சுற்றுச்சூழல் பொருளியல் - புவி வெப்பமயமாதல் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
புவி வெப்பமயமாதல்
நிலம் மற்றும் நீர் உள்ளடக்கிய பூமி மற்றும் வளிமண்டலத்தில் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலையையே புவி வெப்பமயமதால் என்கிறோம். உலகின் சராசரி வெப்பநிலை கடநத் 100 ஆண்டுகளில் 0.75°C (1.4°F) கூடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில் 3ல் 2 பங்கு 1975க்கு பின் வந்த குறுகிய காலத்திலேயே கூடியதாகும். கரியமில வாயு, மீத்தேன், குளோரோபுளோரோ கார்பன் (Chloro fluoro Carbon) நைட்ரஸ் ஆக்ஸைடு (Nitrous Oxide) போன்ற பசுமைக் குடில் வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் புவியின் வெப்பம் அதிகரிக்கின்றது. இதை பசுமைக்குடில் விளைவு என்பர். இவைகளில் கரியமில வாயு புவி வெப்பம் அதிகரிக்க 50% காரணமாக உள்ளது. உயிரிப்பொருட்கள், விறகு ஆகியவற்றை எரிப்பதாலும் காடுகள், மரங்களை அழிப்பதாலும் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. கடந்த காலங்களில் புவி வெப்பமடைதல் இயற்கைக் காரணங்களால் நிகழ்ந்தது. ஆனால் தற்போது இது மனித நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படுகின்றது.
புவி வெப்பமடைதல் காரணமாக விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு போன்றவை அதிக அளவில் பாதிக்கப்படுகின்றது. குறைந்த மழையளவு, அதிக வெப்பம் காரணமாக அதிக பூச்சி தாக்குதல், களைகள் வளர்தல் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகின்றது. அதிக வெப்பம் காரணமாக நோய் பரப்பும் கொசு போன்ற உயிரினங்கள் பெருகி மலேரியா, டெங்கு, என்செபாலிட்டிஸ் (Encephalitis) மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்புகின்றது.
புவி வெப்பத்தின் சராசரி வெப்ப நிலையின் அதிக அளவு அதிகரிப்பு மழை பெய்யும் போக்கையும் மற்றும் தட்பவெப்ப நிலைகளையும் மாற்றி சுற்றுப்புறச் சூழலில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.