வரலாறு - தமிழ் அரசமைப்பு | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
தமிழ் அரசமைப்பு
ஒருவகையில் இத்திணைசார் பாகுபாடு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் நிலவிய சமச்சீரற்ற வளர்ச்சியை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அரசியல் வடிவங்களிலும் அந்நிலை காணப்பட்டது. ஆட்சியாளர்களில் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களைக் காண முடிகிறது. 1) கிழார் 2) வேளிர் 3) வேந்தன். கிழார் என் போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர். வேந்தர் எனப்பட்டோர் மிகப் பெரும் வளமான நிலப் பகுதியை கட்டுப்படுத்திய அரசர்களாவர்.
எண்ணிக்கையில் அதிகமாக இருந்த வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுபாட்டில் கொண்டிருந்தனர். அதியமான், பாரி, ஆய், இருங்கோ போன்ற குறுநில மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென இயற்கை வளமிக்க ஒரு பகுதியை ஆண்டனர். அவர்கள் பெருந்தன்மை கொண்ட புரவலர்களாகப் புலவர்களையும் ஆடல் பாடல் கலைஞர்களையும் ஆதரித்தனர். இவர்கள் படை வலிமை பெற்றிருந்தனர். ஆநிரை கவர்தல் காரணமாக இவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன. பல நேரங்களில் இவர்கள் இணைந்து மூவேந்தர்களில் யாராவது ஒருவரை எதிர்த்தனர்.
சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெரும்பான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்க காலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும். சிலர் இதனை மறுக்கின்றனர். சேர, சோழ, பாண்டியரின் அரசியல் முறையானது, அரசு உருவாக்கத்திற்கு முன்பான குடிமைத் தலைமை முறையைச் சேர்ந்தது என்பது இவர்களின் கருத்தாகும். அவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்கள் வருமாறு
1. சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை .
2. எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிருந்தது.
3. ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
4. வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.
மேற்சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டாளர்கள் கீழ்க்காணும் வாதங்களை முன்வைக்கப்படுகின்றனர்.
•
சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப் பகுதி வாழ் சமுகத்தில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
• தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க - ரோமானிய நூல்கள் துணைச் சான்றுகளாய் உறுதிப்படுத்துகின்றன.
• ஆட்சிப்பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருக்கின்றன.
• வணிகப் பெரு வழிகளிலும், காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகப் பகுதிகளிலிருந்தும், முசிறி துறைமுகத்திலிருந்துமே சேர அரசர் வரி பெற்றனர் என அறிய முடிகின்றது.
• பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப் பெரும் பங்கை வகித்துள்ளது.
வேந்தரின் அரசியல் எழுச்சி
இரும்புக்காலகட்டத்தில் (பொ.ஆ.மு 1100 - 300) தோன்றிய தலைவர்களிலிருந்து தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் உருவாயினர். தலைவர்களில் ஒரு சிலர் மேய்ச்சல் நிலங்களின் மீதும், வேளாண் நிலங்களின் மீதும் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டை வைத்ததன் மூலம் உயர்நிலையை (வேந்தர்) அடைந்தனர். மற்றவர்கள் தலைவர்களாகவே (வேளிர்) நீடித்தனர். எடுத்துக்காட்டாக, அசோகர் கல்வெட்டுகளில் சத்யபுத்ரா என்று குறிப்பிட்டுள்ள அதியமான் நாளடைவில் வலிமை குன்றியதால் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் போல அரசன் என்ற நிலையை அடைய இயலவில்லை.
கிழார்களையும், வேளிர் குலத்தலைவர்களையும் வேந்தர்கள் அடிபணியச் செய்ததோடு தங்களுக்குள்ளும் போரிட்டுக்கொண்டனர். இதன் பொருட்டு தங்களுக்கெனப் படை வீரர்களை அணி திரட்டியதோடு, சில வேளிர்குலத் தலைவர்களின் உதவியையும் பெற்றனர். சங்க காலத்தைச் சேர்ந்த வேந்தர்கள் தங்களது வலிமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகச் சிறப்புப் பட்டங்களைச் சூடிக் கொண்டனர். கடுங்கோ, இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி போன்ற பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டதன் மூலம் தங்களை ஏனைய மக்களிடமிருந்தும் வேளிர்குலத் தலைவர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.
இவ்வேந்தர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரித்து அவர்களை தங்களது அரசவையில் (அவையம்) அமர வைத்துக் கொண்டது ஒரு வகையில் தங்களையும், தங்கள் நாட்டையும் புகழ்ந்து பாடுவதற்காக இருக்கலாம். எடுத்துக்காட்டாக சோழ அரசன் கரிகாலன் பட்டினப்பாலையை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பெருமளவில் பொன் நாணயங்களைப் பரிசாக அளித்துள்ளார்.