புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage
இந்தியா - அமைவிடம்,
நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
• புவியில், இந்தியாவின் அமைவிட
முக்கியத்துவத்தைப்பற்றி புரிந்துகொள்ளல்
• இந்தியாவின் முக்கிய
தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
• இந்திய பெரும் சமவெளிப்
பகுதிகளை ஒப்பிடுதல்
• இந்தியாவின்
வடிகாலமைப்பு பற்றி புரிந்துகொள்ளல்
• இமயமலையில் உருவாகும்
ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளல்
இந்தியா
பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய
நாடாகவும் உள்ளது. இது ஏனைய ஆசிய பகுதிகளிலிருந்து இமயமலையால் பிரிக்கப்பட்டும்
உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 ச.கி.மீ
ஆகும். இது புவியில் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதமாகும்.
உலகிலுள்ள பல நாடுகளைவிடவும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பரப்பளவில்
பெரியவைகளாக உள்ளன.
இந்தியா
15,200 கி.மீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது.வடமேற்கில்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும்,
வடக்கில்
சீனா, நேபாளம்,
பூடானுடனும்,
கிழக்கில்
வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
மேலும்
இந்தியா அதிகபட்சமாக வங்காள தேசத்துடன் 4,156 கி.மீ
நீளமுள்ள நில எல்லையையும், குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் 106
கி.மீ
நில எல்லையையும் கொண்டுள்ளது.
இந்தியா,
தெற்கில்
இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும்,
மேற்கே
அரபிக் கடலாலும் சூழப்பட்டு சுமார் 6,100 கி.மீ
நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது.
இந்திய
கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7,516.6
கி.மீ.
ஆகும். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக்நீர்
சந்தி ஆகும்.
இந்தியாவின்
அமைவிடம் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியிலும்,
ஆசியாவின்
தென்பகுதியிலும் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் வழிப்பாதை,
மேற்கிலுள்ள
ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இணைத்து இந்தியாவிற்கு
அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரை மேற்கு ஆசியா,
ஆப்பிரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பாலமாகவும்,
கிழக்குக்
கடற்கரை தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு
கொள்ளவும் உதவி புரிகிறது.
பாகிஸ்தான்,
மியான்மர்,
வங்காளதேசம்,
நேபாளம்,
பூடான்
மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என
அழைக்கப்படுகிறது.
இயற்கை
நில அமைப்பு, காலநிலை,
இயற்கைத்
தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில்
ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு
துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.