வரலாறு - சங்க காலம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
சங்க காலம்
பொது ஆண்டுக்கு
முந்தைய இறுதி
மூன்று நூற்றாண்டுகளிலிருந்து, பொது
ஆண்டிற்கு பின்னர்
தொடங்கும் முதல்
மூன்று நூற்றாண்டுகள்
வரையிலான காலம்
சங்க காலம்
என பெரும்பாலோரால்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இக்காலம்
பற்றிய செய்திகள்
பெருமளவில் சங்க
இலக்கியங்களிலிருந்தே பெறப்படுகின்றன. இலக்கியச் சான்றுகள் தவிரத்
தெளிவான கல்வெட்டுச்
சான்றுகள், தொல்
பொருள் சான்றுகள்
கிடைக்கப் பெறுவதால்
இக்காலக் கட்டம்
ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே
தொடங்குகிறது எனக் கூறலாம்.
ஆகவே இக்கால
கட்டத்தைத் தொடக்க வரலாற்றுக்
காலம் என
அழைப்பதே பொருத்தமாகும்.
மூவேந்தர்
பொ.ஆ.மு. மூன்றாம்
நூற்றாண்டிலேயே தமிழகத்தின் மூன்று
அரச மரபுகள்
குறித்து அசோகர் அறிந்திருந்தாலும்,
பொ.ஆ.
முதலாம் நூற்றாண்டு மற்றும் அதற்கு பின்
வந்த காலத்தைச்
சேர்ந்த சங்க இலக்கியத்தின்
மூலமே அவ்வரசர்களின் பெயர்களை அறிந்து கொள்ள
முடிகிறது. மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடிசூடிய அரசர்களான சேர, சோழ, பாண்டியர்
பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெருவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அசோகர் கல்வெட்டுகளில் மேற்சொல்லப்பட்ட மூவேந்தரோடு
இடம் பெற்றுள்ள சத்யபுத்ர (அதியமான்) என்பது
சங்கப் பாடல்களில் இடம் பெறும் வேளிரைக்
குறிப்பதாக உள்ளது.
சோழர் தமிழகத்தின்
மத்திய, வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர். அவர்களது
ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும். இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்பட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது). மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத் துறைமுகமாகவும் அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் திகழ்ந்தது. சோழரின் சின்னம் புலி ஆகும். காவிரிப்பூம்பட்டினம் இந்துமா கடலின் பல பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களைத் தன்பால் ஈர்த்தது. கரிகாலனின் ஆட்சியின் போது இங்கு நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் விரிவாக விளக்குகிறார்.
இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகாலன் சங்ககால சோழ அரசர்களில் தலையாயவராக அறியப்படுகிறார். பட்டினப்பாலை அவருடைய ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது வெண்ணி போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பதினோரு வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டதாகும். காட்டை வெட்டி நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம் பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வேளாண்மையை வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர் போற்றப்படுகிறார். பெருநற்கிள்ளி எனும் பெயருடைய மற்றொரு அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார். கரிகாலனின் மறைவைத் தொடர்ந்து உறையூர் மற்றும் புகார் அரச குடும்பத்தினரிடையே வாரிசுரிமை தொடர்பான மோதல் ஏற்பட்டிருக்கிறது.
சேரர் மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ் நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர். வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுபாட்டில் இருந்தன. வஞ்சி இன்றைய தமிழகத்தின், கரூர் என்று அடையாளம் காணப்படுகிறது. அதேசமயம் சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங் காண்கின்றனர். சேர அரச குடும்பத்தில் இரு கிளைகள் இருந்ததெனவும், பொறையர் என்னும் கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர் எனவும் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் பதிற்றுப்பத்து பேசுகிறது. கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெட்டு, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களில் ஒருவரான சேரல் இரும்பொறை தன் பெயரில் நாணயங்கள் வெளியிட்டுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் முக்கியச் சேர அரசர்கள் ஆவர். பல குறுநில மன்னர்களைச் செங்குட்டுவன் வெற்றி கொண்டுள்ளார். கடற்கொள்ளையர்களை அடக்கியதன் மூலம் முக்கியத் துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்தியப் படையெடுப்பு சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இவர் ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் வைதீக, அவைதீக மதங்களை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. செப்பு, ஈய நாணங்களைச் சேர அரசர் வெளியிட்டுள்ளார். தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள அவை, ரோம நாணயத்தைப் போலுள்ளன. எழுத்துக்கள் எவையும் இல்லாமல் சேரர்களின் வில் அம்புச் சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும் கிடைத்துள்ளன.
பாண்டியர் மதுரையிலிருந்து ஆண்டனர். தாமிரபரணி நதி வங்காளவிரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியத் துறைமுகமாகும். இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியரின் சின்னம் மீன். அவர்களின் நாணயங்களில் ஒருபுறம் யானையின் வடிவமும் மற்றொரு புறம், புதிய பாணியில் மீனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கேரளத்தின் தெற்குப் பகுதிகளின் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகேயுள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர். சங்கப் பாடல்கள் பாண்டிய அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர்கள் எப்போது அரச பதவி ஏற்றார்கள், அவர்கள் ஆண்ட கால அளவு என்ன, என்பன போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை.
மாங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டு பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது. மதுரைக் காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது. முதுகுடுமிப் பெருவழுதி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேள்விக்குடிச் செப்பேடுகளில், பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் எனக் குறிக்கப்படுகிறார். தான் செய்த வேத வேள்விச் சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி என்ற பெயரில் புராண கதைப் பொறிப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ளார்.
நெடுஞ் செழியன், சேரர், சோழர், ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் (திதியன், எழினி, எருமையூரான், இருங்கோவேண்மான், பொருநன்) ஆகியோரின் கூட்டுப்படைகளைத் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதற்காகப் புகழப்படுகிறார். மேலும் சிற்றரசர்களிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும். கொற்கையின் தலைவனென்றும், திருநெல்வேலி கடற்கரைப் பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர்புரியும் திறன் பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும் இவர் புகழப்படுகிறார்.