பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai
இயல் மூன்று
கற்கண்டு
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ,
இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்,
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால்,
இன்று 'உ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
அகச்சுட்டு
இவன், அவன், இது, அது -இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
புறச்சுட்டு
அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
அண்மைச்சுட்டு
இவன், இவர், இது, இவை,
இம்மரம், இவ்வீடு -
இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே,
இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'இ'
ஆகும்.
சேய்மைச்சுட்டு
அவன், அவர், அது, அவை,
அவ்வீடு. அம்மரம் -
இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே,
இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'அ'
ஆகும்.
தெரிந்து தெளிவோம்
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ என்ற கட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(எ.கா.) உது, உவன்
சுட்டுத்திரிபு
அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.
இவ்வாறு, அஇ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரித்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
ஏ, யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
❖ மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு)
❖ மொழியின் இறுதியில் வருபவை - ஆ,ஓ (பேசலாமா,தெரியுமோ)
❖ மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை -
ஏ (ஏன், நீதானே)
அகவினா
எது, யார்,
ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.