Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்: பாடச்சுருக்கம்
   Posted On :  16.10.2022 08:32 pm

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்: பாடச்சுருக்கம்

ஒரு மூடிய கம்பிச்சுருளுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது.அதனால் சுற்றில் ஒரு மின்னோட்டம் பாய்கிறது. இந்த நிகழ்வு மின்காந்தத்தூண்டல் எனப்படும்.

பாடச்சுருக்கம்

• ஒரு மூடிய கம்பிச்சுருளுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது.அதனால் சுற்றில் ஒரு மின்னோட்டம் பாய்கிறது. இந்த நிகழ்வு மின்காந்தத்தூண்டல் எனப்படும்.

• பாரடேயின் முதல் விதிப்படி, ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் சுற்றில் ஒரு மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. காந்தப்பாயம் மாறுகின்ற வரை மின்னியக்கு விசை சுற்றில் இருக்கும்.

• பாரடேயின் இரண்டாம் விதிப்படி, ஒரு மூடிய சுற்றில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பு, நேரத்தைப் பொறுத்து சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு சமமாகும்.

• லென்ஸ் விதியின்படி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையானது அதன் உருவாக்கத்திற்கு காரணமானதை எப்போதும் எதிர்க்கும் விதத்தில் அமையும்.

• லென்ஸ் விதியானது ஆற்றல் மாறா விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.

• பிளமிங் வலக்கை விதியின்படி, காந்தப்புலத்தின் திசையை சுட்டுவிரலும், கடத்தி இயங்கும் திசையை பெருவிரலும் குறித்தால், தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை நடுவிரல் குறிக்கும்.

• தூண்டப்பட்ட மின்னோட்டங்கள் ஒரு மைய வட்டப் பாதைகளில் பாய்வது சுழல் மின்னோட்டங்கள் அல்லது போகால்ட் மின்னோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

• மின்தூண்டி என்பது அதன் வழியே மின்னோட்டம் பாயும் போது காந்தப்புலத்தில் ஆற்றலை சேமிக்க உதவும் ஒரு கருவியாகும்.

• கம்பிச் சுருளோடு தொடர்புடைய பாயம் மாறினால் அதே சுருளில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இந்த நிகழ்வு தன் மின்தூண்டல் எனப்படுகிறது. தூண்டப்பட்ட மின்னியக்கு விசை தன்மின் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எனப்படும்.

• ஒரு சுருளின் வழியே பாயும் மின்னோட்டம் நேரத்தைப் பொருத்து மாறினால் அருகில் உள்ள சுற்றில் மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இந்த நிகழ்வு பரிமாற்று மின்தூண்டல் எனப்படுகிறது. தூண்டப்பட்ட மின்னியக்கு விசை பரிமாற்று மின் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை எனப்படுகிறது.

• AC மின்னியற்றி அல்லது மின்னாக்கி ஒரு ஆற்றல் மாற்றும் கருவி ஆகும். இது கம்பிச்சுருள் அல்லது புலக்காந்தத்தை சுழற்றப் பயன்படும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

• சில AC மின்னியற்றிகளில் மூன்று தனித்தனி கம்பிச்சுருள்கள் உள்ளன. அவை மூன்று தனி மின்னியக்கு விசைகளைத் தரும். எனவே அவை மூன்று - கட்ட AC மின்னியற்றிகள் எனப்படும்.

• மின் மாற்றி என்பது AC மின் திறனை ஒரு சுற்றிலிருந்து மற்றொன்றிற்கு அதன் அதிர்வெண் மாறாமல் மாற்றப் பயன்படும் ஒரு நிலையான கருவியாகும்.

• மின் மாற்றியின் பயனுறுதிறன் பயனுள்ள வெளியீடு திறனுக்கும் உள்ளீடு திறனுக்கும் உள்ள தகவு என வரையறுக்கப்படுகிறது.

• ஒரு மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்பது சீரான நேர இடைவெளியில் அதன் முனைப்புத்தன்மையை மாறுகின்ற மின்னழுத்த வேறுபாடு ஆகும் மற்றும் அதற்கேற்ப விளையும் மாறுதிசை மின்னோட்டமும் திசையும் மாறுகிறது.

• மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு ஆனது நேர் அல்லது எதிர் அரைசுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி என வரையறுக்கப்படுகிறது.

• ஒரு மாறுதிசைமின்னோட்டத்தின் இருமடிச் சராசரியின் இருமடிமூல மதிப்பு அல்லது பயனுறு மதிப்பு ஆனது ஒரு சுற்றில் அனைத்து மின்னோட்டங்களின் இருமடிகளின் சராசரியின் இருமடிமூலம் என வரையறுக்கப்படுகிறது.

• ஒரு சைன் வடிவ மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு (அல்லது மின்னோட்டம்) ஆனது தொடக்க புள்ளியைப் பொருத்து மாறா கோணத் திசைவேகத்தில் இடஞ்சுழியாக சுழலும் ஒரு வெக்டரால் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சுழலும் வெக்டர் கட்ட வெக்டர் எனப்படுகிறது.

• செலுத்தப்பட்ட மாறுதிசை மின்மூலத்தின் அதிர்வெண் RLC சுற்றின் இயல்பு அதிர்வெண்ணிற்கு சமமானால் சுற்றில் மின்னோட்டம் அதன் பெரும் மதிப்பைப் பெறுகிறது. பிறகு சுற்றானது மின் ஒத்ததிர்வில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

• தொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாட்டுப் பெருக்கம் Q - காரணி எனப்படுகிறது.

• சுற்றின் திறன் என்பது அச்சுற்றில் மின் ஆற்றல் நுகரப்படும் வீதம் என வரையறுக்கப்படுகிறது.

• ஒரு LC சுற்றிற்கு ஆற்றல் அளிக்கப்படும் போதெல்லாம் ஒரு வரையறுக்கப்பட்ட அதிர்வெண் கொண்ட மின் அலைவுகள் உருவாக்கப்படுகின்றன. இந்த அலைவுகள் LC அலைவுகள் எனப்படுகிறது.

• LC அலைவுகளின் போது, மொத்த ஆற்றல் மாறாமல் உள்ளது. அதன் பொருள் LC அலைவுகளானது ஆற்றல் மாறா விதிப்படி நடைபெறுகிறது என்பதாகும்.



12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Electromagnetic Induction and Alternating Current: Summary in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்: பாடச்சுருக்கம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்