹாரில் உள்ள புத்த கயா ஆகும். இது 'மஹாபோதி கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

தனக்கு மெய்யறிவு ஏற்பட்டதும், தமது அறிவை மக்களுக்கு அளிக்க புத்தர் முடிவுசெய்தார். புத்த கயாவிலிருந்து வாரணாசி சென்ற அவர், சாரநாத்தில் தனது முதல் போதனையைச் செய்தார். மகதம், கோசல நாடுகளில் போதனை செய்தார். அவருடைய சொந்த குடும்பத்தினர் உட்பட பலர் அவருடைய சீடர்களாகினர். 45 ஆண்டுகள் போதனை செய்த பிறகு, கி.மு. (பொ..மு). 487இல் தமது 80வது வயதில் குஷிநகரத்தில் (உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அருகே) பரிநிர்வாணம் அடைந்தார்.

 

பௌத்தத்தின் போதனைகள்

 (i) நான்குபெரும் உண்மைகள்: 1. உலகம் துன்பமும் துயரமும் நிறைந்தது 2. ஆசையும் ஏக்கமும்தான் இந்தத் துன்பத்திற்குக் காரணம். 3 ஆசையை, ஏக்கத்தை அடக்குவதன் மூலம் இந்த துன்பம் அல்லது வலியைப் போக்கலாம். 4. இதை ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் அல்லது புத்தர் கூறிய உத்தமமான எண்வழிப் பாதை மூலம் அடைய முடியும்.

(ii) நிர்வாணம் அடைதல்: புத்தரின் போதனையின்படி, ஒரு மனிதன் உயர்ந்த ஆனந்தம் அல்லது நிர்வாணத்தை அடைய வேண்டுமெனில், அதனை ஒழுக்கமான வாழ்க்கையின் மூலமும், புத்தரின் எண்வழிப் பாதையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் எட்ட முடியும்.

(iii) உன்னதமான எண்வழிப் பாதை: தூய மனநிலையை அடைவதற்காக புத்தர் கீழ்க்கண்டவற்றைப் போதித்தார். 1. நன்னம்பிக்கை 2. நல்ல ஆர்வம் 3. நற்பேச்சு 4. நற்செயல் 5. நல்வாழ்க்கை முறை 6. நன்முயற்சி 7. நற்சிந்தனை 8. நல்ல தியானம். இந்த எண்வழிப் பாதையைக் கடைப்பிடிப்போர் தூய மனநிலையை அடைவார்கள் என்றார் புத்தர்.

 

பௌத்தம் பரவுதல்

தம்முடைய போதனைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்புவதற்காக புத்தர் பௌத்த சங்கத்தை நிறுவினார். பௌத்தத்தைப் பரப்ப பிட்சுக்களும் (ஆண் துறவிகள்), பிட்சுணிகளும் (பெண் துறவிகள்) நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் எளிமையான துறவு வாழ்க்கை வாழ்ந்தார்கள். பௌத்தம் மத்திய ஆசியா, இலங்கை , திபெத், தென்கிழக்கு ஆசியா, கிழக்கத்திய நாடுகளான சீனா, மங்கோலியா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் பரவியது.

 

பௌத்தத்தில் பிளவு

கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில், பௌத்தத் துறவி நாகார்ஜுனா என்பவர் பௌத்தத்தில் ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பௌத்தம், ஹீனயானம், மஹாயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

ஹீனயானம் (சிறிய பாதை) - இது புத்தர் போதித்த அசல் வடிவம். இந்த வடிவத்தைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை .


இவர்கள் உருவ வழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியான பாலி மொழியையே தொடர்ந்து பயன்படுத்தினார்கள்.

1. மஹாயானம் (பெரிய பாதை) - புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார். போதிசத்துவர் அவருடைய முந்தைய அவதாரமாகக் கருதப்பட்டார். மஹாயானத்தைப் பின்பற்றுவோர் புத்தர், போதிசத்துவரின் சிலைகளை நிறுவி அவர்களது புகழ் பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர். பின்னர் இவர்கள் தம்முடைய மத நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள். இந்த வகை பௌத்தத்தை கனிஷ்கர் ஆதரித்தார்.

 

பௌத்தத்தின் வீழ்ச்சி

கீழ்க்கண்ட காரணங்களால் இந்தியாவில் பௌத்த மதம் வீழ்ச்சி பெற்றது.

1. புத்தம் மக்களின் மொழியில் (பாலி) பிரச்சாரம் செய்யப்பட்டதனால் நன்கு பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்திய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால், சாமானிய மக்களுக்கு அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.

2. பௌத்தம் ஹீனயானம், மஹாயானம் என்று பிளவுண்டதும் மற்றொரு முக்கியமான காரணம். மஹாயானத்தில் உருவ வழிபாடு இருந்ததால், பௌத்தத்திற்கும், இந்து மதத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போனது.

3. குப்தர்களின் காலத்தில் பௌத்தம் அரச ஆதரவை இழந்தது.

4. மேலும் ஹூணர்கள், துருக்கியர்களின் படையெடுப்புகள் புத்தத்தைக் கிட்டத்தட்ட அழித்துவிட்டன.

உங்களுக்குத் தெரியுமா?

புத்தரின் நெருக்கமான சீடராக இருந்தவர் ஆனந்தன். அவர் ஒருமுறை புத்தரிடம், பெண்கள் துறவியாக முடியுமா?' எனக் கேட்டார். அதற்குப் புத்தர், 'பெண்கள் உலக இன்பங்களையும் ஆடம்பரங்களையும் துறந்தால், அவர்களும் ஆண்களைப் போல துறவியாக முடியும்; மெய்யறிவையும் அடைய முடியும்' என்றார்.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Jainism and Buddhism History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : சமணமும், பௌத்தமும் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்