வரலாறு - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
கற்றல் நோக்கங்கள்
•
தென்னிந்தியாவில் பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த சமூக அரசியல் உருவாக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை நிறுவினர். இதற்கும் தெற்கே தமிழகத்தின் வளமான பகுதிகளை ஆண்டு வந்த, தமிழ் அரச மரபினரான சேர, சோழ பாண்டியர்கள் சாதவாகனரின் சம காலத்தவர் ஆவர். ஆனால் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டுகளில் மூவேந்தரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளதின் அடிப்படையில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழக அரசர்கள் தங்கள் அரசுகளை நிறுவி விட்டதை அறிய முடிகிறது. இவ்விரு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் முறை மற்றும் சமூகங்களிடையே பல பொதுவான அம்சங்கள் இருந்தன. வேறுபாடுகளும் நிலவின.
சான்றுகள்
தொல்பொருள்கள்
• தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்
• அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் கட்டட இடிபாட்டுத் தடயங்களைக் கொண்டுள்ளன, துறைமுகங்கள் தலைநகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
• ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும் சைத்தியங்களும் கூடிய பெளத்தத்தலங்கள் (அமராவதி, நாகார்ஜுனகொண்டா முதலானவை)
ஸ்தூபிகள்
ஸ்தூபி என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். இறந்தோரை எரித்த சாம்பல் இங்கு வைக்கப்படும். தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி எட்டு ஸ்தூபிகளில் வைக்கப்பட்டன. இவ்வாறு பௌத்தத்தின் புனிதக் கட்டடக்கலை தோற்றம் பெற்றது. அரைக்கோள வடிவமுள்ள ஸ்தூபி பேரண்டத்தைக் குறிக்கின்றது. அத்துடன் புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதையும் குறிக்கிறது. ஸ்தூபிகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டப் பாதையில் பக்தர்கள் வலம் வருவர்.
நாணயச் சான்றுகள்
• ஆந்திர - கர்நாடகப்பகுதிகளின் சாதவாகனர்கள் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்.
• சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெளியிட்ட நாணயங்கள்
• தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்
கல்வெட்டுகள்
• ஆந்திர - கர்நாடகப் பகுதிகளில் காணப்படும், பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகர் கல்வெட்டுகள்
• தமிழக, கேரளக் குகைகளில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் : மாங்குளம், ஜம்பை, புகளூர் முதலானவை
• ஆந்திரப் பகுதியிலுள்ள சாதவாகனர் கல்வெட்டுகளும் பிற பெளத்த கல்வெட்டுகளும்
• தமிழகப் பகுதியில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள், மோதிரம், கற்கள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள்; இந்தியாவிற்கு வெளியே பெரனிக்கே , குவாசிர் அல் காதம் (எகிப்து).
இலக்கியச் சான்றுகள்
• சங்க நூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்
• பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம்
• ஆந்திரர் /சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்
• மகாவம்சம் முதலான பெளத்த வரலாற்று நூல்கள்
• சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய காஹாசப்தசதி
தமிழ் செவ்வியல் இலக்கியம்
தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் (பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
வெளிநாட்டவரது குறிப்புகள்
கீழ்க்காணும் கிரேக்க, லத்தீன் சான்றுகள் தொலைதூர வணிகம், பண்பாட்டுத் தொடர்புகள் குறித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
• பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூலான எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்
• பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் மூத்த பிளினி எழுதிய ‘இயற்கை வரலாறு’ (Natural History)
• பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி எழுதிய ஜியோகிரபி (புவியியல்)
• ரோமானியரின் நிலவரைபடமான பீயூட்டெஞ்செரியன் அட்டவணை (Peutingerian Table)