மாசுபடுதலின் பொருள், வகைகள் - சுற்றுச்சூழல் பொருளியல் - மாசுபடுதல் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
மாசுபடுதல்
தொழிற்சாலைகளின் புகை மற்றும் திடக் கழிவுகள் காற்றையும் தண்ணீரையும் மாசுபடுகின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் தண்ணீர் மாசுபடுகின்றது. ஒன்றுமறியாத பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர். இத்தகைய பாதிப்புக்களுக்கு இழப்பீடுகளும் கிடையாது.
சுற்றுச்சூழல் மாசுபடுதல் பல விதங்களில் நடைபெறுகிறது. மாசுபடுதலின் பொருள், வகைகள் காரணங்கள் மற்றும் விளைவுகளை இங்கு கற்போம்.
மாசுபடுதலின் பொருள்
இயற்கை சூழலில் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் சேருவதையே மாசுபடுதல் என்கிறோம்.
மாசுபடுதலின் வகைகள்
மாசுபடுதலை நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவையாவன:
1. காற்றுமாசுபடுதல்
2. நீர் மாசுபடுதல்
3. ஒலி மாசுபடுதல்
4. மண் மாசுபடுதல்
1. காற்று மாசுபடுதல்
1 காற்று மாசுபடுதலின் வரைவிலக்கணம்
"சுற்றுச்சூழல் சொத்து, தாவரங்கள், உயிரிகள் மற்றும் மனித இனம் ஆகியவற்றிற்கு ஊறு விளைக்குமளவுக்கு காற்றுமண்டலத்தில் திட, திரவ அல்லது காற்று வடிவப் பொருள் கலந்திருப்பதையே காற்று மாசுபடுதல்" என காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் சட்டம் 1981 வரையறுக்கிறது.
காற்று மாசுபடுதலின் வகைகள்
உட்புற காற்று மாசு
மனிதர்களின் வசிப்பிடத்திற்குள் தீங்குவிளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் காற்றில் கலந்திருப்பதை உட்புற காற்று மாசு என்கிறோம். உதாரணமாக திட எரிபொருட்களைக் கொண்டு சமையல் செய்கின்றபோது உட்புற காற்று மாசு அடைகின்றது.
வெளிப்புற காற்று மாசு
காற்றுமண்டலத்தில் திட, திரவ, அல்லது காற்று வடிவ அசுத்தங்கள் கலந்திருப்பதே வெளிப்புற காற்றுமாசு எனப்படுகிறது. தொழிற்சாலைகளாலும் மோட்டார் வாகனங்களாலும் வெளிப்புறக்காற்று மாசு அடைகின்றது.
காற்று மாசுபடுதலின் காரணங்கள்
1. வாகனங்கள் வெளியிடும் புகை
வாகனங்கள் கரியமில வாயு கலந்த புகையை வெளியிடுவதால் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுற்றுசூழல் அசுத்தமைடகிறது.
2. புதை படிவ எரிபொருளில் மின்சாரத்திட்டங்கள் (Fossil Fuel)
மின்சாரத் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்றவை சல்பர்டை ஆக்சைடை வெளியிட்டு சுற்றுசூழல் காற்று மண்டலத்தில் அசுத்தமான கழிவுகளை கலக்கிறது. இது அமில மழை ஏற்படக் காரணமாகிறது.
3. தொழிற்சாலை வெளியேற்றும் புகை
தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பெரிய இயந்திரங்கள் வெளியிடும் புகை காற்று மண்டலத்தை அசுத்தமாக்குகிறது.
4. கட்டிடக் கட்டுமானம் மற்றும் வேளாண்மை நடவடிக்கைகள்
பழைய கட்டிடங்களை இடிப்பதாலும் புதியக் கட்டுமானத்தில் சிமெண்ட் பயன்படுத்தும் பொழுதும் காற்றில் அசுத்தமான பொருட்கள் கலக்கின்றன. விவசாயத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் பொழுது காற்று மாசுபடுகிறது.
5. இயற்கை காரணங்கள்
பூமி தன்னைத்தானே மாசுபடுத்திக் கொள்கிறது. எரிமலை, காட்டுத்தீ, தூசுப்புயல் போன்றவையும் காற்றில் மாசு கலக்க வழி செய்கின்றன.
6. வீட்டு நடவடிக்கைகள்
சமையலுக்கு பயன்படும் விறகு , கொசு கொல்லி, எலிக் கொல்லி, விளக்குகள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவையும் காற்றில் நச்சு கலக்க காரணமாகிறது.
காற்று மாசுபடுதலின் விளைவுகள்
1. சுவாசம் மற்றும் இதயக்கோளாறு
சுவாசிக்கும் தரத்தில் இல்லாத காற்று மூச்சுத்திணறலையும் இதய கோளாறையும், புற்று நோயையும் உருவாக்குகிறது. குறிப்பாக குழந்தைகள் ஆஸ்துமா மற்றும் நிமோனியாவினால் பாதிக்கப்படுகின்றனர்.
2. புவி வெப்பமடைதல் (Global Warming)
காற்று மாசு வளிமண்டல வெப்ப அளவை உயர்த்துகிறது. இதனால் துருவப்பகுதி பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயருகிறது. இதனால் நிலப்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. உயிரினங்கள் இடம்மாறவும், அழியவும் செய்கின்றன.
3. அமில மழை (Acid Rain)
சுற்றுச் சூழலில் நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் கலப்பதால் அமில மழை பெய்யும் ஆபத்து உருவாகிறது. அமில மழையால், மனிதகுலம், விலங்குகள், பறவைகள், செடி கொடிப் பயிர்கள் பெறும் பாதிப்புக்கு ஆளாகின்றன.
4. தூர்ந்துபோதல் (Eutrophication)
காற்றில் அதிக அளவில் கலந்துள்ள நைட்ரஜன் போன்ற நச்சுக்காற்று தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மீன்களை பெருமளவில் பாதிக்கிறது.
5. வன விலங்குகள் எண்ணிக்கை குறைதல்
காற்றில் கலந்திருக்கும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளால் வனவிலங்குகள் இடம்பெயர்கின்றன. இதனால் அவைகளின் எண்ணிக்கை குறைகின்றது.
6. ஓசோன் மண்டலம் பலவீனமடைதல்
வளிமண்டல அசுத்தம் ஓசோன் படலத்தைக் குறைக்கிறது. ஓசோன்படலம் சூரியனின் புற ஊதாக்கதிர்தாக்கத்திலிருந்து மக்களை காக்கிறது. இது குறைவதால் புற ஊதா கதிர்கள் நம்மை தாக்கும் அபாயம் ஏற்படும்.
7. மனித இன சுகாதாரம்
காற்று மாசுவினால் உலகளவில் நோய்களும் இறப்புகளும் ஏற்படுகின்றன. காற்று மாசுவினால் இதய நோய்கள், வாதம், நுரையீரல் சம்மந்தப்பட்ட ஆஸ்துமா போன்ற நோய்கள், புற்றுநோய், ஜீரண மண்டல பாதிப்பு போன்றவைகள் ஏற்படுகின்றன.
உலக அளவில் ஒவ்வொரு நாளும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் 93 சதவீதம் பேர் (1.8 பில்லியன்) மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமான இடர்ப்பாடுக்கு உள்ளாகின்றனர்.
- உலக சுகாதார நிறுவனம் WHO
காற்றுமாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
1. மக்கள் வசிக்காத இடங்களில் ஆலைகளை அமைத்தல்.
2. ஆலைகளின் புகைப்போக்கித் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல்.
3. அதிகமான செடிகளையும், மரங்களையும் நடுதல்.
4. மரபுசாரா எரிபொருள் ஆற்றல்களை (Biogas, CNG, LPG) பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
5. பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துதல்.
2. நீர் மாசுபடுதல்
இலக்கணம்
உயிரினங்களுக்கு ஆபத்தான, உயிரினங்களின் உடல் நலனைக் கெடுக்கிற பொருள்களையோ, சக்திகளையோ மனிதன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீர் நிலைகளுக்குள் செலுத்துதல் நீர் மாசுபடுத்துதல் ஆகும்.
நீர் மாசுக்களின் வகைகள்
i) நில மேற்பரப்பு நீர் மாசுபடுதல்
பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற நீர் நிலைகள் ஆறுகள், குளங்கள், கடல் போன்றவை மாசுபடுவது மேல் நிலை நீர் மாசு ஆகும் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதால் நீர் மாசு அடைகின்றது.
ii) நிலத்தடி நீர் மாசுபடுதல்
பூமிக்கு அடியில் உள்ள நீர் மாசு. நிலத்தடி வாயு, எண்ணெய்ப் பொருள்கள், வேதியல் பொருள்கள் ஆகியவை நிலத்தடி நீரைச் சென்று சேரலாம். அதுமட்டுமல்லாமல் பூமிக்கு மேலே கெட்டுப்போன திரவங்களும், சாக்கடைகளும் நிலத்தடி நீரின் தன்மையைக் கொடுக்கலாம்.
iii) நுண்ணுயிரியல் மாசுபடுதல்
வைரஸ் பாக்டீரியா போன்றவையும் நீரின் தன்மையைக் கெடுக்கலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது நீர்வாழ் உயிரினங்களையும், மனிதர்களையும் பாதிக்கின்றது.
iv) ஆக்ஸிஜன் குறைபாடு மாசுபடுதல்
நீரில் உள்ள ஆக்ஸிஜன் குறைவதால், அல்லது இல்லாமல் போவதால், நன்மையான நுண்ணுயிர் கிருமிகள் இறந்து ஆபத்தான நுண்ணுயிர்க்கிருமிகள் வளரலாம். இந்த ஆபத்தான நுண்ணுயிர்க் கிருமிகள் அம்மோனியா, சல்பைடு போன்ற நச்சுப் பொருட்களை வெளியிடுவதால் மனிதகுலம், விலங்குகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்படைகின்றன.
நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள்
1. கழிவு நீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம்
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீ ர், கழிவு நீர் குப்பைகள், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றது. இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றது
2. திடக் கழிவுகள் குவித்தல்
திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
3. ஆலைக் கழிவுகளைக் கொட்டுதல்
மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மாசுப்பொருட்களான, ஆஸ்பெஸ்ட்டாஸ், காரீயம், பாதரசம், கிரிஸ் எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகள் போன்றவை ஆலைக்கழிவுகளில் அதிகம் உள்ளது.
4. எண்ணெய் சிந்துதல்
கப்பல்களாலும் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களாலும் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துக்கின்றது. கடல் நீரில் எண்ணெய் கலக்காமல் படலமாகத் தண்ணீரில் படர்கின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
5. அமில மழை
காற்று மாசுவினால் அமில மழை ஏற்பட்டு நீர்மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீ ர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
6. புவி வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்ப நிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
7. நீர்நிலைகளில் பிராண வாயு குறைதல் (Eutrophication)
நீர்நிலைகள் மாசுபடும் போது தண்ணீ ரில் அதிக அளவு நைட்ரஜனும் குறைந்த அளவு பிராணவாயுவும் இருக்கும். இதனால் நீர்நிலைகளில் பாசிபடர்ந்து காணப்படும். பிராண வாயுக் குறைபாட்டால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
நீர் மாசுவின் விளைவுகள்
மனித இனம், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தும் நீர் மாசுவால் பாதிக்கப்படுகின்றது. விவசாயத்தில் நீர் மாசுவால் பயிரும் நிலத்தின் வளத்தன்மையும் பாதிக்கப்படுகின்றது. கடல் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுவினால் பாதிக்கப்படுகின்றது. இத்தகைய பாதிப்புக்களின் விளைவுகள் எத்தைகைய வேதியியல் பொருட்கள் கலக்கின்றன மற்றும் மாசுகளின் அடர்த்தி ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றன. நகர்ப்புறங்களில் உள்ள நீர் நிலைகள் குப்பைகள், கழிவு நீர், உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ மையங்கள் அங்காடிகள் ஆகியவற்றின் கழிவுகளைக் கொட்டுவதாலும் மாசு அடைகின்றது.
i. நீர்வாழ் உயிரினங்களின் இறப்பு: நீர் மாசுவினால் நீர்நிலைகளில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றது இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களான மீன், நண்டு, கடல்பறவைகள், டால்பின் போன்றவைகள் இறந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றது.
ii. இயற்கையான உணவுப் பாதை இடைநிறுத்தப்படுகின்றது. காரீயம், காட்மியம் போன்ற மாசுக்காரணிகள் கலந்த உணவை சிறிய பறவைகள், அவற்றை உண்ட மீன்கள், அவற்றை உண்ட மனிதர்கள் என அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
iii. நோய்கள் பரவுதல்: சுத்திகரிக்கப்படாத அல்லது சரியாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும் போது வாழ்வியல் நிலைகளைப் பேரளவு பாதிக்கின்றன. திறந்த வெளியில் மலம் கழித்தல், திடக் கழிவுகளைக் கொட்டுதல், சாக்கடை நீரைக் கலத்தல் ஆகியவற்றின் மூலமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்களான ஹெபாடிட்டிஸ் A, டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், வைரல் காய்ச்சல் மற்றும் புழுத்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
iv. இயற்கை அமைப்புகளை அழித்தல் (Destruction of eco - Systems) இயற்கை அமைப்புக்கள் அதிக அளவில் நீர் மாசுவினால் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு இயற்கை அமைப்புக்கள் பாதிக்கப்படுகின்ற போது மனித வர்க்கத்திற்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீர் மாசுவினைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய தீர்வுகள்
1. ஒருங்கிணைந்த நீர் நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ளல்.
2. தேங்கு நீர்க் குளங்களும் முறையான வடிகால் வசதியும் ஏற்படுத்துதல்.
3. வடிநீர்க் கால்வாய்களை பராமரித்தல்.
4. கழிவு மற்றும் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் அமைப்புக்களை நிறுவுதல்.
5. தொடர்ந்து நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவு நீரைக் கண்காணித்தல்.
6. சட்ட விரோதமாக நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்.
3. ஒலி மாசு (Noise Pollution)
வரைவிலக்கணம்
"மனித உடல் நலத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது ஒலி மாசுவாகும். இது அதிகமாக தொழிற்சாலைகளால் உருவாக்கப்படலாம். வானூர்திகள், போக்குவரத்து வாகனங்கள், புகை வண்டிகள் மற்றும் திறந்த வெளி கட்டுமானங்களிலும் காணப்படலாம்"
- ஜெரி. A. நாதர்சன், ரிச்சர்டு. E. பெர்க் (Jerry A. Nathanson and Richard E. Berg 2018)
ஒலி மாசுவின் வகைகள்
i. வளிமண்டல ஒலி: இடி இடித்தாலும் மின்னல் வெட்டுவதும் மற்றும் இதுபோன்ற மின் பாதிப்புக்களால் வளிமண்டலத்தில் ஒலி மாசு ஏற்படலாம்.
ii. தொழிற்சாலைகளில் ஒலி: தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் இயங்கும் போது ஒலி ஏற்படுகின்றது. ஒலி அதிக அளவில் இரைச்சலாக இருக்கும் போது தேவையற்றதாகின்றது. கனரகத் தொழிற்சாலைகளான கப்பல் கட்டுதல், இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலைகள். இரைச்சல் காரணமாக கேட்கும் திறன் இழத்த ல் (Noise Induced Hearning Loss) உடன் தொடர்புடையது.
iii. மனிதனால் தோற்றுவிக்கப்படுவது: கப்பல் மற்றும் ஆகாய விமானங்கள் இயக்குதல், பூமிக்கடியில் ஆய்வு செய்தல், விசைப்படகுகள், ஆழ்துளைகள் ஏற்படுத்தல் போன்றவைகளால் ஒலிமாசு அதிகரிக்கின்றது.
ஒலிமாசுவிற்கான காரணங்கள்
I. மோசமான நகர்ப்புறத்திட்டமிடல் : முறையற்ற நகர்ப்புறத்திட்டம் நகர்ப்புற பயணிகளுக்குத் அதிக அளவு ஒலிமாசுவினை ஏற்படுத்துகின்றது.
II. மோட்டார் வாகனங்களின் இரைச்சல் : நகர்ப்புறங்களில் மோட்டார் வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சல் காரணமாக மக்கள் தற்காலிக காதுகேளா நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
III. வெடிகள் : சில நிகழ்ச்சிகளில் அதிகமான அளவு பட்டாசுகள், வெடிகள் வெடிக்கப்படுகின்றது. பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஒலியை ஏற்படுத்துகின்றது. சில சமயங்களில் சிறுவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றது.
IV. தொழிற்சாலை இயந்திரங்கள்: தொடர்ந்து இயந்திரங்கள் இயக்கப்படும் போது ஏற்படுகின்ற இரைச்சல் கடின துளைக் கருவிகளை இயக்கும் போது ஏற்படுகின்ற இரைச்சல் போன்றவை தொழிலாளர்களுக்கு தாங்க முடியாத தொந்திரவாக அமைகின்றது.
ஒலி மாசுவின் விளைவுகள்
அ. கேட்கும் திறன் இழப்பு: தொடர்ந்து அதிக அளவு இரைச்சலில் இருந்தால் சத்தத்தின் காரணமாக கேட்கும் திறன் பாதிக்கப்படும். வயதானோருக்கு தொழில் ரீதியான இரைச்சலால் செவியின் கேட்கும் திறன் குறையும்.
ஆ. உளரீதியான, மனரீதியான பாதிப்புகள்: தேவையில்லா இரைச்சல் உள, மன நலன்களைப் பாதிக்கின்றது. இதன் காரணமாக, மிகை அழுத்தம், கோபம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றது.
இ. இதய பாதிப்புகள் : அதிக அளவு இரைச்சலில் இருப்பது இருதய நோய்களுக்கும் அதிக ரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும்.
ஈ. விலங்கினங்களுக்கு தீமை ஏற்படுத்தும்: அதிக அளவு இரைச்சல் விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றிற்கு அதிக அளவு தீங்கிழைத்து மரணம் நிகழவும் காரணமாக அமைகின்றது.
உ. வன உயிரினங்களுக்கு தீமை ஏற்படுத்தும் : அதிக அளவு இரைச்சல் வன உயிரனங்களுக்கு சுரப்பிகளின் சமமின்மை , அதிக அழுத்தம், பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.
ஒலி மாசுவினை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு முறைகள்
1. ஒலித் தடைகளை ஏற்படுத்துதல்.
2. தரைப்போக்குவரத்திற்கு புதிய சாலைகள் ஏற்படுத்துதல்.
3. போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு.
4. வேலை செய்யும் இடங்களில் ஒலித் தடுப்பானை நிறுவுதல்.
5. கனரக வாகனங்கள் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்.
6. ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்.
4. நில மாசு
"கழிவுகளைக் கொட்டுவதால் நிலம் தரக்குறைவானதாக மாறும். சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பல திட, திரவ, வாயுப் பொருட்கள் நிலத்தின் தன்மையைக் கெடுத்துவிடுதல் நிலமாசு ஆகும்"
- சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் பாதுகாப்பு விதி 1997. (Prodtection of the Environment Operations Act 1997)
நில மாசுவின் வகைகள்
(i) திடக்கழிவு
இது தாள்கள், நெகிழிப் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள், உணவுப்பொருட்கள், பயன் இழந்த வாகனங்கள், பழுதடைந்த மின்னனுப் பொருள்கள், நகராட்சிக் கழிவுகள் மருத்துவமனை கழிவுகள் போன்றவை இதில் அடங்கும்.
(ii) பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் இராசயன உரங்கள்
விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்காகக் கொண்டுவந்த வேதியியல் பொருட்கள் இன்று புழுப்பூச்சிகளை மட்டுமன்றி மனிதர்களையும் கொல்லும் சக்தி வாய்ந்தவை. மேலும் நிலத்தையும் மாசுபடுத்துகின்றது.
(iii) காடுகளை அழித்தல்
பல வழிகளில் மனிதன் மரங்களைப் பயன்படுத்துகிறான். மரங்கள் கரியமில வாயுவைக் கிரகித்துக்கொண்டு உயிர்வாயுவை (Oxygen) வெளியிடுகின்றது. மரங்கள் வெட்டப்படும் போது உயிர் வாயுவின் (Oxygen) அளவு குறைகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் நிலம் மாசடைகின்றது.
நிலமாசுவிற்கான காரணங்கள்
1. காடுகளை அழித்தல்
காடுகளை அழித்து நிலமாக மாற்றுவது சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றது. அவ்வாறு மாற்றப்படும் நிலங்களை எத்தகைய நடவடிக்கைகள் மூலமாகவும் செழிப்பான நிலமாக மாற்ற முடியாது.
2. விவசாய நடவடிக்கைகள்
மக்கள் தொகை அதிகரிப்பாலும் கால்நடை அதிகரிப்பாலும் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது. அதற்காக விவசாயிகள் அதிக நச்சுத் தன்மை கொண்ட உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தப்படுகின்றனர். இந்த வேதிப்பொருட்களை அளவிற்கதிகமாக பயன்படுத்துகின்றபோது நிலம் நச்சுத் தன்மை அடைகின்றது.
3. சுரங்கத் தொழில்கள்
கனிமங்களை வெட்டி எடுக்கும் போதும் சுரங்கங்கள் அமைக்கப்படும் போதும் பூமிக்கு அடியில் நில அமைப்புகள் தோன்றுகின்றது. இதன் மூலம் நிலம் மாசடைகின்றது.
4. மண்ணில் புதைத்தல்
மக்களின் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ஆண்டிலும் டன் கணக்கில் குப்பையை உற்பத்தி செய்கின்றது. நெகிழி, காகிதம், பழைய துணிகள், மரக்கழிவுகள் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் குவிக்கப்படுகின்றது. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் நிலத்தில் புதைக்கப்பட்டு நிலமாசு அதிகரிக்க காரணமாக உள்ளது.
5. தொழில்மயமாதல்
நுகர்ச்சி அதிகரிப்பால் புதிய தொழிற்சாலைகள் ஏற்படுகின்றது. இதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆராய்ச்சிகளின் விளைவாக புதிய உரங்களும் வேதிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாகவும் நிலமாசு அதிகரிக்கின்றது.
6. கட்டுமானப் பணிகள்
மக்கள் தொகை வளர்ச்சி, நகர்ப்புறமாதல் காரணமாக கட்டடங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதனால், மணல், மரம், கம்பி, சிமெண்ட், செங்கல், நெகிழிப் பொருட்கள், ஆகியவற்றின் கழிவுகள் குப்பைகளாக புறநகர்ப் பகுதிகளில் கொட்டப்படுகின்றது. இதன் காரணமாக நிலம் மாசடைகின்றது.
7. அணுமின் விரயங்கள்
அணுமின் நிலையங்களிலுள்ள கழிவுகளான கதிர்வீச்சுப் பொருட்கள், நச்சுத் தன்மை கொண்ட தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் மனித நலத்தைப் பாதிக்கின்றது. இப்பாதிப்பைத் தவிர்க்க இவை பூமிக்கடியில் பாதுகாப்பறைகளில் வைக்கப்படுகின்றது. இதன் மூலமும் நிலம் மாசுபடக் கூடும்.
நில மாசுவின் விளைவுகள்
1. மண் மாசுபடுதல்
நில மாசுபாட்டில் மிகவும் மோசமானது நிலத்தின் மேல்பகுதியான மண் மாசுபடுதலாகும். ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்பாடே இதற்கு முக்கிய காரணமாகும். மண்ணின் வளமை குறைவதுடன் விவசாய நிலம் மற்றும் கால்நடை மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளை மட்டும்ன்றி மனித இனத்தையும் அழிக்கிறது.
2. உடல் ஆராக்கிய கேடு
வேதியல் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளைவுக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் சுவாசக்கோளாறுகள் தோல் புற்றுநோய் போன்று உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
3. காற்று மாசுபாடு
கழிவு பொருட்களை பூமிக்குள் புதைப்பது அல்லது எரியூட்டுவது காரணமாக காற்று மாசுபடி வாய்ப்பு ஏற்படுகிறது. அளவிற்கு அதிகமான நச்சுப் பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதால் காற்று, நச்சுக்காற்றாக மாறுகின்றது. நச்சுக்காற்றை சுவாசிப்பதன் மூலம் சுவாச நோய்கள் உண்டாகிறது.
4. விலங்குகள் மீதான பாதிப்பு
கடந்த சில பத்து ஆண்டு காலத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவைகளின் இருப்பிடத்திற்கும் இயற்கைச் சூழலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தின் மீது மனிதர்களின் தொடர் நடவடிக்கைகளால் நிலம் மாசுபட்டு வனவாழ் உயிரினங்களை மிகத்தொலைவில் நகரச் செய்துள்ளது. வாழதோதுவான நிலை இல்லாததால் பெரும்பாலான வனவாழ் உயிரினங்கள் அழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன. சில உயிரினங்கள் அழிந்து விட்டன.
நில மாசுபடுதலின் தீர்வுகள்
1. மக்களுக்கு குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்படுத்துதல் பற்றி உரிய அறிவினைப் புகட்டுவது.
2. இயற்கையாகவே அழிந்து, மண்ணுக்கு சேதம் விளைவிக்காத பொருள்களைப் பயன்படுத்துவது
3. பூச்சிகொல்லி மருந்துகளை குறைந்த அளவில் பயன்படுத்துதல்.
4. பலவகைப் பயிர்களைப் பயிரிட்டு மண் வளம் காத்தல். பயிர்ச்சுழற்சி முறை மண்ணின் வளத்தைக் கூட்டும் என்கிறார்கள்.
5. தேவையில்லாத குப்பைகளை எரித்தோ அல்லது புதைத்தோ அப்புறப்படுத்துதல்.
6. மிகக் குறைவான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல்.