வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - ஒரு கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி வரைதல் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
ஒரு கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி வரைதல்
ஆறாம் வகுப்பில், குத்துக் கோடுகளை வரைதலைக் கற்றுள்ளோம். படம் 5.24 ஐ நோக்குக.
படம் 5.24 இல் சில செங்குத்துக் கோடுகள் உள்ளன. இரு வகைகளிலும் செங்குத்துக்கோடு l ஆனது கோட்டுத்துண்டினை இரு சமபாகங்களாகப் பிரிக்கின்றது. இந்த l என்ற கோடானது கொடுக்கப்பட்ட கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி எனப்படும். ஆகவே, ஒரு கோட்டுத்துண்டினை இருசமபாகங்களாகப் பிரிக்கும் செங்குத்துக்கோடானது, அக்கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி எனப்படும்.
இப்போது, கொடுக்கப்பட்ட கோட்டுத்துண்டிற்கு, செங்குத்து இரு சமவெட்டி வரையும் முறையைக் கற்போம்.
எடுத்துக்காட்டு 5.11
6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
படி 1: ஒரு நேர்கோட்டை வரைக, அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 6 செ.மீ என்றவாறு குறிக்க.
படி 2: Aவை மையாகக் கொண்டு, AB இன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை AB இக்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3 : B ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்டவிற்களைப் படி-2இல் வரைந்த வட்டவிற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4 : C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும். CD ஆனது AB ஐ வெட்டும்புள்ளியை O எனக் குறிக்க.
CD ஆனது AB இன் செங்குத்து இரு சமவெட்டி ஆகும்.
கோணம் ∠AOC ஐ அளவீடு செய்க. மேலும் OA மற்றும் OB இன் நீளங்களை அளந்து பார்க்கவும். நீங்கள் அறிவது என்ன?
சிந்திக்க
வட்டவில்லின் ஆரம் AB இன் நீளத்தில் பாதியை விடக் குறைவாக இருந்தால் என்ன நிகழும்?