வரலாறு - தமிழ் திணைப் பகுதிகளில் சமூக உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
தமிழ் திணைப் பகுதிகளில் சமூக உருவாக்கம்
அக்காலத்தில் சமூக உருவாக்கத்தை நாம் புரிந்துகொள்ளச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. திணைக் கோட்பாட்டின் பின்புலத்தில் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் தெய்வம், மக்கள், சூழல் சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை எனத் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தது.
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதியுமாகும். இங்கு வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும் வழக்கமாக இருந்தது.
முல்லை
காடும் காடு சார்ந்த இடமுமான இங்கு, கால்நடை மேய்ப்பதும், அத்துடன் மாற்றிட வேளாண்மை செய்வதும் தொழிலாக இருந்தது.
மருதம் வயலும் வயல் சாந்த இடமுமான இங்கு நீர்பாசனத்தின் மூலம் கலப்பைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வது தொழிலாகும்.
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமுமான இங்கு மீன்பிடித்தலும் உப்பு உற்பத்தியுமே முக்கியத் தொழில்களாகும்.
பாலை மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலப்பகுதியான இங்கு வேளாண்மை சாத்தியமில்லை என்பதால் மக்கள் கால்நடைத் திருட்டையும் கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டனர்.