பொருளியல் - வரி, வரி அமைப்பு | 10th Social Science : Economics : Chapter 4 : Government and Taxes
வரி
"வரி" என்ற சொல் "வரிவிதிப்பு"
என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
வரி விதிப்பு என்பது
அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு
நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும். அரசு
இயந்திரங்களின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின்
முக்கிய நோக்கமாகும். வரிவிதிப்பு முறை “நல அரசு” என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. வரிகள் என்பது
எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய
கட்டணமேயாகும்.
பேராசிரியர் செலிக்மேன்
கருத்துப்படி, “வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும்
செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல்
கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி" என வரையறை கூறுகிறார்.
வரி
அமைப்பு
ஒவ்வொரு
வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன. நாம் கொண்டுள்ள வரி
அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும்.
ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக்
கொடுத்துள்ளனர். அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
வரி ஒரு
கட்டாயக் கட்டணம் என்பதால், வரி
முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார
வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு
அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால்
ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
ஒவ்வொரு
வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த
வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரிமுறையை முன் கூட்டியே அறிவிக்க
வேண்டும்.
வரி
எளிமையானதாக இருந்தால், வரி
வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக்
குறைவாக இருக்கும். மேலும், ஒரு
நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட
வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.
அரசாங்கம்
போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். நிறைய
வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய
வேண்டும். இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி
செலுத்துகிறார்கள். எனவே, மக்கள்
வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு
வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.
வரலாற்று
காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின்
மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவேற்றியிருக்கின்றது. அவைகளில் சில
பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள்,
(போக்குவரத்து, துப்புரவு, பொது
பாதுகாப்பு, கல்வி, உடல் நலம்) இராணுவம், அறிவியல்
ஆராய்ச்சி, கலாச்சாரம்,
கலைகள், பொதுப்பணிகள்,
பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள்
போன்றவைகளாகும். வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் ‘நிதித்
திறன்’ என்று கூறப்படுகிறது.
செலவானது, வரி
வருவாயைவிட அதிகமாக இருக்கும் போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது. வரிகளின் ஒரு
பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அரசாங்கம்
மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தலாம்.
இந்த சேவைகளில் கல்வி
முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை
சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும். ஆற்றல், நீர்
மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை மக்களுக்கான பயன்பாடுகளாகும்.
உங்களுக்குத்
தெரியுமா?
இந்தியாவில்
வரி விதிப்பின் வேர்கள் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்த சாஸ்திர
காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி
முறையை அடிப்படையாகக் கொண்டது.