கலைச்சொற்கள் : Glossary
அதிகாரத்துவம் (Authority): அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நன்கறிந்த நடைமுறையின் வாயிலாக பெறப்படும் அதிகாரத்தை செயல்படுத்தும் உரிமை மற்றும் ஒரு குறிப்பிட்ட பதவியின் செல்வாக்கு.
குடிமைச் சமூகம் (Civil Society) : குடிமைச் சமூகம் என்பது சுயேச்சையான குழுக்கள் மற்றும் சங்கங்கள் தங்களுக்கென்று ஒரு தனியான தளத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகியே இருக்கும் ஒன்றாகும்.
வகுப்புவாதம் (Communalism) : இது ஒரு அரசியல் சித்தாந்தம். பல்வேறு மதம், இனம் மற்றும் மொழியினருக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், பதற்றங்கள் மற்றும் அதன் விளைவாக தோன்றும் வன்முறைகளுடன் தொடர்புடையது.
ஊழல் (Corruption) : ஊழல் என்பது சட்டத்துக்கு புறம்பான வழியில் ஒருவருக்கு ஆதரவாக செயல்படுவது. மேலும் தனி நபரின் இலாபத்திற்காக பொறுப்புகளை சரிவர செயல்படாமல் இருத்தல்.
ஆழ்விவாத மக்களாட்சி (Deliberative Democracy) : ஆழ்ந்த விவாதங்களின் தேவையை வலியுறுத்துகிற ஒரு மக்களாட்சி முறை. இது விவாதங்களின் வழியே பொது விருப்பத்தை வரையறுக்கிறது.
நீதி (Justice) : ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்க்கேற்றவாறு தண்டனைகள் மற்றும் வெகுமதிகளை நியாயமான பகிர்மானத்தின் அடிப்படையில் வழங்குதல்.
உயர்ந்தோர்குழாம் (Elite): அதிகாரம், செல்வம் மற்றும் கௌரவம் போன்றவற்றை கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மையினர் குழு.
பாலின பாகுபாடு (Gender Discrimination) : ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே அவர்களின் வேறுபட்ட சமூக நிலை மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல்.
கடைநிலை மக்களாட்சி (Grass-root Democracy) : கடைநிலை மக்களாட்சி என்பது கீழ்நிலையில் மக்களின் சமூக பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முடிவுகளை மக்களின் பங்களிப்போடு சுய அரசாங்கத்தின் வழியே அவர்கள் மூலமே எடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
அரசியல் வன்முறை (Political Violence) : அரசியல் அமைப்பில் உள்ளோர் தங்களின் அரசியல் குறிக்கோளை அடைவதற்காக வன் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், மக்களில் ஒரு சிறு பிரிவினர், அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது என்று நம்புவதால் வன்முறையை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுக்கின்றனர்.
குழுவாட்சி (Polyarchy) : ஒரு குழுவால் ஆளப்படுகின்ற ஆட்சி. இசைவினால் உருவான ஒரு எல்லைக்குள் விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ இருக்கின்ற நபர்கள் தங்களுக்குள் எந்த மோதலுமின்றியும் ஒருவர் மேல் ஒருவர் மேலாதிக்கம் செய்யாமலும் ஆட்சி செய்தல்.
குடியரசு (Republic): இது அரசியல் அதிகாரமானது மக்களின் கருத்திசைவிலிருந்து உருவாகிறது என்ற கொள்கையின் படி உள்ளது. முடியாட்சி மற்றும் பரம்பரை விதிகளை இது புறந்தள்ளுகிறது.
உரிமை (Right): உரிமை எனும் கருத்தாக்கமானது தனி மனித அதிகாரம், தனித்துவம், சுதந்திரம் மற்றும் மனிதர்களுக்கிடையேயான சமத்துவம் போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறது. மேலும் தகுந்த காரணங்கள் இருந்தாலன்றி மனிதர்களுக்கிடையில் பாகுபாடு காட்டுதல் கூடாது என்கிறது.
விடுதலை (Freedom): 1. ஒரு மனிதன் தான் விரும்பும் வகையில் சிந்திக்கவும், செயல்படவுமான திறன். விடுதலை என்பது குறுக்கிடாமை அல்லது தனி மனித சுய வளர்ச்சி.
2. கொடுங்கோல் மன்னனின் எதேச்சாதிகாரத்திலிருந்து விடுதலை பெற்று குடிமக்கள் அரசின் செயல்பாடுகளில் பங்கேற்று தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ளும் மக்களின் உரிமை.
சுதந்திரம் (Liberty): ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்பட அதிகார அமைப்பு அளிக்கும் உரிமை.
சமத்துவம் (Equality): ஒரே மாதிரியாக இல்லாமல் அனைவருக்கும் சரியான முறையில் பகிர்ந்தளித்தல். சமத்துவம் என்பது உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் விளைவுகள் அனைத்திலும் இருத்தல் வேண்டும்.
சகோதரத்துவம் (Fraternity): சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அனுதாபம், மற்றும் தோழமை கொண்டு செயல்படுதல்.
இறையாண்மை (Sovereignty): அறுதியான மற்றும் இறுதியான அதிகாரம். இறையாண்மை என்பது அரசிடம் உள்ள உச்ச சட்ட அதிகாரம் அல்லது எதிர்க்க முடியாத அரசியல் அதிகாரம்.
சமதர்மம் (Socialism): சமதர்மம் என்பது ஒரு சித்தாந்தம். இதன்படி சொத்தானது தனி நபரின் உடைமையாக இல்லாமல் பொதுச் சொத்தாக இருக்கும். ஒரு பொருளாதார அமைப்பில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக இது உருவானது. இதில் அரசுக்கும், சமூகத்துக்குமான உறவை தீர்மானிப்பது அரசியலின் படிநிலைகள் ஆகும்.
மதச் சார்பின்மை (Secularism): அரசானது எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவளிக்காமல் இருத்தல். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல்.
அரசு (The State): நிலம், மக்கள், அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய இந்நான்கையும் ஒருங்கே கொண்ட ஒரு அரசியல் நிறுவனம்.