தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் ___________.
அ) வெங்காயம்
ஆ) வேம்பு
இ) இஞ்சி
ஈ) பிரையோஃபில்லம்
2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம்
இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ___________.
அ) அமீபா
ஆ) ஈஸ்ட்
இ) பிளாஸ்மோடியம்
ஈ) பாக்டீரியா
3. சின்கேமியின் விளைவால் உருவாவது ___________.
அ) சூஸ்போர்
ஆ) கொனிடியா
இ) சைகோட் [கருமுட்டை]
ஈ) கிளாமிடோஸ்போர்கள்
4. மலரின் இன்றியமையாத பாகங்கள் ___________.
அ) புல்லிவட்டம், அல்லிவட்டம்
ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள்
வட்டம்
இ) அல்லிவட்டம், சூலக வட்டம்
ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
5. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும்
மலர்களில் காணப்படும் பண்புகள்
அ) காம்பற்ற சூல்முடி
ஆ) சிறிய மென்மையான சூல்முடி
இ) வண்ண மலர்கள்
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி
6. மூடிய விதையுடைய தாவரங்களில்
(ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
அ) உற்பத்தி செல்
ஆ) உடல செல்
இ) மகரந்தத்தூள் தாய் செல்
ஈ) மைக்ரோஸ்போர்
7. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
அ) இருமயம் கொண்டவை
ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை
இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
8. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான,
முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) எபிடிடைமிஸ்
ஆ) விந்து நுண்நாளங்கள்
இ) விந்து குழல்கள்
ஈ) விந்துப்பை நாளங்கள்
9. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய
நீட்சியடைந்த செல்கள்
அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு
ஆ) செர்டோலி செல்கள்
இ) லீடிக்செல்கள்
ஈ) ஸ்பெர்மட்டோகோனியா
10. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது ----------------.
அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு
ஆ) முதன்மை பாலிக்கிள்கள்
இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்
ஈ) கார்பஸ் லூட்டியம்
11. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?
அ) காப்பர் - டி
ஆ) மாத்திரைகள் [Oral Pills]
இ) கருத்தடை திரைச் சவ்வு
ஈ) அண்டநாளத் துண்டிப்பு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது
சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது
2. கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனி ஆக மாறுகிறது.
3. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் இழப்பு மீட்டல் ஆகும்.
4. மனிதரில் கருவுறுதல் அகக் கருவுறுதல் ஆகும்,
5. கருவுறுதலுக்குப் பின் 6 முதல் 7 நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
6. குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால்
சுரக்கப்படும் முதல் சுரப்பு கொலஸ்ட்ரம் (சீம்பால்) எனப்படும்.
7. புரோலாக்டின் பிட்யூட்டரி
சுரப்பி ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
III. பொருத்துக:
i) கலம் – I : கலம் - II
1. பிளத்தல் - ஸ்பைரோகைரா
2. மொட்டு விடுதல் - அமீபா
3. துண்டாதல் - ஈஸ்ட்
விடை:
1. பிளத்தல் - அமீபா
2. மொட்டு விடுதல் - ஈஸ்ட்
3. துண்டாதல் - ஸ்பைரோகைரா
ii)
1. குழந்தை பிறப்பு - கருவுறுதலுக்கும்
குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால
அளவு
2. கர்ப்ப காலம் - கருவுற்றமுட்டை
எண்டோமெட்ரியத்தில் பதிவது
3. அண்ட அணு வெளியேற்றம் - கருப்பையிலிருந்து
குழந்தை வெளியேற்றம்
4. கருப்பதித்தல் - கிராஃபியன்
பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதல்
விடை:
1. குழந்தை பிறப்பு - கருப்பையிலிருந்து
குழந்தை வெளியேற்றம்
2. கர்ப்ப காலம் - கருவுறுதலுக்கும்
குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு
3. அண்ட அணு வெளியேற்றம் - கிராஃபியன்
பாலிக்கிள்களிலிருந்து முட்டை வெளியேறுதல்
4. கருப்பதித்தல் - கருவுற்றமுட்டை
எண்டோமெட்ரியத்தில் பதிவது
IV. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.
1. சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
விடை: தவறு
சூலின் காம்புப் பகுதி சூல்காம்பு எனப்படும்.
2. விதைகள் பாலினப்பெருக்கத்தின் மூலம்
உருவாகின்றது.
விடை: சரி
3. ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல்
மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
விடை: தவறு
ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
4. மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி
சூல்தண்டாகும்.
விடை: தவறு
மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல்முடியாகும்.
5. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும்
மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.
விடை: தவறு
பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள
மகரந்தத்தூள்கள் பெரியதாகவும், வெளியுறையானது
துளைகளுடன் வெளிப்பக்கத்தில் முட்களுடன் காணப்படும்.
6. இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய
இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.
விடை: தவறு
இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள்
ஒற்றைமயத் தன்மையுடையவை.
7. பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH - ஐச் சுரக்கிறது.
விடை: தவறு
பிட்யூட்டரியின் பின்கதுப்பு ஆக்ஸிடோசினை சுரக்கிறது.
8. கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி
நடைபெறுவதில்லை.
விடை : சரி
9. இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான
கருத்தடை முறை தடை செய்கிறது.
விடை: சரி
10. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகை
சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.
விடை: தவறு
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் குறைவான சுரப்பு
மாதவிடாய்க்கு காரணமாகிறது.
V. ஒரிரு வாக்கியத்தில் விடையளி:
1. ஒரு மகரந்தத்தூளிலிருந்து இரண்டு ஆண் கேமீட்டுகள்
மட்டும் உருவாகிறது எனில், பத்து சூல்களை கருவுறச் செய்ய
எத்தனை மகரந்தத்தூள்கள் தேவைப்படும்?
10 மகரந்த தூள்கள் தேவைப்படும்.
2. சூலகத்தின் எப்பகுதியில் மகரந்தத்தூள் முளைத்தல்
நடைபெறுகிறது?
சூல்முடி பகுதியில் மகரந்தத்தூள் முளைத்தல் நடைபெறுகிறது.
3. மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும்
இரண்டு உயிரினங்களைக் குறிப்பிடவும்.
மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இரண்டு உயிரினங்கள்
ஹைட்ரா மற்றும் ஈஸ்ட் ஆகும்.
4. ஒரு விதையில் உள்ள கருவூணின் வேலை என்ன?
கருவூண், உருவாகும் கருவிற்கு
ஊட்டம் கொடுக்கிறது.
5. கருப்பையின் அதிதீவிர தசைச் சுருக்குதலுக்கு
காரணமான ஹார்மோனின், பெயரைக் கூறுக.
கருப்பையின் அதிதீவிர தசைச் சுருக்குதலுக்கு காரணமான ஹார்மோன்
ஆக்ஸிடோசின்.
6. விந்துசெல்லின் அக்ரோசோமில் காணப்படக்கூடிய
நொதியின் பெயரென்ன?
விந்துசெல்லின் அக்ரோசோமில் காணப்படக்கூடிய நொதியின் பெயர்
ஹயலுரானிடேஸ் ஆகும்.
7. உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போது
கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு வருடமும் மே 28
ஆம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.
8. கருத்தடையின் தேவை என்ன?
கருத்தடையின் தேவை குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்துதல் ஆகும்.
9. கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க
மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது?
அ) கருவுறுதல் ஆ) பதித்தல்
அ) கருவுறுதல் = பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் உள்ள அண்ட
நாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது.
ஆ) பதித்தல் - பெண்ணின் கருப்பையின் சுவரில் நடைபெறுகிறது.
VI. குறு வினாக்கள் :
1. பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன
நிகழும்?
பிளனேரியாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு சிறு துண்டும்
ஒரு பிளனேரியாவைத் தோற்றுவிக்கும்.
2. உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில்
மட்டும் நடைபெறுகிறது?
உடல இனப்பெருக்கம் நடைபெறுவதில் குன்றல் பகுப்பு மட்டும்
நடைபெறுவதால் இளம் தாவரங்கள் தாய்த் தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன. பாலினச்
செல்கள் இணையாமல் நடைபெறுவதால் சில குறிப்பிட்ட தாவரங்களில் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
3. இரண்டாகப் பிளத்தல் பல் கூட்டுப்பிளத்தலிலிருந்து
எவ்வாறு வேறுபடுகிறது?
இரண்டாகப் பிளத்தல்
இரண்டு சேய் உயிரினங்கள் மட்டுமே கிடைக்கிறது
பல்கூட்டுப் பிளத்தல்
பல சேய் உயிரினங்கள் தோன்றுகின்றன
4. மூவிணைவு - வரையறு.
தாவரங்களில் கருவுறுதல் நடைபெறும் போது உற்பத்தி செல் பகுப்படைந்து
இரண்டு ஆண் இனச் செல்களை உருவாக்குகிறது. ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய
சைகோட்டைத் தோற்றுவிக்கிறது. மற்றோர் ஆணின் செல் இரட்டை மய உட்கருவுடன் இணைந்து
முதன்மைக் கருவூண் உட்கருவைத் தோற்றுவிக்கிறது. இது மும்மய உட்கரு ஆகும். இந்த
மும்மய உட்கரு தோற்றுவிக்கப்படுவது மூவிணைவு எனப்படும்.
5. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும்
மலரின் பண்புகள் யாவை?
பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றாற் போல பல நிறம், மணம், தேன் சுரக்கும் தன்மை
போன்ற பண்புகளுடன் மலர்கள் காணப்படும். மகரந்த தூள் பெரிதாகவும், வெளியுறையானது துளைகளுடன், வெளிப்பக்கத்தில்
முட்களுடன் காணப்படும்.
6. ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக்
கூறுக.
ஆண்களில் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகள் விந்துக்குழல், எபிடிடைமிஸ், விந்துப்பை,
புராஸ்டேட் சுரப்பி மற்றும் ஆண்குறி முதலானவை.
7. கொலஸ்ட்ரம் (சீம்பபால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது?
குழந்தை பிறப்பிற்கு பிறகு முதல் 2 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் மார்பகங்களால்
சுரக்கப்படும் பால் சீம்பால் (கொலஸ்ட்ரம்) எனப்படும். முன் பிட்யூட்டரி சுரக்கும்
புரோலாக்டின் என்னும் ஹார்மோன் பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலைத்
தூண்டுகிறது. பின் பிட்யூட்டரியின் ஹார்மோனான ஆக்ஸிடோசின் பால் வெளியேறுதலைத்
தூண்டுகிறது.
8. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு
பராமரிக்கப்படுகிறது?
• நாப்கின்களை முறையாக, குறிப்பிட்ட
இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும்
தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும்
தடுக்கலாம்.
• பிறப்புறுப்புகளை வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம்
மாதவிடாய் நாள்களில் ஏற்படும் தசைப்பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
• இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான
ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன்
மூலம் வியர்வை உருவாதல் தடுக்கப்படுகிறது.
9. தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது எவ்வாறு
ஊட்டம் பெறுகிறது?
தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது தாய் சேய் இணைப்புத் திசுவின்
மூலம் ஊட்டம் பெறுகிறது. தாய் சேய் இணைப்புத் திசுவானது தட்டு வடிவமான சுருப்பைச்
சுவருடன் இணைந்து வளரும் கருவிற்கும் தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை
ஏற்படுத்தும் ஓர் அமைப்பு. இது உணவுப் பொருள்களின் பரிமாற்றம் ஆக்ஸிஜன் பரவல்
மற்றும் நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் கார்பன் டை ஆக்சைடை நீக்குதல் போன்ற
பணிகளைச் செய்கிறது.
10. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்
A) எக்சைன்
B) இன்டைன்
C) உற்பத்தி செல்
D) உடல் உட்கரு
11. பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால்
இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.
அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.
ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும் தீமைகளைக்
குறிப்பிடுக.
பூக்கும் தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை மற்றும் கருவுறுதல்
நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நிகழ்வு மகரந்தச்சேர்க்கை :
பூவின் மகரந்தப்பையிலிருந்து மகரந்தத்தூள் சூலகமுடியைச் சென்று
அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
1. தன் மகரந்தச்சேர்க்கை
2. அயல் மகரந்தச்சேர்க்கை
தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி):
ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே
தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை
எனப்படும். எ.கா - ஹைபிஸ்கஸ்
தன் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்:
• இருபால் மலர்களில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
• மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
• மகரந்தத்தூள்கள் வீணடிக்கப்படுவதில்லை.
தன் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:
• விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
• கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.
• புதிய வகைத் தாவரம் உருவாகாது.
அயல் மகரந்தச்சேர்க்கை (அல்லோகேமி):
• ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின்
மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
எ.கா - ஆப்பிள், திராட்சை,
பிளம் முதலியன.
அயல் மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள்:
• அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். இதன் மூலம் புதிய
வகைத் தாவரங்கள் உருவாகின்றன.
• நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.
அயல் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:
• அயல் மகரந்தச்சேர்க்கை, புறக்காரணிகளை
நம்பி இருப்பதால் மகரந்தச்சேர்க்கை தடைபடுகிறது.
• அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
• சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.
• மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.
12. விந்தகம் மனிதனில் வயிற்றுக்குழிக்கு
வெளிப்புறத்தில் அமைந்திருப்பதன் காரணம் என்ன? அவற்றைக்
கொண்டிருக்கும் பையின் பெயரென்ன?
விந்து செல்லானது ஒரு குறிப்பிட்ட உடல் வெப்பநிலையில் மட்டுமே
உற்பத்தியாகும். நம்முடைய உடல் வெப்பநிலையைவிட குறைவான வெப்பநிலையில் உற்பத்தி
செய்யப்படும். எனவே அவை உடலுக்கு வெளியே அமைந்து உள்ளது.
13. மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்பு நிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
மாதவிடாய் சுழற்சியில் லூட்டியல் நிலையில் LH மற்றும் FSH குறைதல் கார்பஸ்
லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு குறைந்து மாதவிடாய்
ஏற்படுதல். கருவுருதல் நிகழாத போது கார்பஸ் லூட்டியம் சிதைந்து விடுதல் போன்றவை
நிகழ்வதால் சுரப்பு நிலை என அழைக்கப்படுகிறது.
14. நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்
அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன?
படிப்பின்மை, பயம், மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் குறைபாடுகளை தெரிந்து கொள்ளாமை போன்ற
காரணங்களினால் அனைத்து மக்களாலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.
VII. நெடு வினாக்கள்:
1. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை
விளக்குக.
விடை:
• சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும்.
• இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
• மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல்துளை ஆகும்.
• சூலானது சூல் அறையினுள் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக்
கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூல் அடி
எனப்படும்.
• கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு
உட்கருக்களும் அமைந்துள்ளன.
• சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.
• அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ செல்களாக
உள்ளன.
• மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
• அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும்
கொண்டுள்ளது.
• இந்த பக்கவாட்டு செல்கள் சினையாற்றியம் என அழைக்கப்படுகின்றன.
2. மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக்
குறிப்பிடுக.
விடை:
(1) மாதவிடாய் அல்லது அழிவு நிலை
(2) பாலிக்குலார் அல்லது பெருக்க
நிலை
(3) அண்டம் விடுபடும் நிலை
(4) லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை
VIII.
உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)
1. பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து
மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும்
போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச்
செல்லப்படுகிறது?
ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டை மய சைகோட்டைத்
தோற்றுவிக்கிறது. மற்றோர் ஆணின் செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை
கருவூண் உட்கருவினைத் தோற்றுவிக்கிறது. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது. எனவே இரண்டு
ஆண் கேமிட்டுகள் எடுத்துச் செல்கிறது.
2. பருவமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின்
போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை. ஏன்?
பருவமடைவதற்கு முன் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு மிக குறைவாக
காணப்படும். புரோஜெஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைவாக இருப்பதால்
அண்டம் உருவாவதில்லை.
கருவுற்ற காலத்திற்கு பின் கர்ப்ப காலம் வரை கார்பஸ்லூட்டியத்தால்
சுரக்கப்படும் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் கருப்பையின் சுவரை தடிமனாகவும்
மற்றும் மற்ற பாலிக்கிள்கள் முதிர்ச்சியடைவதைத் தடுப்பதாலும் அண்டம் உருவாவதில்லை.
எனவே மாதவிடாய் நிகழ்வு நடைபெறுவதில்லை.
3. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள
வினாக்களுக்கு விடையளி:
ராகினியும் அவளது பெற்றோரும் தொலைக்காட்சி
நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாப்கின்கள் பயன்படுத்துவதை
ஊக்குவிக்கும் விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே, ராகினியின் பெற்றோர்கள் அந்த சேனலை மாற்றினர்.
ஆனால் ராகினி அதற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த
விளம்பரத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கினாள்.
அ) முதல் மாதவிடாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அது எப்போது நிகழ்கிறது?
ஆ) மாதவிடாயின் போது மேற்கொள்ள வேண்டிய
நாப்கின் சுகாதாரத்தை வரிசைப்படுத்துக.
இ) தன் பெற்றோரின் இச்செயலுக்கு ராகினி தனது
எதிர்ப்பைத் தெரிவித்தது சரியா? சரி
எனில் விளக்கம் கூறுக.
அ) முதல் மாதவிடாய் பூப்படைதல் (Menarche) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெண்களின் வயது 11 முதல் 13 வயதிற்குள் நடைபெறுகிறது.
ஆ) நாப்கின் சுகாதாரம்:
1. நாப்கின்கள் மற்றும் டாம்பூன்ஸ் (உறிபஞ்சுகள்)களைப்
பயன்படுத்திய பிறகு மூடப்பட்ட நிலையில் (தாள்களைக் கொண்டு, அப்புறப்படுத்தப்பட
வேண்டும். ஏனெனில் அவை மூலம் நோய் பரவும்.
2. பயன்படுத்திய நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை
கழிவறை சாதனங்களுக்குள் போடக்கூடாது.
3. பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டிகளைப் (Incinerator)
பயன்படுத்தி முறையாக அகற்ற வேண்டும்.
இ) ராகினியின் எதிர்ப்பு சரியானது.
ஏனெனில் நாப்கின் விளம்பரமானது நாப்கினைப் பற்றி தெளிவாக தெரிந்து
கொள்ள உதவுவதுடன் அவற்றை எந்நேரங்களில் எவ்வாறாக பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன்
பயன்கள் என்ன? போன்ற பல வினாக்களுக்கான விடைகளை
தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் இதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வும்
ஏற்படுத்துகிறது. எனவே ராகினியின் எதிர்ப்பு சரியானது.