சுற்றுச்சூழல் பொருளியல் - சுற்றுச்சூழல் தரம் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
சுற்றுச்சூழல் தரம் (Environmental Quality)
சுற்றுச்சூழல் தரம் என்பது சுற்றுச்சூழல் பண்புகளின் தொகுப்பாகும். இன்னும் தெளிவாக கூறுவதென்றால் அப் பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டெண் (Index Number) ஆகும். இத்தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம். மனிதன் மற்றும் இதர உயிரினங்களின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுச்சூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிக கவனத்துடன் கையாளப்படவேண்டிய ஒன்றாகிறது.
முதலாளித்துவ செயல்முறைகளினால் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது. சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப் பொருளாகும். அப்பொருளின் தன்மைகளாக நாம் பின்வருவனற்றை குறிப்பிடலாம் : இப்பொருள் அனைவராலும் நுகரப்படும். எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அதைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருவர் அப்பொருளை பயன்படுத்துவதால், மற்றவர்களுக்கு கிடைக்கும் அளவு குறைந்து போகாது. மேலும், அவற்றை பயன்படுத்துவதற்கான இறுதிநிலைச் செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன. இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை .
புற விளைவுகளும் (Externalities) சுற்றுச்சூழலும்
அறிமுகம்
புற விளைவு அல்லது மிகை வழிதல் விளைவு (Spill Over Effect) என்பது ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பிலான மற்றொருவருவடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தியினை பாதகமாக பாதிப்பதாகும் பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி அல்லது நுகர்வு செய்யும் போது சரியான இழப்பீடு வழங்கப்படாத மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளையே புற விளைவுகள் என்கிறோம்
1. புற விளைவுகளின் பொருள்
புற விளைவுகள் அங்காடிகளுக்கு வெளியே நடைபெறுகின்றது. உற்பத்தி அல்லது நுகர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. எனவே இவைகள் சிதறிய விளைவுகள் (Spill Over effects) எனப்படுகின்றது.
புற விளைவுகள் - இலக்கணம்
“தனிநபர்களின் நுகர்ச்சி அல்லது உற்பத்தி ஆகிய பொருளாதார நடடிவக்கைகள் காரணமாக, அந்நடவடிக்கைளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெறாத சமுதாயத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்படும் செலவு அல்லது பயன் புறவிளைவுகள் எனப்படும்".
புறவிளைவுகள் நன்மை தருவதாகவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ அமையலாம்.
நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு (Positive Consumption Externality):
ஒருவருடைய நுகர்ச்சிச் சார்பு மற்றொருவருடைய நுகர்ச்சிச் சார்பில் சாதகமான விளைவினை ஏற்படுத்துவது அகும். உதாரணம்: ஒரு நகரில் உள்ள சிலர் ஏற்பாடு செய்கின்ற தனியார் பாதுகாப்பு அப்பகுதியில் குடியிருக்கும் மற்றவர்களுக்கும் செலவில்லாமல் பாதுகாப்பை ஏற்படுத்துகின்றது.
எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு (Negative Consumption Externality):
ஒருவருடைய நுகர்ச்சி சார்பு மற்றொருவருடைய நுகர்ச்சி சார்பில் விளைவினை ஏற்படுத்துவது எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு என்கிறோம். ஒருவர் தனது வீட்டில் ஒலிபெருக்கி மூலம் பாடலை அதிக சத்தத்தில் பாடவிடுகிறார். அது அவருக்கு பயன்பாட்டினை தருகிறது. ஆனால், அருகிலுள்ள வீட்டில் உள்ள மற்றொருவருக்கு அந்த ஒலி மாசு தொந்திரவினை ஏற்படுத்துகிறது எனில், அது எதிர்மறை நுகர்ச்சி புறவிளைவு எனப்படுகிறது. அதனால் இரண்டாமவருக்கு பயன்பாட்டு இழப்பு ஏற்படுகிறது.
நேர்மறை உற்பத்தி புறவிளைவு (Positive Production Externality):
ஒருவருடைய உற்பத்திச் சார்பு மற்றொருவருடைய உற்பத்தி சார்பில் சாதகமான விளைவினை ஏற்படுத்தினால் அத நேர்மறை உற்பத்தி புறவிளைவு என்கிறோம். உதாரணத்திற்கு, ஒருவர் தேனீ வளர்ப்புத் தொழிலை செய்து வருமான ஈட்டி வருகிறார். அருகிலுள்ள மற்றொரு விவசாயி தனது பண்ணையில் தேனீக்களினால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கையின் காரணமாக இரண்டாமவருக்கு அதிகமான பழவிளைச்சலையும், வருமானத்தையும் பெறுவது நேர்மறை உற்பத்தி புறவிளைவு என்கிறோம்.
எதிர்மறை உற்பத்தி புறவிளைவு (Negative Production Externality):
எதிர்மறை உற்பத்தி புறவிளைவிற்கான உதாரணங்கள்
எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகள் தொழிற்சாலைகளால் ஏற்படுத்தப்படும் மாசுகளினால் மற்றவர்களுக்கு ஏற்படும் செலவைக் குறிக்கும்.
இத்தகைய செலவுகள் குறிப்பிடத்தக்கவையா? என்பவற்றை எதிர்மறை உற்பத்தி புறவிளைவுகளைப் பற்றி ஆராய்கின்றபோது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவருடைய உற்பத்திச் சார்பு, அடுத்தவருடைய உற்பத்திச் சார்பினில் பாதகமான விளைவினை ஏற்படுத்தினால் அது எதிர்மறை புறவிளைவு என்கிறோம். உதாரணத்திற்கு ஒரு சிமெண்ட் தொழிற்சாலையிலிந்து வெளியேறும் காற்றுமாசுபாட்டினால், அருகிலுள்ள விவசாயியின் நெல்விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இது எதிர்மறை உற்பத்தி புறவிளைவு எனப்படுகிறது.