வேதியியல் - அயனிச் சமநிலை | 12th Chemistry : UNIT 8 : Ionic Equilibrium
அலகு 8
அயனிச் சமநிலை
பீட்டர் ஜோசப் வில்லியம் டீபை
பீட்டர் ஜோசப் வில்லியம் டீபை என்பார் ஒரு டச்சு அமெரிக்க நாடுகளைச் சார்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். இவர் மின்பகுளிக் கரைசல் கொள்கையினையளித்து பெரும் பங்காற்றினார். மேலும் மூலக்கூறுகளின் இரு முனை திருப்புதிறன் பற்றி ஆய்ந்தளித்தார். விளிம்பு வரைபடம் மற்றும் இருமுனை திருப்புதிறனைக் கொண்டு மூலக்கூறுகளின் வடிவமைப்பை கண்டறிந்தலுக்காக டீபே 1936 ஆம் ஆண்டிற்கான வேதியியலில் நோபல் பரிசினைப் பெற்றார்.
கற்றலின் நோக்கங்கள் :
இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்னர்,
• அரீனியஸ், லௌரி - ப்ரான்ஸ்டட் மற்றும் லூயி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்மங்களை அமிலங்கள் மற்றும் காரங்கள் என வகைப்படுத்துதல்.
• pH அளவீட்டை வரையறுத்தல், pH மற்றும் pOH ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை நிறுவுதல்.
• நீர் அயனியாக்கத்தில் நிலவும் சமநிலையை விளக்குதல்.
• ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியை விளக்குதல் மற்றும் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை மாறிலி மற்றும் பிரிகை வீதம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை வருவித்தல்.
• பொது அயனி விளைவுக் கொள்கை மற்றும் தாங்கள் செயல்முறையை விளக்குதல்.
• தாங்கல் கரைசலை தயாரிக்க ஹென்டர்சன் சமன்பாட்டை பயன்படுத்துதல்
• கரைதிறன் பெருக்கத்தை கணக்கிடுதல், கரைதிறன் மற்றும் கரைதிறன் பெருக்கத்திற்கு இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல்.
• அயனிச் சமநிலை தொடர்பான கணக்கீடுகளை தீர்த்தல்.
ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்.
பாட அறிமுகம்:
வேதிச்சமநிலை பற்றி XI வகுப்பில் நாம் முன்னரே கற்றறிந்தோம். இந்தப் பாடப்பகுதியில், அயனிச் சமநிலை குறிப்பாக அமில - காரச் சமநிலை பற்றி கற்க உள்ளோம். நம் உடலில் நிகழும் பல்வேறு முக்கிய செயல்முறைகளில் நீர்ச்சமநிலை நிலவுகிறது. எடுத்துக்காட்டு: இரத்தத்தில் காணப்படும் கார்பானிக் அமிலம் - பைகார்பனேட் தாங்கல் கரைசல்.
H3O+ (aq) + HCO3- (aq) ↔ H2 CO3 (aq) + H2O(l)
நம் அன்றாட வாழ்வில் பல்வேறு வேதிப்பொருட்களை கடந்து செல்கிறோம். அவற்றில், அமிலங்களும், காரங்களும் மிக முக்கியாமானவையாகும். எடுத்துக்காட்டாக, பாலில் லாக்டிக் அமிலமும், வினிகரில் அசிட்டிக் அமிலமும், தேனீரில் டானிக் அமிலமும் உள்ளன. மேலும், அமிலநீக்கி மாத்திரைகளில் அலுமினியம் ஹைட்ராக்சைடு / மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு ஆகியவை உள்ளன. அமிலங்கள் மற்றும் காரங்கள் பல்வேறு தொழிற் பயன்களை பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, உரத்தொழிலில் கந்தக அமிலமும், சோப்பு தொழிலில் சோடியம் ஹைட்ராக்சைடும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அமிலங்கள் மற்றும் காரங்களின் பண்புகளை புரிந்துகொள்ளுதல் முக்கியமானது.
அமிலங்கள், காரங்கள் பற்றிய வரையறைகள் மற்றும் நீர்க்கரைசல்களில் அவற்றின் அயனியாதல் ஆகியவை குறித்து இந்தப் பாடப்பகுதியில் கற்க உள்ளோம். pH அளவீடு மற்றும் அமிலங்கள், காரங்கள் அவற்றின் நீர்க்கரைசல்களில் உருவாக்கும் கூறுகளின் செறிவுகளை நிர்ணயிக்க வேதிச் சமநிலை கொள்கைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை பற்றி நாம் கற்போம்.