வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்
(i) 60° அளவுடைய கோணத்தை வரைதல்
படி 1: ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : A ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.
படி 3: அதே அளவு ஆரத்துடன், B ஐ மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க.
படி 4 : AC ஐ இணைக்க. ∠BAC என்பது 60° அளவுடைய கோணமாகும்.
(ii) 120° அளவுடைய கோணத்தை வரைதல்
120° கோண அளவில், இரண்டு 60° கோண அளவுகள் உள்ளதை நாம் அறிவோம். எனவே 120° கோணத்தை அமைப்பதற்கு 60° கோணத்தை இரு முறை தொடர்ந்து அமைத்தல் போதுமானதாகும்.
படி 1: ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 : A ஐ மையமாகக் கொண்டு வசதியான ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.
படி 3: ஆரத்தின் அளவை மாற்றாமல் Bயை மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க.
படி 4 : மீண்டும் அதே அளவு ஆரத்துடன், C ஐ மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு (படத்தில் உள்ளவாறு) மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க.
படி 5: AD ஐ இணை. ∠BAD என்பதே தேவையான 120° அளவுடைய கோணமாகும்.
(iii) 30° அளவுடைய கோணத்தை வரைதல்
60° இல் பாதி அளவு 30° என்பதால் 60° கோணத்தைக் கோண இருசமவெட்டியைப் பயன்படுத்திப் பிரிப்பதன் மூலம் 30° கோணத்தை வரை இயலும்.
படி 1: 60° கோணத்தை அமைக்கவும் (60° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக).
படி 2 : B ஐ மையமாகக்கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை ∠BAC இன் உட்பகுதியில் வரைக.
படி 3 : அதே அளவு ஆரத்துடன், C ஐ மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க.
படி 4 : AD ஐ இணைக்க. ∠BAD ஆனது தேவையான 30° அளவுடைய கோணமாகும். (∠DAC இன் அளவைக் குறித்துச் சிந்திக்க).
(iv) 90° அளவுடைய கோணத்தை வரைதல்
படி 1: 120° அளவுடைய கோணத்தை அமைக்கவும் (120° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக).
படி 2 : C ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு அளவுடைய ஆரத்தில் ∠CAD இன் உட்பகுதியில் சிறு வட்டவில் ஒன்றை வரைக.
படி 3 : அதே அளவு ஆரத்துடன் D ஐ மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை E எனக் குறிக்க.
படி 4: AE ஐ இணைக்க. ∠BAD = 90° அளவுடைய கோணமாகும்.