வரலாறு - சமூகமும் பொருளாதாரமும் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
சமூகமும் பொருளாதாரமும்
சங்ககாலத்தில் வேந்தர்கள் மேற்கொண்ட போர்கள் எதிரிகளின் பகுதிகளைக் கைப்பற்றி அதன் மூலம் தங்களது ஆட்சி எல்லைப் பரப்பினை விரிவாக்குவதற்காக அமைந்தன. முடிவில்லாத போர்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் உருவாவதற்கு காரணமாய் அமைந்திருக்கலாம். சடங்குகள் நடைபெற்ற இடங்களில் போர்க் கைதிகள் பணியாற்றியதற்கான பதிவுகள் காணப்படுகின்றன. அடிமைகள் பற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியில் பெண்களும், செயலூக்கத்துடன் பங்கெடுத்துள்ளனர். சங்க காலத்தில் பல பெண்பாற் புலவர்களும் இருந்துள்ளனர்.
கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க அணிகலன் செய்தல், சங்கு வளையல், அணிகலன் செய்தல் கண்ணாடி, இரும்பு வேலை, மட்பாண்டம் செய்தல் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து சான்றுகள் உள்ளன. நகர மையங்களான அரிக்கமேடு, உறையூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை, கேரளத்தில் பட்டணம் ஆகிய இடங்களில் இது போன்ற கைவினைப் பொருள் உற்பத்தி வளமையாக நடந்துள்ளன. மதுரைக்காஞ்சி பகல் மற்றும் இரவு நேரக் கடைவீதிகளையும் (நாளங்காடி, அல்லங்காடி) அங்கு விற்பனையாகும் பலவகைப்பட்ட கைவினைப் பொருள்கள் பற்றியும் பேசுகிறது. பல்வேறு வகைப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை. சிலர் விலையுயர்ந்த ஆபரணக் கற்களையும், ஓரளவு மதிப்புள்ள ஆபரணக் கற்களையும் பண்டமாற்றாகக் கொடுத்து மூலப் பொருள்களைப் பெற்றனர். அம்மூலப் பொருள்கள் தொழிற்கூடங்களைச் சென்றடைந்து பல்வேறு பொருள்களாகத் தயார் செய்யப்பட்டு, பின்னர் வேறு சில பொருள்களுக்காகப் பண்டமாற்று செய்யப்பட்டன.
மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ் மொழி பேசாத ஏனைய மக்கள், பெரும்பாலும் வணிகர்கள் நகரங்களிலும் தொழில் மையங்களிலும் இருந்ததைத் தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திரப் பொறியாளர்கள் போன்றோர் தமிழகக் கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக மணிமேகலை குறிப்பிடுகின்றது. தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. உப்பு வணிகர்கள் உமணர் என்றழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாத்து என்னும் சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களைக் குறிப்பதாகும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
கீழடியில் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing
Laboratory) அனுப்பப்பட்டன. இவற்றில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் கி.மு.(பொ.ஆ.மு.) 580 என ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவு
கீழடியில் தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கி.மு. 580 காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடும் அடங்கும். இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு
கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், புனேவின் தக்காண கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்த உடைந்த எலும்பு துண்டுகள் பகுப்பாய்வு அறிக்கையின்படி, வகைப்படுத்தப்பட்டதில் திமிலுள்ள பசு / காளை, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டடத் தொழில்நுட்பம்
தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுவதால் அக்காலகட்டம் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது.
நெசவுத் தொழில்
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள நூல் நூற்கப் பயன்படும் 180 - க்கும் மேற்பட்ட தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் (வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ) எலும்பினாலான கூரிய முனைகள் கொண்ட தூரிகைகள் (20), கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தறியில் தொங்கவிடும் குண்டு, செம்பினாலான ஊசி போன்ற தொல்பொருள்கள் இப்பகுதியில் நிலவியிருந்த நெசவுத் தொழிலின் நூல் நூற்றல், பாவு அமைத்தல், தறியிலமைத்தல், நெசவு அதன்பின் சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன.
வணிகம்
கீழடி அகழாய்வுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அகேட், கார்னீலியன் போன்ற மணிகள் செய்வதற்கான மூலப்பொருள்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் வழியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
கீழடியில் சிவப்பு வண்ண பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை பானைகள் கி.மு.2ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த தனித்தன்மை வாய்ந்த அரிட்டைன் வகையாகும்.
அணிகலன்கள் மற்றும் மணிகள்
தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்களின் சிறிய துண்டுகள், மதிப்புமிக்க மணிகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட வளையல்கள், சீப்புகள் ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்ககாலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும். மேலும், கண்ணாடி, படிகம், குவார்ட்ஸ், வண்ணம் தீட்டப்பட்ட மண்ணாலான மணிகள், அகேட், கார்னீலியன் மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இரும்பு பொருள்கள்
அகழாய்வில் இரும்பு ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுடுமண் உருவங்கள்
சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 600க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 28 காதணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள்
தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக்காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுது போக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை.
தட்டையான வடிவில் உள்ள பானை ஓட்டின் விளிம்புகள் நன்கு தேய்க்கப்பட்டு வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருள் ‘சில்லு’ என்றழைக்கப்படுகிறது. இவ்வகை சில்லுகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.
வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது. ரோம் தங்க வெள்ளி நாணயங்களும் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. ரோமப் பேரரசு தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற தொலைதூரத்தில் அமைந்துள்ள நாடுகளோடும் வணிகத் தொடர்புகள் மேற்கொண்டதைத் தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியாவின் தென் பகுதியில் கடற்கரைகளை எளிதாகச் சென்றடைய முடியும் என்ற சூழல் இருந்ததாலும், கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடல் வழிப் பாதையில் அமைந்திருந்த காரணத்தினாலும் கடல் கடந்த தொடர்புகளில் முக்கியப் பங்கு வகித்தது. தொடக்க வரலாற்றுக்கால துறைமுகங்கள் பலவற்றில் கிடைத்துள்ள அம்போரா என்னும் ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருள்கள், கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் சுட்டுகின்றன. ரோமானியர்களால் கொண்டுவரப்பட்ட செல்வம் அயல்நாட்டு வணிகர்களின் வருகை ஆகியவை குறித்து தொல்பொருள் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ரோமானியத் தங்க, வெள்ளி நாணயக் குவியல்கள் கோயம்புத்தூர் பகுதியிலும் தென்னிந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.