இருவிதையிலைத்
தாவரத்தண்டின் உள்ளமைப்பு
(சூர்யகாந்தி)
இருவிதையிலைத் தாவரத்தண்டின்
உட்புற அமைப்பில் கீழ்கண்ட திசுக்கள் காணப்படுகின்றன.
1. புறத்தோல்: இது வெளிப்புற அடுக்காகும். இது
ஓரடுக்காலான பாரன்கைமா செல்களாலானது. இதன் வெளிப்புறத்தில் கியூடிக்கிள் படலம்
காணப்படுகிறது. புறத்தோலின் பணி உட்புறத்திசுவை பாதுகாப்பதாகும்.
2. புறணி: புறணி மூன்று பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது.
(i) புறத்தோலடித்தோல்: இது 3 முதல் 6 அடுக்குகளால் ஆன கோலன்கைமா செல்களால் ஆனது.
இவ்வடுக்கு தாவரங்களுக்கு உறுதியைத் தருகிறது.
(ii) மையப்புறணி: இது ஒரு சில அடுக்கு குளோரன்கைமா செல்களால் ஆனது. இதில்
பசுங்கணிகங்கள் காணப்படுவதால் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கிறது.
(iii) உட்புற புறணி: புறணியின் உட்புறப் பகுதியில்
பாரன்கைமா செல்கள் சில அடுக்குகள் காணப்படுகிறது. இதன் பணி காற்று பரிமாற்றம்
மற்றும் உணவு சேமித்தலாகும்.
(iv) அகத்தோல்: புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும். இது ஓரடுக்கு
பீப்பாய்வடிவசெல்களால் ஆனது. இதில் தரசம் (ஸ்டார்ச்) காணப்படுவதால் தரச் அடுக்கு
எனவும் அழைக்கப்படுகிறது.
3. ஸ்டீல்: அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த
தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார்
கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன.
(i) பெரிசைக்கிள்: அகத்தோலுக்கும் வாஸ்குலார் கற்றைக்கும் இடையில் காணப்படும். பல
அடுக்கு பாரன்கைமா செல்களால் ஆன பகுதியாகும். இதன் இடையிடையே ஸ்கிளிரன்கைமாவால் ஆன
திட்டுக்கள் காணப்படுகின்றன இவை கற்றைத்தொப்பி என்றழைக்கப்படுகிறது.
(ii) வாஸ்குலார் கற்றை: வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை
மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை
(iii) பித்: செல் இடைவெளிகளுடன் காணப்படும் பாரன்கைமாவால் ஆன மையப்பகுதி பித்
ஆகும். இதன் பணி உணவுப் பொருட்களைச் சேமிப்பதாகும்.