Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா

வரலாறு - சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா | 11th History : Chapter 5 : Evolution of Society in South India

   Posted On :  18.05.2022 05:07 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா

சாதவாகனர்கள் பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் தோன்றினர். மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில பகுதிகளை அவர்கள் ஆண்டனர்.

சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா

சாதவாகனர்கள் பொ..மு. முதலாம் நூற்றாண்டில் தக்காணப் பகுதியில் தோன்றினர். மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு சில பகுதிகளை அவர்கள் ஆண்டனர். அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளின்படி தெலங்கானா பகுதிகளில் ஆட்சியைத் தொடங்கிய சாதவாகனர் மகாராஷ்டிரப் பகுதிகளுக்கு நகர்ந்து, கோதாவரி நதித் தீரத்தில் பிரதிஸ்தான் (மகாராஷ்டிராவில் பைத்தன்) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தினர். பிளினியின் நூல் ஆந்திர நாட்டிலிருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள், ஒரு பெரும்படை, குதிரைப் படை, யானைப் படை ஆகியன குறித்து பேசுகிறது. சாதவாகன அரசர்களுள் கௌதமபுத்ர சதகர்னி பெரும் அரசராவார். சாகஅரசர்நாகபனாவை வென்ற அவர் நாகபனாவின் நாணயங்களைத் தன் அரச முத்திரையோடு மீண்டும் வெளியிட்டார். அவருடைய தாயான கௌதம பாலஸ்ரீ என்பாரின் நாசிக் கல்வெட்டு, சாகர் பகல்வர், யவனர்கள் ஆகியோரை இவர் வெற்றி கொண்டதாகக் கூறுகிறது. பெருமைக்குரிய அஸ்வமேத யாகத்தை இவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வசிஷ்டபுத்ர புலுமாயி, சாதவாகன நாட்டின் எல்லைகளை விரிவடையச் செய்தார். மற்றொரு புகழ்பெற்ற அரசரான யக்னஸ்ரீ சதகர்னி, தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் கப்பலின்வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்.


சாதவாகன அரசர் ஹாலா 700 காதற் பாடல்களைக் கொண்ட காஹாசப்தசதி என்ற நூலை இயற்றினார். மகாராஷ்டிரப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப் பொருளை ஒத்துள்ளன.

பொ.. மூன்றாம் நூற்றாண்டையொட்டி சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அவர்களைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் இக்சவாகுவும் அதனைத் தொடர்ந்து பல்லவர்களும், வட கர்நாடகப் பகுதிகளில் கடம்பர்களும் ஆட்சி புரிந்தனர்.

சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம்

நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் முக்கிய அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காணமுடிகிறது. நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது. இது காலப் போக்கில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் படிநிலைகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.

முதன்முதலாகத் தக்காணத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசு நிறுவப்பட்டது. பௌத்த சங்கங்களுக்கு என்றே பல குடைவரைக் குகைகள் உருவாக்கப்பட்டன. அவை உள்நாட்டுப் பகுதிகளையும் கொங்கணக் கடற்கரைப் பகுதியையும், உள்நாட்டு வணிகப் பாதைகளையும் இணைக்கும் புள்ளிகளாக அமைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகளை இவை கொண்டுள்ளன. இக்காலத்தில் இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே விறுவிறுப்பான வணிகம் நடைபெற்றது.


Tags : History வரலாறு.
11th History : Chapter 5 : Evolution of Society in South India : South India under the Satavahanas History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் : சாதவாகனர்கள் ஆட்சியின் கீழ் தென்னிந்தியா - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 5 : தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்