தாவரங்களில் இனப்பெருக்கம் - தாவரங்களின் பாலினப்பெருக்கம் | 10th Science : Chapter 17 : Reproduction in Plants and Animals
தாவரங்களின்
பாலினப்பெருக்கம்
பாலினப்பெருக்கம் என்பது
தாவரங்களின் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் (கேமீட்டுகள்) இணைந்து தன்னை ஒத்த புதிய
தாவரத்தை உருவாக்கும் முறையாகும். இந்த வகை இனப்பெருக்கத்தில் ஆண், பெண் பால்
உறுப்புகள் பாலினசெல்களை உருவாக்கிடத் தேவைப்படுகின்றன.
மலரானது பூக்கும்
தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு என்பதை நீங்கள் முந்தைய வகுப்புகளில்
படித்திருப்பீர்கள். இதைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் நாம் மலரின் வெவ்வேறு
பாகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மலர் என்பது மாறுபாடு
அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டுத் தொகுப்பு ஆகும். இதில் நான்கு
அடுக்குகள் உள்ளன. அவை பூத்தளத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி
அமைந்திருக்கின்றன.
அ) புல்லி வட்டம் (புல்லி
இதழ்களால் ஆனது)
ஆ) அல்லி வட்டம் (அல்லி
இதழ்களால் ஆனது)
இ) மகரந்தத்தாள் வட்டம்
(மகரந்தத்தாளால் ஆனது)
ஈ) சூலக வட்டம்
(சூலிலைகளால் ஆனது)
செயல்பாடு 2
• செம்பருத்திப் பூ ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
• அதன் புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்தத் தாள் வட்டம், சூலக வட்டம் ஆகியவற்றை
உற்றுப் பாருங்கள்.
• மகரந்தத்தாள்களையும் சூலகத்தையும் தனித்தனியே பிரித்து கவனித்துப்
பாருங்கள்.
• மகரந்தத்தூள்களை நழுவத்தின் மீது பரப்பி வைத்து நுண்ணோக்கியில் உற்று
நோக்குங்கள்.
வெளிப்புறத்தில்
உள்ள இரண்டு அடுக்குகளும் நேரடியாக இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதில்லை. எனவே இவை துணை
அடுக்குகளாகக் கருதப்படுகின்றன. உட்புறத்தில் இருக்கும் அடுக்குகள் இரண்டும்
இனப்பெருக்கத்தில் பங்கெடுப்பதால் முதன்மையான அடுக்குகளாகக்
கருதப்படுகின்றன.
மகரந்தத்தாள்
வட்டம் : மகரந்தத்தாள் வட்டமானது மலரின் ஆண் இனப்பெருக்கப் பகுதியாகும். இது பல மகரந்தத்
தாள்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு மகரந்தத் தாளும் ஒரு காம்பு போன்ற
பகுதியையும் பை போன்ற பகுதியையும் கொண்டிருக்கும். காம்புப் பகுதி மகரந்தக்கம்பி
எனவும் அதன் நுனியில் அமைந்த பை போன்ற பகுதி மகரந்தப்பை எனவும்
அழைக்கப்படுகின்றன. மகரந்தத்தூள் மகரந்தப் பையின் உள்ளே காணப்படுகிறது.
மகரந்தத்தூள் : மகரந்தத்தூள்கள் கோள வடிவமானவை. இரண்டு உறைகளால்
ஆனவை. கடினமான வெளியுறை எக்ஸைன் எனப்படும். இந்த வெளியுறையில் நிலையான
துளைகள் உள்ளன. அவை வளர்துளை எனப்படும். உள்ளுறை இன்டைன் எனப்படும். இது
மிகவும் மெல்லியதாகவும் தொடர்ச்சியாகவும் காணப்படும். இது செல்லுலோஸ் மற்றும்
பெக்டினால் ஆனது. முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு விதமான செல்கள் உள்ளன. இவை
முறையே உடல் செல் மற்றும் உற்பத்தி செல் எனப்படும். உடல் செல்லினுள்
ஒரு பெரிய உட்கரு உள்ளது. உற்பத்தி செல்லானது குன்றாப் பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம்
பிரிதல் அடைந்து இரண்டு ஆண் பாலினச் செல்களை உருவாக்குகிறது.
சூலகம் : சூலகமானது மலரின் பெண் இனப் பெருக்கப் பகுதியாகும். இது சூல்
இலைகளால் ஆனது. ஒவ்வொரு சூலகமும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை,
1. சூலகமுடி
2. சூலகத்தண்டு
3. சூற்பை
ஆகியனவாகும்.
சூல் பையினுள் சூல்கள் காணப்படுகின்றன.
சூலின் முக்கியமான பகுதி சூல்
திசு ஆகும். இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது. மேல் பகுதியில் சூல்
உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல்துளை ஆகும்.
சூலானது சூல் அறையினுள்
ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு
என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூலடி எனப்படும். கருப்பையினுள் உள்ள சூல்
திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
சூல் துளையின் அருகில்
உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை
உருவாக்குகின்றன. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ
செல்களாக உள்ளன. மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
அண்ட சாதனமானது ஓர் அண்ட
செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது. இந்த பக்கவாட்டு செல்கள் சினையாற்றியம்
(Synergids) என
அழைக்கப்படுகின்றன.
தாவரங்களின் பால் இனப்பெருக்கம்
பூக்கும் தாவரங்களின்
பாலினப்பெருக்கம் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது.
1. மகரந்தச்
சேர்க்கை
2. கருவுறுதல்