பொருள், இலக்கணங்கள் - சுற்றுச்சூழல் பொருளியல் - நீடித்த நிலையான மேம்பாடு | 12th Economics : Chapter 10 : Environmental Economics
நீடித்த நிலையான மேம்பாடு: (Sustainable Development)
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி, எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்துவிட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும். மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, சுகாதாரம், உடல்நலம், கல்வி போன்றவற்றையும் அளிக்க வேண்டும். தற்பொழுதுள்ள தலைமுறை, முன்னோர் விட்டுச்சென்ற இயற்கை வளங்களை முழுவதுமாகப் பயன்படுத்தாமல் பின்வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும். முன் சந்ததிக்கு கிடைத்த அனைத்தும் அதே செலவில், அதே சிரமத்தில் அதே அளவில் பின் சந்ததிக்கும் கிடைத்தால் அது தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவம் ஆகும்.
இலக்கணங்கள்:
"இயற்கை வளத்தின் அளவு எக்காலத்திலும் குறையாமல் இருக்க வேண்டும்" பியர்ஸ், மார்கண்டேயா, மற்றும் பார்பியர் 1989.
"வருங்காலத் தலைமுறையினர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் தற்பொழுது உள்ள மக்களின் தேவையை நிறைவேற்றுதலே நீடித்த நிலையான மேம்பாடு"
சுற்றுப்புறச் சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான உலக அமைப்பு 1987. (World Commission on Environment and Development 1987)
1. நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals)
பொருளாதார வளர்ச்சி, சமூகச் சேர்ப்பு மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கி குறிக்கோள்களையும் சேர்ந்து சாதிப்பதுதான் நீடித்த நிலையான வளர்ச்சியாகும். 2030க்குள் 17 குறிக்கோள்களைச் சாதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (UNO) மூன்று இணைந்துபோகிற கொள்கைகளை நிறுவியிருக்கிறது. அவை உலகப்பொதுமை (Universality) ஒருங்கிணைப்பு (Integration) மாற்றம் (Transformation)
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்
2. பட்டினியை முடிவுக்குக் கொண்டுவருதல்; உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்தினை உயர்த்துதல், நீடித்த நிலையான விவசாயத்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல்.
3. அனைத்து வயது மனிதர்களின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்
4. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
5. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
6. குடிநீரும் சுகாதாரமும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. சுத்தமான, நீடித்த நிலையான, எளிதில் பெறக்கூடிய சக்தியினை (எரிபொருள்: Energy) அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
8. அனைவருக்கும் தரமான வேலை வாய்ப்பினையும் நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியினையும் வழங்குதல்.
9. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
10.நாடுகளுக்குள் ளேயும் நாடுகளுக்கிடையேயும் உள்ள சமமின்மைகளை அகற்றுதல்.
11. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
12. நீடித்த நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வினை உறுதிப்படுத்துதல்.
13. தட்பவெட்ப மாற்றங்களையும் அவற்றின் தாக்கங்களையும் குறைத்தல்.
14. சமுத்திரங்கள், கடல்கள், கடல் வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல்.
15. காடுகளைப் பராமரித்தல், நிலம் அழிவதைத் தடுத்தல், நிலத்தின் தன்மை குறைவதைக் கட்டுப்படுத்தி உயர்த்துதல், உயிர்பன்முகத் தன்மை இழப்பை (Loss of Biodiversity) தடுத்து நிறுத்துதல்.
16. அமைதியான, சமூக நீதியுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல்.
17 நீடித்த நிலையான வளர்ச்சிக்காக உலக ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல்.