Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பிற அவைதீக பிரிவுகள்

வரலாறு - பிற அவைதீக பிரிவுகள் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes

   Posted On :  04.09.2023 10:56 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்

பிற அவைதீக பிரிவுகள்

பௌத்தமும், சமணமும் தோன்றிய காலத்தில் ஆசிவகம் என்றொரு பிரிவும் தோன்றியது.

பிற அவைதீக பிரிவுகள்

 

ஆசிவகம்

பௌத்தமும், சமணமும் தோன்றிய காலத்தில் ஆசிவகம் என்றொரு பிரிவும் தோன்றியது. அதைத் தோற்றுவித்தவர் மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்) என்பவர். இவர் மகாவீரரின் நண்பர். சிறிது காலத்திற்கு இருவரும் சேர்ந்து இருந்திருக்கிறார்கள். பின்னர் கோசலர் பிரிந்து ஆசிவகப் பிரிவைத் தோற்றுவித்தார். நாத்திகப் பிரிவான ஆசிவகம் மனிதர்களின் நிலையை அவர்களுடைய பழைய வினைகள்தான் தீர்மானிக்கின்றன என்று கூறும் வினைப்பயன் (கர்மம்) என்ற கோட்பாட்டை நிராகரித்தது. கோசலர் தர்மமோ, பக்தியோ எந்தவிதத்திலும் மனிதர்களின் இறுதி நிலையைத் தீர்மானிக்காது என்று வாதிட்டார்.

ஆசிவகர்கள் தென்னிந்தியாவில் சிறு எண்ணிக்கையில் இருந்தார்கள். சோழர்கள் காலத்தில் அவர்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்பட்டது. புத்தர்களின் இலக்கியமான மணிமேகலை, சமணர்களின் இலக்கிய நூலான நீலகேசி, சைவ நூலான சிவஞானசித்தியார் ஆகிய தமிழ் நூல்களில் ஆசிவகத் தத்துவத்தைப் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு உள்ளன.

 

கண-சங்கங்கள்

மகாவீரர், புத்தர் ஆகியோர் காலத்தில் முடியாட்சிகள், கண-சங்கங்கள் எனப்படும் குலக்குழு ஆட்சி என்று இரு வேறுபட்ட அரசு வடிவங்கள் இருந்தன. வேத சடங்குகளைச் செய்ய மறுத்தல், வர்ணாசிரம முறையை எதிர்த்தல் ஆகியவை மூலம் கண-சங்கங்கள் முடியாட்சிகளுக்கு ஓர் அரசியல் மாற்றைத் தந்தன. சாக்கியர்கள், கோலியர்கள், மல்லர்கள் போல் கண-சங்கங்கள் ஒரே ஓர் குலத்தால் ஆனவையாகவும் இருந்தன. அதே நேரத்தில் விரிஜ்ஜிகள், விருஷ்ணிகள் (இது வைசாலியில் இருந்த ஒரு கூட்டமைப்பு) போன்று பல குலங்களின் கூட்டமைப்பாகவும் இருந்தன. கணசங்கங்களில் சத்திரிய ராஜகுலம் என்ற ஆளும் குடும்பங்கள், அடிமைகளும் தொழிலாளர்களும் அடங்கிய தாஸ கர்மகாரர்கள் என இருவகையான சமூகப் படிநிலைகள்தான் இருந்தன.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes : Other Heterodox Sect : Ajivika History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் : பிற அவைதீக பிரிவுகள் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்