தாவரங்களில் இனப்பெருக்கம் - அயல் மகரந்தச்சேர்க்கைக்கான காரணிகள் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
அயல்
மகரந்தச்சேர்க்கைக்கான காரணிகள்
மலரில் அயல் மகரந்தச்
சேர்க்கை நடைபெற வேண்டுமெனில் மகரந்தத்தூளானது ஒரு மலரிலிருந்து மற்றொரு
தாவரத்தில் உள்ள மலருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இது புறக்காரணிகளான
விலங்குகள், பூச்சிகள், காற்று, நீர்
முதலானவற்றால் நடைபெறுகிறது.
காற்றின் மூலம் நடைபெறும்
மகரந்தச் சேர்க்கை அனிமோஃபிலி எனப்படும். இவ்வகை மலர்கள் ஏராளமான
மகரந்தத்தூள்களை உற்பத்தி செய்கின்றன. மகரந்தத்தூள்கள் சிறியதாகவும், மென்மையானதாகவும்,
உலர்ந்ததாகவும், எடை குறைவாகவும் உள்ளன.
இவ்வகைத் தாவரங்களின் மகரந்தத்தூள்கள் 1000 கி.மீ.
தூரத்துக்கு மேல் கடக்கின்றன. சூல் முடியானது பெரியதாகவும் வெளியே நீட்டிக்
கொண்டும் இருக்கும். சில நேரங்களில் கிளைத்து முடி போன்று மகரந்தத் தூளைப்
பிடித்துக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும். எ.கா புல் மற்றும் சில கள்ளிச் செடிகள்.
தேனீக்கள், ஈக்கள்
முதலான பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு எண்டமோஃபிலி என்று
பெயர். பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றாற் போல பல நிறம், மணம்,
தேன் சுரக்கும் தன்மை ஆகியவற்றுடன் இவ்வகை மலர்கள் காணப்படும்.
இவ்வகை மலர்களில் மகரந்தத்தூள் பெரியதாகவும் வெளியுறையானது துளைகளுடனும்
வெளிப்பக்கத்தில் முட்களுடனும் காணப்படும். பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்
சேர்க்கையில் ஏறத்தாழ 80% மகரந்தச் சேர்க்கையானது
தேனீக்களால் நடைபெறுகிறது.
நீரின் மூலம் நடைபெறும்
மகரந்தச் சேர்க்கைக்கு ஹைட்ரோஃபிலி என்று பெயர். இது நீர்வாழ் தாவரங்களில்
நடைபெறுகிறது. இவ்வகைத் தாவரங்களில் (i) மகரந்தத்தூள் அதிக அளவில் உருவாகின்றன. (ii)
மகரந்தத்தூள்கள் பெண் மலர்களில் உள்ள சூலகமுடியை அடையும் வரை நீரில்
மிதந்து கொண்டிருக்கும். எ.கா. ஹைட்ரில்லா, வாலிஸ்நீரியா
விலங்குகள் மூலம்
நடைபெறும் மகரந்தச்சேர்க்கை, விலங்குகள் வழி
மகரந்தச்சேர்க்கை (சூஃபிலி) எனப்படும். இவ்வகை மகரந்தச்சேர்க்கையில் மலர்கள்,
விலங்குகளைக் கவர்வதற்காகப் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டவையாகவும்
அளவில் பெரியவையாகவும் மிகுந்த மணம் கொண்டவையாகவும் இருக்கும்.
எ.கா. தேன்சிட்டு பறவை மூலம் கல்வாழை, கிளாடியோலி போன்ற தாவரங்களில்
மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
அணில்கள் மூலமாக இலவம்
பஞ்சு மரத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.