எண்கள் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 2 Unit 1 : Numbers
நினைவில் கொள்க:
● 1–ஐ விட அதிகமான ஓர் இயல் எண்ணானது, 1 மற்றும் அதே எண்ணை மட்டுமே காரணிகளாகப் பெற்றிருப்பின், அது பகா எண் எனப்படும்.
● ஓர் இயல் எண்ணானது இரண்டிற்கு மேற்பட்ட காரணிகளைப் பெற்றிருப்பின், அது பகு எண் எனப்படும்.
● ஒரு சோடி பகா எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 2 எனில், அவை இரட்டைப் பகா எண்கள் எனப்படும்.
● ஒவ்வொரு பகு எண்ணும் பகா எண்களின் பெருக்கற்பலனாக ஒரே ஒரு வழியில் மட்டுமே எழுத முடியும்.
● எவையேனும் இரு பூச்சியமற்ற முழு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி என்பது அந்த இரு எண்களின் மிகப்பெரிய பொதுவான காரணி ஆகும்.
● எவையேனும் இரு பூச்சியமற்ற முழு எண்களின் மீச்சிறு பொது மடங்கு என்பது அந்த இரு எண்களின் மிகச்சிறிய பொதுவான மடங்கு ஆகும்.
● இரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணி 1 எனில், அவை "சார்பகா" அல்லது "இணைப்பகா" எண்கள் எனப்படும்.
● கொடுக்கப்பட்ட இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம.–வின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்.
இணையச் செயல்பாடு
எண்கள்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது
படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra பணித்தாளின் "Numbers" என்னும் பக்கத்திற்குச் செல்லவும். இப்பணித்தாளில் இரண்டு செயல்பாடுகள் இடம்பெற்றிருக்கும். அவை,
1. LCM and HCF மற்றும் 2. Prime number game.
அவற்றில் முதல் செயல்பாட்டில் New Problem என்பதைச் சொடுக்கி அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துச் சரிபார்க்க..
படி 2 முதல் செயல்பாட்டின் கீழ்ப்பக்கத்தில் உள்ள Open Link in New Tab என்பதைச் சொடுக்கி, பகா எண்களாக (Prime Numbers) வரும் முட்டைகளை வேகமாகச் சேகரிக்கவும். செயல்பாட்டின் துவக்கத்திலேயே விளையாட்டின் வேகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
செயல்பாட்டிற்கான உரலி:
எண்கள்: https://ggbm.at/Exu3mtz5 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.