வினவல் அமைப்பு மொழி - சில கூடுதல் DDL கட்டளைகள் | 12th Computer Science : Chapter 12 : Database concepts and MySql : Structured Query Language(SQL)
1. ALTER கட்டளை
ALTER கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணை வடிவமைப்பில் நெடுவரிசையை சேர்த்தல், ஏற்கனவே இருக்கும் புலத்திற்கு மறு பெயரிடல், எந்த ஒரு நெடுவரிசையின் தரவு வகையையோ அல்லது அளவினையோ மாற்றி அமைத்தல் நெடுவரிசையை அட்டவணையிலிருந்து நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்யலாம். அது கீழ்க்காணும் முறையில் பயன்படுத்தப்படுகிறது:
ALTER TABLE <table-name> ADD <column-name><data type><size>;
மாணவர் அட்டவணையில் char' என்ற தரவுவகை சார்ந்த "address” என்ற நெடுவரிசையை சேர்க்க, கட்டளையமைப்பு
ALTER TABLE Student ADD Address char;
அட்டவணையில் ஏற்கனவே இருக்கும் நெடுவரிசையை மாற்றியமைக்க, ALTER TABLE கட்டளை MODIFY clause உடன் பயன்படுத்தப்படுகிறது.
ALTER <table-name> MODIFY<column-name><data type><size>;
ALTER TABLE Student MODIFY Address char (25);
மேற்கண்ட கட்டளை மாணவர் அட்டவணையில் உள்ள address நெடுவரிசை இப்பொழுது 25 எழுத்துக்கள் வரை தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கும். ALTER கட்டளை கீழ்க்காணும் முறையில் ஏற்கனவே உள்ள நெடுவரிசைக்கு மறுபெயரிட பயன்படுகிறது:
ALTER <table-name> RENAME old-column-name TO new-column-name;
உதாரணத்திற்கு, address என்ற பெயரைக் கொண்ட நெடுவரிசைக்கு city என்று மறுபெயரிட உதவும் கட்டளை:
ALTER TABLE Student RENAME Address TO City;
ஒரு நெடுவரிசை அல்லது அனைத்து நெடுவரிசைகளையும் நீக்க, ALTER கட்டளையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ALTER TABLE-ன் DROP COLUMN ஐ பயன்படுத்தி, குறிப்பிட்ட நெடுவரிசையை நீக்கலாம். கட்டளை:
ALTER <table-name> DROP COLUMN <column-name>;
மாணவர் அட்டவணையில் city என்ற நெடுவரிசையை நீக்க, பயன்படும் கட்டளை:
ALTER TABLE Student DROP COLUMN City;
2. TRUNCATE கட்டளை
TRUNCATE கட்டளை அட்டவணையிலுள்ள அனைத்து வரிசைகளையும் நீக்கப் பயன்படுகிறது. அட்டவணையின் வடிவமைப்பு மாறாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் விடுவிக்கப்படும் TRUNCATE கட்டளையின் தொடரியல்
TRUNCATE TABLE table-name;
உதாரணத்திற்கு, மாணவர் அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும், அட்டவணையையும் நீக்குவதற்கான கட்டளை :
TRUNCATE TABLE Student;
மாணவர் அட்டவணை நீக்கப்பட்டு, நினைவகப்பகுதி விடுவிக்கப்படுகிறது.
3. DROP TABLE கட்டளை
DROP TABLE கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்கப் பயன்படுகிறது. ஒரு அட்டவணையை DROP செய்தால், அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டு, அட்டவணையின் வடிவமைப்பு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். அட்டவணையை DROP செய்த பின்பு, அதனை திரும்ப பெற இயலாது. ஆதலால், DROP TABLE கட்டளையை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஒரு அட்டவணையை DROP செய்ய வேண்டுமெனில், அது காலி அட்டவணையாக இருக்க வேண்டும். அட்டவணையின் அனைத்து வரிசைகளையும் DELETE கட்டளை கொண்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து வரிசைகளையும் நீக்க, தேவையான கட்டளை:
DELETE * FROM Student;
அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டப் பின்பு, கீழ்க்காணும் முறையில் DROP TABLE கட்டளையை பயன்படுத்தி அட்டவணையை நீக்கலாம்.
DROP TABLE table-name;
உதாரணத்திற்கு மாணவர் அட்டவணையை நீக்க:
DROP TABLE Student;
DELETE, TRUNCATE AND DROP கூற்று:
DELETE DELETE கட்டளை WHERE clause-ல் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனையின் அடிப்படையில், அட்டவணையின் குறிப்பிட்ட வரிசைகளை மட்டும் நீக்கும் அல்லது எந்த வித நிபந்தனையும் கொடுக்கப்படவில்லையெனில், அட்டவணையின் அனைத்து வரிசைகளையும் நீக்கி விடும். ஆனால் அட்டவணைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை விடுவிக்காது.
TRUNCATE TRUNCATE கட்டளை அட்டவணையின் அனைத்து வரிசைகளையும் நீக்கி, வடிவமைப்பை மாற்றாமல், அட்டவணைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை விடுவிக்கும்.
DROP DROP கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு உறுப்பை நீக்க பயன்படுகிறது. ஒரு அட்டவணையை DROPசெய்தால், அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டு, அட்டவணையின் வடிவமைப்பு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். ஒரு அட்டவணையை DROP செய்துவிட்ட பின்பு, அதனை திரும்பப் பெற இயலாது.