தாவரங்களில் இனப்பெருக்கம் - உடல இனப் பெருக்கம் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
உடல
இனப் பெருக்கம்
இந்த வகை
இனப்பெருக்கத்தில் புதிய இளந்தாவரங்கள், தாவரத்தின் ஏதேனும் ஒரு பாகத்தில் உள்ள உடல்
செல்களிலிலிருந்து தோன்றுகின்றன. தாய்த் தாவரத்தில் உள்ள வேர், தண்டு, இலை அல்லது மொட்டு முதலான ஏதேனும் ஓர்
உறுப்பிலிருந்து இளந்தாவரம் தோன்றி அது தனித்தாவரமாக வளர்கிறது. இவ்வாறு இனப்
பெருக்கம் நடைபெறுவதில் குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மட்டும் நடைபெறுவதால்
இளந்தாவரங்கள், தாய்த் தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன.
இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறும் போது பாலின செல்கள் (இனச்செல்கள் ) இணைவதில்லை.
இரணக்கள்ளி
(பிரோயோஃபில்லம்) தாவரத்தின் இலைகளின் விளிம்பில் உள்ள பள்ளங்களிலிருந்து
இளந்தாவரம் தோன்றுகிறது.
ஸ்ட்ராபெர்ரி முதலான
மெலிந்த தண்டுகளை உடைய தாவரங்களின் தண்டு தரையில் படும் போது அந்தத் தண்டுப்
பகுதியிலிருந்து தரையில் வேர் ஊன்றி புதிய இளந்தாவரம் தோன்றுகிறது. தாய்த்
தாவரத்தில் உள்ள தொடர்பு அறுபடும் போது இளந்தாவரம், தனித் தாவரமாக வளர்கிறது.
அஸ்பராகஸ், சர்க்கரைவள்ளிக்கிழங்கு
முதலான தாவரங்களின் வேர்க்கிழங்குகள் உடல இனப்பெருக்கத்திற்குப் பயன்படுகின்றன.
சில தாவரங்களில் பூவின்
மொட்டானது ஓர் உருண்டை வடிவக் குமிழ் போன்ற அமைப்பை உருவாக்குகின்றது. இதனைக்
குமிழம் என்கிறோம். இந்தக் குமிழம் தரையில் விழுந்து வேரூன்றிப் புதிய
இளந்தாவரத்தை உருவாக்குகிறது. எ.கா. கற்றாழை
அ. துண்டாதல்
துண்டாகும் இயல்புடைய
இழைகளைக் கொண்ட பாசிகளிலிருந்து ஏற்படும் துண்டுகளிலிருந்து புதிய இளந்தாவரம்
உருவாகிறது. ஒவ்வொரு சிறிய துண்டுப் பாசியிலும் குறைந்தது ஒரு செல்லாவது இருந்தால்
மட்டுமே புதிய தாவரம் உருவாகும். எ.கா. ஸ்பைரோகைரா
ஆ. பிளத்தல்
இந்த வகை
இனப்பெருக்கத்தில் தாய் செல்லானது இரண்டாகப் பிரிந்து ஒவ்வொன்றிலிருந்தும் சேய்
செல் தோன்றுகிறது. எ.கா. அமீபா.
இ. மொட்டு விடுதல் அல்லது அரும்புதல்
இந்த வகை
இனப்பெருக்கத்தில் தாய்த் தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து மொட்டு
தோன்றுகிறது. அது மேலும் வளர்ச்சியடைந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்குகிறது.
எ.கா. ஈஸ்ட்,
ஈ. மீளுருவாக்கம்
இழந்த பாகங்களை மீண்டும்
உருவாக்கி புதிய உயிரியைத் தோற்றுவித்தல் இழப்பு மீட்டல் எனப்படும். ஹைட்ரா, பிளனேரியா
ஆகிய உயிரினங்கள், சிறு சிறு துண்டுகளாகப் பிரிகின்றன.
ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது.