Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அரசுகள் உருவாக்கம்

அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு - அரசுகள் உருவாக்கம் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 11:01 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

அரசுகள் உருவாக்கம்

கி.மு. (பொ.ஆ.மு). 6ஆம் நூற்றாண்டில் அரசாட்சிகள், குழு ஆட்சிகள், குடித்தலைமை ஆட்சிகள் ஆகியவற்றின் உருவாக்கமும், நகரங்களின் உருவாக்கமும் நிகழ்ந்தன.

அரசுகள் உருவாக்கம்

கி.மு. (பொ..மு). 6ஆம் நூற்றாண்டில் அரசாட்சிகள், குழு ஆட்சிகள், குடித்தலைமை ஆட்சிகள் ஆகியவற்றின் உருவாக்கமும், நகரங்களின் உருவாக்கமும் நிகழ்ந்தன. பெரியளவிலான குடித்தலைமை ஆட்சி அமைப்புகளிலிருந்து அரசாட்சிகள் தோன்றின. ரிக் வேதகால பரதர், பாசு, தரிசு, துர்வசு போன்ற பழங்குடி மறைந்து குரு, பாஞ்சாலர் போன்ற புதிய பழங்குடிகள் முன்னணிக்கு வந்தன. புத்த இலக்கியங்கள் பதினாறு மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன. ஜனபதங்களில் மொழி மற்றும் பண்பாட்டில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். ஆனால் மஹாஜனபதங்களில் பல்வேறு சமூக, பண்பாட்டுக் குழுக்கள் வாழ்ந்தன. அரசாட்சிகள் உருவானதும், பல்வேறு நாடுகளிடையே மேலாதிக்கத்திற்கான போராட்டங்கள் அடிக்கடி நடந்தன. எதிரிகளின் மீது பேரரசருக்கு உள்ள அதிகாரத்தைக் காட்ட ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடத்தப்பட்டன. ரிக்வேத பட்டமான 'ராஜன் என்பதற்கு பதிலாக சாம்ராட், ஏக்ராட், விராட், போஜன் போன்ற பட்டங்களை மன்னர்கள் பயன்படுத்தினர்.

 

முடியாட்சி அதிகாரத்தின் வளர்ச்சி

அரசருக்கு முழுமையான அதிகாரம் இருந்தது. ரிக் வேத காலத்தின் சபை இப்போது இல்லை. போர், அமைதி, நிதி கொள்கைகளுக்கு சமிதியின் உதவியை அரசர் நாடினார்.

வட இந்தியா,வடக்கே காபூல்பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரவியிருந்தது. இங்கு காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா , சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று பதினாறு மஹாஜனபதங்கள் தோன்றின.

சபைகள் இருந்தாலும் கூட, அரசரின் அதிகாரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. சதபதப் பிராமணம் 'அரசர் தவறிழைக்காதவர், அனைத்து விதமான தண்டனைகளிலிருந்தும் விலக்குப் பெற்றவர்' என்கிறது. அரச அதிகாரத்தின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பில் பிரதிபலித்தது. இப்போது அரசருக்கு ஆட்சியில் துணைபுரிய வரிவசூல் அதிகாரி (பகதுகர்), தேரோட்டி (சூதா), சூதாட்டக் கண்காணிப்பாளர் (அக்ஷரபா), அரண்மனை காரியஸ்தர் (ஷத்திரி), வேட்டைத் துணைவர் (கோரிகர்த்தனா), அரசவையினர் (பலகோலா), தச்சர் (தக்ஷன்), தேர் செய்பவர் (ரதகார) என்று பலர் இருந்தார்கள். மேலும் கோவில், இராணுவம் தொடர்பான அதிகாரிகளான புரோகிதர் (சேப்லைன்), தளபதி (சேனானி), கிராம அதிகாரி (கிராமணி) போன்றோர் இருந்தனர். வேதகாலத்தின் பிற்பகுதியில் கிராமத்தலைவராகவும் இராணுவ அதிகாரியாகவும் இருந்த கிராமணிதான் கிராமத்தில் அரச அதிகாரம் செலுத்தப்படுவதற்கான இணைப்பாக இருந்தார். அரசரே நீதி வழங்கினார். சமயங்களில் நீதி வழங்கும் பொறுப்பை அரசவை அதிகாரிகளான அத்யக்காக்களிடம் அளித்தார். கிராமங்களில் கிராம்யவாதின் என்ற கிராம நீதிபதியும், சபா என்ற கிராம நீதிமன்றமும் நீதி வழங்கின.குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது.

 

மகதத்தின் உருவாக்கம்

முடியாட்சிகளில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் கண-சங்கங்களின் முறையிலிருந்து மாறுபட்டிருந்தது. அரசாட்சிகள் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசுடன் இயங்கின. அரசியல் அதிகாரம் ஆளும் குடும்பத்திடம் குவிந்திருந்தது. இது மரபுரிமையாக வந்ததால், வம்சங்களாக மாறின. பரீக்ஷத் (அமைச்சர்கள்), சபா (ஆலோசனைக் குழு) போன்ற ஆலோசனை அமைப்புகள் இருந்தன. சபா வரிவசூல்செய்து, தலைநகரில் இருந்தகருவூலத்தில் செலுத்தியது. அங்கிருந்து அது இராணுவச் செலவு, அரசு அதிகாரிகளுக்கான ஊதியம் போன்ற பொதுப் பணிகளுக்கு மறு விநியோகம் செய்யப்பட்டது.

அக்காலத்து இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை சக்திவாய்ந்தவையாக உருவாகின. இந்த அரசாட்சிகளோடு போட்டியிட்ட ஒரே குடியரசு வைசாலியைத் தலைநகரமாகக் கொண்ட விருஜ்ஜி. இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மகதம் வெற்றி பெற்றது. அதன் முதல் முக்கியமான அரசர் பிம்பிசாரர். அவர் வைசாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, அங்கத்தைக் கைப்பற்றினார் (இப்போதைய மேற்கு வங்கம்). இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.

உங்களுக்குத் தெரியுமா?

ஈரானில் அசிரியப் பேரரசும் இந்தியாவில் மகதப் பேரரசும் உருவாக இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம் வழிவகுத்தது.

ஒரு விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றிபெற்றார். அவரது நிர்வாக முறையில் கிராமம்தான் அடிப்படை அலகு. கிராமங்களைத் தவிர வயல்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசுநிலங்கள், காடுகள் (ஆரண்யம், கேந்ரம்,வனம்) ஆகியவையும் இருந்தன. ஒவ்வொரு கிராமமும் கிராமணி என்ற கிராமத்தலைவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. வரிவசூல் செய்து, கருவூலத்தில் செலுத்துவது இவரது பொறுப்பு. சாகுபடி செய்யப்படும் நிலங்களை அளந்து, விளைச்சலின் மதிப்பை அளவிட்டு, கிராமணிக்கு உதவி செய்ய அதிகாரிகள் இருந்தார்கள். நிலவரி (பலி) தான் அரசின் முக்கியமான வருவாய் ஆதாரம். விளைச்சலில் அரசிற்கான பங்கு (பாகம்) சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பிற்கு ஏற்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆறில் ஒரு பங்கு உரிமையானவர் என்று பொருள் படும் ஷட்பாகின் என்ற சொல் அரசரைக் குறிக்கிறது. எனவே அங்கு ஒரு விவசாயப் பொருளாதாரம் இயங்கிவந்தது.

பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு கி.மு. (பொ..மு). 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகச் சொல்லப்படுகிறது. இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் தொடர்ந்தார். மகதத்தின் தலைநகரான இராஜகிருஹம் ஐந்து மலைகளால் சூழப்பட்டிருந்ததால், வெளியிலிருந்து வரும் அபாயங்களிலிருந்து தகுந்த பாதுகாப்பு அளித்தது. அஜாதசத்ரு இந்த ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார். இது உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்ற மையமாக விளங்கியது. பின்னர் மௌரியத் தலைநகர் பாடலிபுத்திரமாக இது மாறியது. அஜாதசத்ரு கி.மு. (பொ..மு). 461இல் இறந்தார். இவருக்குப் பிறகு ஐந்து அரசர்கள் ஆட்சிசெய்தார்கள். எல்லோருமே தந்தையைக் கொன்று ஆட்சிக்கு வரும் அஜாதசத்ருவின் உதாரணத்தைப் பின்பற்றினார்கள். இப்படித் தொடர்ந்து தந்தையைக் கொல்வதால் மனம்வெறுத்த மகத மக்கள் கடைசி அரசரின் ராஜப்பிரதிநிதியான சிசுநாகரை அரசராக நியமித்தார்கள். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த பிறகு சிசுநாக வம்சம் மகாபத்ம நந்தரிடம் ஆட்சியை இழந்தது. இவர்தான் நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர். நந்த வம்சம்தான் வட இந்தியாவின் முதல் சத்திரியரல்லாத வம்சமாகும்.

Tags : Intellectual Awakening and Socio-Political Changes | History அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Rise of Kingdoms Intellectual Awakening and Socio-Political Changes | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : அரசுகள் உருவாக்கம் - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்