பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கடலோடு விளையாடு | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai
இயல் மூன்று
கவிதைப்பேழை
கடலோடு விளையாடு
நுழையும்முன்
பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அசதியைப் போக்குகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள். அம்மீனவர்களின் பாடலைக் கேட்போம் வாருங்கள்.
விடிவெள்ளி நம்விளக்கு
- ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம்
- ஐலசா
அடிக்கும்அலை நம்தோழன்
- ஐலசா
அருமைமேகம் நமதுகுடை
- ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை
- ஐலசா
விண்ணின்இடி காணும்கூத்து
- ஐலசா
*பாயும்புயல் நம் ஊஞ்சல்
- ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை
- ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை
- ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு
- ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் தம்பொருள்கள்
- ஐசோ
முழுநிலவே கண்ணாடி
- ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம்
- ஐலசா
தொழும்தலைவன் பெருவானம்
- ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம்
- ஐலசா"
சொல்லும் பொருளும்
கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
மின்னல்வரி - மின்னல் கோடு
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
பாடலின் பொருள்
மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள்; விரிந்த கடலே பள்ளிக்கூடம்; கடல் அலையே தோழன்; மேகமே குடை; வண்மையான மலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல்; பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை, கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்; முழு நிலவுதான் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்; வானமே அவர்கள் வணங்கும் தலைவன், இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.
தெரிந்து தெளிவோம்
நெய்தல் திணை
நிலம்
: கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள்
: பரதவர், பரத்தியர்
தொழில்:
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ
நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலோ நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.