தன்
சுகாதாரம்
ஆரோக்கியமான வாழ்விற்கும், தன்
சுத்தத்திற்கும் நாம் மேற்கொள்ளும் பயிற்சியே சுகாதாரம் எனப்படும். தன் சுகாதாரம்
என்பது தன்னுடைய உடல் நலத்தைப் பற்றி அக்கறை கொள்ளுதலாகும். தன்னைச் சுற்றியுள்ள
சுற்றுப்புறத்தின் மீது கொண்டுள்ள அக்கறை சமூக சுகாதாரம் எனப்படும். சுகாதாரத்தின்
முக்கிய அம்சங்களாவன, உடல் சுகாதாரம், உணவு
சுகாதாரம், பெண்களுக்கான மாதவிடாய் கால சுகாதாரம் (Sanitary
Hygiene) மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகியனவாகும்.
அனைத்து வயதினருக்கும்
அழுக்கு நீக்கல் என்பது முக்கியமானதாகும். இது தன் சுகாதாரத்தைப் பராமரிக்க
வழிவகுக்கிறது. தினந்தோறும் முறையாக குளிப்பதன் மூலம் நமது உடல் சுத்தமாவதுடன்
கிருமிகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. தலை குளிப்பதன் மூலம் முடியை
சுத்தமாக வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயைக் கழுவ
வேண்டும். ஒரு நாளில் பலமுறை கைகளைக் கழுவவேண்டும்.
கைகள் அல்லது உடலினைத்
துடைப்பதற்கு துண்டினைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய
பிறகு அத்துண்டினை துவைக்க வேண்டும். துணிகள், கைக்குட்டைகள், உள்ளாடைகள்
மற்றும் காலுறைகளை தினந்தோறும் துவைக்க வேண்டும். இதன் மூலம் உடல் துர்நாற்றம்,
நோய்த்தொற்று மற்றும் தோல் அரிப்பினைத் தடுக்கலாம்.
தன் சுத்தம் மற்றும் பொது
சுகாதாரத்தில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கழிவறை மிக முக்கியமானதும், தவிர்க்க
முடியாததும் ஆகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பரவும் தொற்று நோய்களிலிருந்து
பாதுகாத்துக் கொள்ள, அவர்களுக்கு வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கான
பயிற்சியினையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும். இதனால் நோய்த் தொற்றுகளையும்,
நோய்களையும் தவிர்க்கலாம். கீழ்க்கண்ட நடவடிக்கைகள் கழிவறை சுகாதாரத்தை
உறுதி செய்கின்றன.
1. கழிவறையின்
தரையினை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் பராமரிக்க
வேண்டும். இது நோய்த்தொற்று மற்றும் துர்நாற்றத்தைக் குறைப்பதில் உதவுகிறது.
2. கழிவறைக்
குழாயின் கைப்பிடிகள், கதவின் கைப்பிடி, குழாய் (திறப்பான்கள்), காகிதத் துடைப்பான்கள்,
மின் சுவிட்சுகள் மற்றும் சுவர்கள் போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு
சுத்தப்படுத்துவதனால் தீங்கு தரும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள்
கொல்லப்படுகின்றன.
3. கழிவறைப்
பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக சோப்பினால் கழுவ வேண்டும்.
மகளிரின் சுகாதாரம் தோல்
மற்றும் இனப்பெருக்க சிறுநீரகக் குழாய்களில் உள்ள நோய்த் தொற்றின் அளவின்
அடிப்படையைக் கொண்டு அமைகிறது.
மாதவிடாய்
சுகாதாரம்
பெண்களின் முழுமையான
சுகாதாரத்தில் மாதவிடாய் சுகாதாரத்தின் பராமரிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுதலின் அடிப்படை வழிமுறைகளாவன,
1. நாப்கின்களை முறையாக, குறிப்பிட்ட
இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும்
தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும்
தடுக்கலாம்.
2. பிறப்புறுப்புகளை
வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாள்களில் ஏற்படும்
தசைப்பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
3. இறுக்கமான
ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன் மூலம் வியர்வை உருவாதல்
தடுக்கப்படுகிறது.
மேலும்
அறிந்துகொள்வோம்
ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம் தேதி
மாதவிடாய் சுகாதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது பெண் குழந்தைகள் மற்றும்
பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்
முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். மாதவிடாயை மையப்படுத்தி தற்போது திரைப்படங்கள்,
விவாதங்கள் மற்றும் முகாம்கள் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாப்கின்
சுகாதாரம்
பெற்றோர்களும், ஆசிரியர்களும்
பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை முறையாக அகற்றுவது பற்றி
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு கீழ்க்கண்ட வழிகளில் அறிவுரை
வழங்க வேண்டும்.
1. நாப்கின்கள்
மற்றும் டாம்பூன்ஸ் (உறிபஞ்சுகள்) களைப் பயன்படுத்திய பிறகு மூடப்பட்ட நிலையில்
(தாள்களைக் கொண்டு) அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவை மூலம் நோய் பரவும். 2.
பயன்படுத்திய நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை கழிவறை
சாதனங்களுக்குள் போடக்கூடாது.
3. பயன்படுத்திய
நாப்கின்களை எரியூட்டிகளைப் (Incinerator) பயன்படுத்தி முறையாக அகற்ற வேண்டும்
தகவல் துளிகள்
சுகாதார
அமைச்சகத்தால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட
மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாப்கின்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில்
யுனிசெஃப் அமைப்பானது, பள்ளிகளில் நாப்கின்களை
எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகளை வழங்கியதுடன், அவற்றை
சிதைப்பதற்கான (மட்கச் செய்தல்) குழிகளையும் ஏற்படுத்தியது.