Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவில் நீர்ப்பாசனம்
   Posted On :  27.07.2022 06:26 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை

இந்தியாவில் நீர்ப்பாசனம்

வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

நீர்ப்பாசனம்

வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

நீர்ப்பாசன ஆதாரங்கள் (அ) மூலங்கள்

நிலத்தோற்றம், மண், மழைப் பொழிவு, நிலநீர் மற்றும் நிலத்தடி நீர் இருப்பு ஆற்றின் இயல்பு (வற்றும் ஆறு, வற்றாத ஆறு) பயிர்களின் தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான நீர்ப்பாசன வகைகள் பயன்பாட்டில் உள்ளன.

பாசன மூலங்களாவன:

 கால்வாய் பாசனம்

 கிணற்றுப் பாசனம் மற்றும்

 ஏரிப் பாசனம்



    நீர்ப்பாசனத்தின் பரப்பளவு


அ. கால்வாய் பாசனம்

கால்வாய் பாசனம் இந்தியாவின் இரண்டாவது மற்றும் முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும்.

தாழ்வான மற்றும் சமமான நிலப்பகுதி, பருமன் மிகுந்த வளமான மண், வற்றாத நீர் மூலங்கள் மற்றும் அதிக நீர்பிடிப்புக் கொண்ட பகுதிகளில் கால்வாய் பாசனம் முக்கிய ஆதாரமாக உள்ளது.

கால்வாய்ப்பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. வெள்ளப் பெருக்கு கால்வாய்

இவ்வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடுப்பணைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது. இவ்வகை கால்வாய்கள் வெள்ளக் காலங்களில் தண்ணீரை திசை திருப்பப் பயன்படுவதோடு மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

2. வற்றாத கால்வாய்

இவ்வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதலாகும். கால்வாய் பாசனத்தில் 60 சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.

 

ஆ) கிணற்றுப் பாசனம்

கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும். இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பான ஆதாரமாக உள்ளது. மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது.

கிணறுகள் இரண்டு வகைப்படும் அவை:

1. திறந்தவெளிக் கிணறுகள்

2. ஆழ்துளைக் கிணறுகள்

1. திறந்த வெளிக் கிணறுகள்

நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகின்றது. இப்பாசனம் கங்கை சமவெளி, மகாந்தி, கோதாவரி, கிருஷ்ணா , காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

2. ஆழ்த்துளைக் கிணறு

ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகள் மற்றும் மென்பாறைகள் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.

 

இ) ஏரிப்பாசனம்

ஏரி என்பது புவியின் மேற்பகுதியில் இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்வான நீர் தேங்கும் பகுதியாகும். பொதுவாக இவை ஆற்றின் குறுக்கே ஏற்படுத்தப்பட்டு ஏரியைச் சுற்றிலும் கரைகள் கட்டப்படுகின்றன. இங்கு நீரைச் சேகரித்து வேளாண்மை மற்றும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரிப்பாசனம் இந்தியாவின் மிகப் பழமையான பாசன முறையாகும்.

இப்பாசனமுறை ஏரிகள் மற்றும் குளங்களையும் உள்ளடக்கியது.

தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் சிறந்து விளங்க கீழ்க்கண்ட காரணிகள் முக்கியமானவைகளாகும்.

1) கடினமானப் பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றம் உள்ள பகுதிகளில் கால்வாய்கள், மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு கடினமாக உள்ளது. 

2) இயற்கையாக உருவான பள்ளங்கள் நீர்தேக்கங்களாக பயன்படுகின்றன.

3) இப்பகுதியில் வற்றாத ஆறுகள் இல்லாமை.

4) நீர்புகாப் பாறைகளில் நீர் கசிவு ஏற்படாது.

5) குறைவான மக்கள் தொகைப் பரவலும் குறைவான வேளாண் நிலங்களும் உள்ளது.

நவீன நீர்ப்பாசன முறைகள்:

இந்தியாவில் பல நவீன நீர்ப்பாசன முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முதன்மையானவை, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு முறை பாசனம் மற்றும் மையச்சுழல் நீர்ப்பாசனம் ஆகியனவாகும்.

சொட்டு நீர்ப்பாசனம்

இவ்வகை நீர்ப்பாசனம் இஸ்ரேல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் நீரானது குழாய்களில் உள்ள துவாரங்கள் வழியாக நீர் துளிகளாக பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் 70 சதவிகித நீர் சேமிக்கப்படுகிறது.

தெளிப்பு நீர்ப்பாசனம்

இது மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர்ப்பாசன வகையாகும். இம்முறையில் குழாயில் போடப்பட்டுள்ள நுண் துளைகள் வழியாக பயிர்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இவ்வகை பாசனத்தை சமனற்ற நிலப்பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம்

இவ்வகை நீர்ப்பானத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரை உள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம். கரும்பு மற்றும் சோளப் பயிர்களுக்கும் பாசனம் உதவிகரமாக உள்ளது.

மையத் தெளிப்பு நீர்ப்பாசனம்

இவை வட்டச் சக்கர நீர்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றிற்கான உபகரணத்தின் மையப்பகுதியில் உள்ள கருவி சுழன்று அவற்றைச் சுற்றியுள்ள பயிர்களுக்கு நீர்ப் பாசனத்தை அளிக்கிறது.

பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்

இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது. நீர்ப்பாசனம், நீர்மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கு நீர் வழங்குதல், வெள்ளத்தடுப்பு, மீன்வள மேம்பாடு, நீர் வழிப் போக்குவரத்து போன்றவை இதன் பல்வேறு நோக்கங்களாகும். நீர் மின் சக்தி மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை பெரும்பாலான பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.


உங்களுக்குத் தெரியுமா?

பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா - (PMKY)

குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.

 

 

 

10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : Sources of Irrigation in India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை : இந்தியாவில் நீர்ப்பாசனம் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 3 : இந்தியா - வேளாண்மை