இயந்திர அலை இயக்கம் மற்றும் அதன் வகைகள்
அலை இயக்கத்தை இரண்டு வகைப்படுத்தலாம்.
a. இயந்திர அலை - பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவைப்படும் அலைகள் இயந்திர அலைகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு : ஒலி அலைகள், நீரின் மேற்பரப்பில் உருவாகும் சிற்றலைகள் முதலியன.
b. இயந்திரவியல் அல்லாத அலை – பரவுவதற்கு எவ்வித ஊடகமும் தேவைப்படாத அலைகள் இயந்திரவியல் அல்லாத அலைகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ஒளி அலைகள், அகச்சிவப்புக் கதிர்கள்
மேலும், அலைகளை இரண்டு வகைப்படுத்தலாம்
a. குறுக்கலைகள்
b. நெட்டலைகள்
குறுக்கலை இயக்கத்தில், ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொருத்து அலைபரவும் திசைக்கு (ஆற்றல் மாற்றப்படும் திசைக்கு ) செங்குத்துத் திசையில் அலைவுறும் அல்லது அதிர்வடையும். அலை பரவும் திசையானது படம் 11.6 இல் காட்டியுள்ளவாறு அதிர்வுறும் தளத்திற்கு (ஊடகத்தின் துகள்கள் அதிர்வுறும் தளத்திற்கு) செங்குத்தாக அமையும்.
எடுத்துக்காட்டு: ஒளி (மின்காந்த அலைகள்)
நெட்டலை இயக்கத்தில் ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொருத்து அலை பரவும் திசைக்கு இணையான திசையில் (ஆற்றல் மாற்றப்படும் திசையில்) படம் 11.7 இல் காட்டியுள்ளவாறு அலைவுறும் அல்லது அதிர்வடையும்.
எடுத்துக்காட்டு: ஒலி