பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உழைப்பே மூலதனம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai
மதிப்பீடு
சுருக்கி எழுதுக
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
விடை
முன்னுரை :
‘பாடுபட்டுத்
தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது
ஔவையாரின் அறிவுரை, பணத்தைப்
பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து
வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன்.
இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’
அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர்
இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான
வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம்
ரூபாய் கொடுத்தார். அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று
கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.
பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது
திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத்
தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான்
எழிலன்.
வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த
பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும்
கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின.
அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.
அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை
கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள்.
அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள்
மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.
எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து
மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து
விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து
வைத்தான்.
வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து
சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத்
தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக
பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில்
வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.
அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில்
பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.
எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில்
பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி
இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.
அருளப்பரின் அறிவுரை :
“பணம்
என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில்
செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை.
காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.
முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம்
தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.
கற்பவை கற்றபின்
1.
உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
விடை
கதாபாத்திரங்கள்: அருளப்பர், வளவன்,
அமுதா, எழிலன் (அருளப்பர் பிள்ளைகளை அழைத்தல்)
அருளப்பர் : பிள்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன்.
நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத்
திருப்பித் தர வேண்டும்.
(ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.
மூவரும் மகிழ்ந்தனர்.)
வளவன் : நமது திறமையை எடைப்போடவே தந்தை நமக்குப் பணத்தைக்
கொடுத்திருக்கிறார்.
அமுதா : நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
எழிலன் : நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத்
தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்.
வளவன் உழவுத்தொழில் செய்து முன்னேறினான். அமுதா
ஆடு, மாடு வளர்த்து தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்றுப் பொருள் ஈட்டினாள். எழிலன்
பணத்தைப் பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தான்.)
காட்சி -2
கதாபாத்திரங்கள் : அருளப்பர், வளவன், அமுதா, எழிலன்
(அருளப்பர் பயணம் முடிந்து திரும்பி வந்தார்.)
அருளப்பர் : வளவா! நான் கொடுத்த பணம் எங்கே?
வளவன் : அப்பா, நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மைச்
செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து
உள்ளது.
அருளப்பர் : நல்லது! உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன.
அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள் வேளாண்மையைத் தொடர்ந்து செய். அமுதா! நீ என்ன செய்தாய்?
அமுதா : அப்பா! நான் மாடுகளை வாங்கிப் பராமரித்தேன். நீங்கள்
தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள்.
அருளப்பர் : மிக்க மகிழ்ச்சி. இந்தப் பணத்தை எனது பரிசாக
நீயே வைத்துக் கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து. வாழ்த்துகள். எழிலா! உன்னிடம்
கொடுத்த பணம் எங்கே?
எழிலன் : அப்பா! நீங்கள் கொடுத்த பணத்தை மிகப் பத்திரமாகப்
பெட்டியில் வைத்திருக்கிறேன். (தந்தை மனம் வருந்தினார்).
அருளப்பர் : பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய
பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச்
செய்யத் தவறிவிட்டாய். எழிலா! நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய்.
வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக் கொள். உன் எதிர்கால
வாழ்வுக்கு அது உதவும்.
(தந்தை கூறியதைக் கேட்ட எழிலன், தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று
முன்னேற வேண்டும் என முடிவு செய்தான்.)
2. நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
வகுப்பறையில் பேசுக.
விடை
நான் எழிலனாக இருந்தால் பல்பொருள் அங்காடி வைப்பேன்.
ஏனெனில் அங்குதான் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். பொருள்களை
வாங்கி வைத்துக் கொண்டு விற்கப்படவில்லையே என வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அன்றாடத்
தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் வியாபாரம்
நடக்கும். அதுமட்டுமின்றி நான் உற்பத்தியாளரிடம் நேரிடையாகப் பொருள்களை வாங்கி விற்பேன்.
அதிக இலாபமின்றி நியாயமான முறையில் வியாபாரம் செய்வேன். மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில்
கொள்வேன். “கொடுப்பதும்
குறைவிலாது, கொள்வதும்
மிகை கொளாது” என்ற பழந்தமிழரின் வாக்கினை மெய்ப்பிப்பேன்.
என்னுடைய அங்காடியில் இயன்றவரை இயற்கை முறையில்
பயிர்செய்த காய்கறிகள், தானியங்கள்
போன்றவற்றையே விற்பேன். என் நோக்கம் நுகர்வோராகிய மக்கள் மனநிறைவுடன் என் அங்காடிக்கு
வந்து செல்ல வேண்டும் என்பதாகும். அதன்படி வணிகம் செய்து என் அப்பாவின் விருப்பத்தை
நிறைவேற்றுவேன்.
3.
கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
ஏன்?
விடை
கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் என்னைக்
கவர்ந்தவர் அமுதா.
காரணம் : ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தைச் சேமித்து வைத்தாள். அவள் வருமானத்திற்காக அதனைச் செய்தாலும் பல உயிர்களைக் காப்பாற்றுகிறாள். இதனால் அவளிடம் உள்ள கருணை, அன்பு, பரிவு போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. இக்காரணத்தினால் எனக்கு அமுதா கதாபாத்திரம் கவர்ந்ததாக உள்ளது.