Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மௌரியப் பேரரசு - அரசும் சமூகமும்

வரலாறு - மௌரியப் பேரரசு - அரசும் சமூகமும் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 11:05 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

மௌரியப் பேரரசு - அரசும் சமூகமும்

சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்று அறியப்பட்ட விஷ்ணுகுப்தருக்கு நந்த அரசரோடு விரோதம் ஏற்பட்டதும், அவர் நந்த அரசரை ஆட்சியிலிருந்து அகற்றுவதாகச் சபதமேற்றார்.

மௌரியப் பேரரசு - அரசும் சமூகமும்

 

மௌரிய அரசர்கள்

சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்று அறியப்பட்ட விஷ்ணுகுப்தருக்கு நந்த அரசரோடு விரோதம் ஏற்பட்டதும், அவர் நந்த அரசரை ஆட்சியிலிருந்து அகற்றுவதாகச் சபதமேற்றார். மாசிடோனிய அலெக்சாண்டரின் வீரதீரத்தினால் கவரப்பட்டதாக நம்பப்படும் சந்திரகுப்தர் தமக்கான ஒரு அரசை அமைக்கும் நோக்கில் படைகளைத் திரட்டி நல்வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார்.

அலெக்ஸாண்டர் மரணமடைந்ததைக் கேள்விப்பட்ட சந்திரகுப்தர் மக்களைத் தூண்டிவிட்டு, மக்கள் உதவியோடு அலெக்ஸாண்டர் தட்சசீலத்தில் விட்டுச் சென்றிருந்த படையை விரட்டினார். பிறகு அவர், தமது கூட்டாளிகளுடன், பாடலிபுத்திரத்திற்கு அணிவகுத்து வந்து, கி.மு. (பொ ..மு). 321 இல் நந்த அரசரைத் தோற்கடித்தார். இவ்வாறாக மௌரிய வம்சம் உருவானது


சந்திர குப்தரின் ஆட்சியின் போது, ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரைக்கும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலெக்ஸாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடர் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது சந்திரகுப்தரிடம் தோற்றுப்போனார். செல்யூகஸின் தூதரான மெகஸ்தனிஸ் இந்தியாவிலேயே தங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது இண்டிகா என்ற நூல் மௌரியர் காலத்து அரசியலையும் சமூகத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது.

கங்கைச் சமவெளியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிறகு, அலெக்ஸாண்டரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சந்திரகுப்தர், தனது கவனத்தை வடமேற்குப் பக்கம் திருப்பினார். இன்றைய ஆப்கனிஸ்தான், பலுசிஸ்தான், மாக்ரான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு எந்த எதிர்ப்புமின்றிச் சரணடைந்தது. அதன்பிறகு சந்திரகுப்தர் மத்திய இந்தியாவிற்கு நகர்ந்தார். தனது வாழ்வின் இறுதிக்காலத்தில், தீவிர சமணராக மாறிவிட்ட அவர், தனது மகன் பிந்துசாரருக்காகப் பதவி விலகினார் என்று சமண இலக்கியங்கள் கூறுகின்றன.

பிந்துசாரர் தனது ஆட்சியில் மௌரிய அரசை கர்நாடகம் வரை விரிவுபடுத்தினார். அவரது மறைவின்போது இந்தியாவின் பெரும்பகுதி மௌரிய ஆட்சியின் கீழ் இருந்தது. கி.மு. (பொ..மு). 268இல் பிந்துசாரருக்குப் பின் அசோகர் அரசரானார்.


தெற்கில் எஞ்சியுள்ள பகுதிகளையும் தனது பேரரசில் இணைக்கும் ஆசையால் தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் அவர் கலிங்கத்தின் மீது படையெடுத்தார். கலிங்க மக்கள் வீரத்தோடு போர் புரிந்தனர். ஆனால் பெரும் உயிர்ப்பலிகளுக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்தப் போரும் படுகொலைகளும் அசோகரைப் பெரிதும் பாதித்தன. அவர் போரிடுவதை விட்டுவிட முடிவு செய்தார். புத்தத் துறவி உபகுப்தரைச் சந்தித்த பின்னர், அசோகர் தீவிர புத்தப் பற்றாளராக மாறி, தனது புத்த தம்மத்தைப் பரப்ப ஆரம்பித்தார். தன்னையே வெற்றி கொள்வதும், மனிதர்களின் மனதை தம்மத்தால் (தம்மம் - பாலி; தர்மம் - சமஸ்கிருதம்) வெற்றி கொள்வதும்தான் உண்மையான வெற்றி என்று அவர் அறிவித்தார். அவை பாறைகளில் பொறிக்கப்பட்டன.

மொத்தம் உள்ள 33 கல்வெட்டுகளில் 14 முக்கியமான பாறைக் கல்வெட்டுகள், 7 தூண் பிரகடனங்கள், 2 கலிங்கக் கல்வெட்டுகள். இவை போக, சிறு பாறைக் கல்வெட்டுகளும், தூண் பிரகடனங்களும் உண்டு . மௌரியப் பேரரசு பற்றி, குறிப்பாக அசோகரின் தம்ம ஆட்சியைப் பற்றி அறிய இவை மிகவும் நம்பகமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

தனது கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் அவர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைப் பார்த்துத்தாம் அடைந்த மன வேதனையை அசோகர் பதிவு செய்துள்ளார். மற்றொரு கல்வெட்டில், தாம் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒருபங்கைக் கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


உயிர்களைக் காக்கும் அசோகரின்  பெரு விருப்பம் விலங்குகளைக் காக்கும் பொருட்டும் விரிவடைந்தது. விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார். அசோகர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் உயிர் துறந்தார்.

நான்கு சிங்கங்களைக் கொண்ட நமது தேசியச் சின்னம் சாரநாத்தில் உள்ள அசோகர் தூணை பிரதிபலிக்கும் விதமாகவே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

மௌரிய ஆட்சி நிர்வாகம்

தொடக்க ஆண்டுகளில் மௌரிய அரசு எடுத்த சில நடவடிக்கைகள் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவின. ஒரு பெரிய நிலையான ராணுவத்தை அமைக்கவும், பரந்த நிர்வாக அமைப்பை உருவாக்கவும் வரிகளை உயர்த்தியது.

மௌரியர்கள் செயல்திறம்மிக்க அரசாட்சி முறையை உருவாக்கினர். நிர்வாகத்தின் தலைவர் அரசர். அவருக்கு அமைச்சர் குழு உதவிபுரிந்தது. மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகப் பணியாற்றினார்கள். வருவாய்க்கும் செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி சமஹர்த்தா என்றழைக்கப்பட்டார். பேரரசு நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றை ஆளுநர்கள் ஆட்சி செய்தார்கள். பெரும்பாலும் இளவரசர்களே ஆளுநராக செயல்பட்டனர் .

மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகா என்பவரின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஐந்து முதல் பத்து கிராமங்களின் நிர்வாகியாக கோபர் என்ற பட்டத்துடன் ஒருவர் நியமிக்கப்பட்டார். நகர நிர்வாகம் நகரகா என்பவர் பொறுப்பில் இருந்தது. இவரது தலைமையில் தலா ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆறு குழுக்கள் தமது கடமைகளைச் செய்தன.

உங்களுக்குத் தெரியுமா?

சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதினார். இது மௌரிய ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

 

அவர்கள் மேற்கொண்ட பணிகள்:

i) வெளிநாட்டினரைக் கவனித்துக் கொள்ளல்,

ii) குடிமக்களின் பிறப்பு, இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்தல்,

iii) வணிகத்தைக் கவனித்துக் கொள்ளல்,

iv) பல்வேறு உற்பத்தித் தொழில்களைக் கவனித்துக் கொள்ளல்,

 v) சுங்க, கலால் வரி வசூலித்தல்

நகர நிர்வாகத்தைப் போலவே ராணுவத்துறையும் 30 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது. இக்குழுவில் தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு துணைக்குழுக்கள் இருந்தன. கிராம மட்டத்தில், எல்லைகளைப் பாதுகாப்பது, நிலம் குறித்த ஆவணங்களைப் பராமரிப்பது, மக்கள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது போன்ற பணிகளைச் செய்ய கிராமணி என்ற அதிகாரி இருந்தார். அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கண்காணிக்க சிறந்த உளவுத் துறை இயங்கியது. எல்லா முக்கியமான ஊர்களிலும் நகரங்களிலும் நீதி வழங்க முறையான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருந்தது.

புதிய குடியிருப்புகளை உண்டாக்குதல், மக்களுக்கு நிலம் அளித்து, விவசாயிகளாக வாழ ஊக்குவித்தல், பாசன வசதிகளை ஏற்படுத்துதல், நீர் பகிர்வைக் கட்டுப்படுத்துதல் என்று கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு உபரி வருவாயைப் பயன்படுத்தியது. வேளாண்மை , சுரங்கம், தொழில், வணிகம் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நிலத்தில் தனியார் சொத்துரிமை உருவாவதை அரசு விரும்பவில்லை . நிலம் விற்பதை அரசு தடை செய்தது. மௌரிய அரசு நகர மேம்பாட்டிற்கு ஊக்கமளித்தது. அது ஈரான், மெசபடோமியா, வடசீனத்தின் அரசுகளுக்கு நிலவழியாக வணிகப் பெருவழிகளை உருவாக்கியது. அர்த்தசாஸ்திரம், காசி, வங்கம் (வங்காளம்), காமரூபம் (அஸ்ஸாம்), மதுரை ஆகிய இடங்களைத் துணி உற்பத்தி மையங்கள் என்று குறிப்பிடுகிறது. வட இந்தியாவின்பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்கள் தொலைதூரத்தில் இருக்கும் தென்னிந்தியா வரை பரவியிருந்தது. இது மௌரியர் காலத்து வணிகம் தெற்குவரை பரவியிருந்ததைக் காட்டுகிறது. நகரமயமாக்கத்திற்கு வணிகம் பெரிய அளவில் உதவியது. கௌசாம்பி, பிட்டா, வைசாலி, ராஜகிருகம் போன்ற புதிய நகரங்கள் தோஆப் பகுதியில் உருவாகின.

 

கல்வி மையங்கள்

மடங்களும் கோவில்களும் கல்வி கற்பிக்கும் பணியைச் செய்தன. மிகப் பெரிய மடாலயமான நாளந்தா மகதர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டது. கல்வி மையங்களில் புத்த, வேத இலக்கியங்கள், தர்க்கம், இலக்கணம், மருத்துவம், தத்துவம், வானவியல் ஆகியவை கற்றுத் தரப்பட்டன. போர்க்கலையும் கற்றுத்தரப்பட்டது.


காலப்போக்கில் நாளந்தா அக்காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி மையமாகத் திகழ்ந்துள்ளது. அதன் நிர்வாகச் செலவுகளுக்காக 100 கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு இலவசத் தங்குமிடமும் உணவும் தரப்பட்டன.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Mauryan Empire: State and Society History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : மௌரியப் பேரரசு - அரசும் சமூகமும் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்