Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

   Posted On :  09.08.2022 05:24 pm

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : உயிரியல் தாவரவியல் குழு புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சிறு வினாக்கள்,பெறு வினாக்கள்

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்


பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (உயிரியல் தாவரவியல் குழு)

 

21. இனப்பெருக்கம் என்றால் என்ன?

* உயிரிகளின் அத்தியாவசியப் பண்பு இனப் பெருக்கம். அதே சிற்றினத்தைச் சேர்ந்த புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் ஒரு உயிரியல் செயலாகும். 

* உலகில் சிற்றினங்கள் நிலைத்திருக்க, வேறு பாட்டின் மூலம் தகுந்த மாற்றங்களுடன் சந்ததிகள் தொடர்ந்து வாழ உதவும். 

* தாவர இனப்பெருக்கம், பாலிலா மற்றும் பால் இனப்பெருக்கம் என்னும் இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. 

 

22. கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக. 

* நான்மய மகரந்தத்துகள் அமைப்பை விளக்கியுள்ளார் (1848) 

* நான்மய மகரந்தத் துகள் என்பது நுண் வித்துருவாக்கத்தின் போது ஒவ்வொரு நுண் வித்து தாய் செல்லும் (நுண் வித்துருவாக்கத் திசு) குன்றல் பகுப்புற்று நான்கு ஒற்றை மடிய நுண் வித்துக்களை தோற்றுவிக்கும் அமைப்பு 

* நுண்வித்துக்கள் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் ஆகும். 

 

23. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக


தரைஓட்டிய தண்டின் மாற்றுரு / எடுத்துக்காட்டு 

1. ஒடு தண்டு சென்டெல்லா ஏசியாட்டிகா  

2. வேர்விடும் ஒடுதண்டு  ஃபிரகேரியா, மென்தா 

3. தரைகீழ் தண்டு கிரைசான்திமம்

 

24. 'பதியமிடல்' என்றால் என்ன? 

> பாரம்பரிய தழைவழி இனப்பெருக்க முறை.

> இதில் செயற்கையாக பெற்றோர் தாவரத்தின் தண்டு தாவரத்தோடு ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்ற தூண்டப்படுகிறது. 

> வேர் தோன்றியவுடன் அப்பகுதி தாய் தாவரத்தி லிருந்து வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாக உருவாக்கப்படுகிறது.

(எ.கா) இக்சோரா , ஜாஸ்மினம். 

 

25. நகல்கள் என்றால் என்ன?

நுண் பெருக்கமுறை எனப்படும் பாலிலா இனப் பெருக்கமுறையில் தாவரத்தின் தனிசெல் (அ) திசு (அ) தழைவழி அமைப்புகளின் சிறு துண்டு களிலிருந்து திசு வளர்ப்பு மூலம் ஒத்த தோற்றம் மற்றும் ஒத்த மரபணுத்தன்மை கொண்ட பல தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை ‘நகல்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

 

26. பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பிரையோஃபில்ல இலை புதிய தாவரங்களை தோற்றுவிக்கிறது. எவ்வாறு? 

* சில தாவர இலைகளில் மாற்றிடத்து மொட்டுக்கள் தோன்றும். இவை பெற்றோர் தாவரத்தினின்று பிரிந்து புதிய தனித்தாவரமாக வளரும். (எ.கா) பிரையோபில்லம். 

* இதன் சதைப்பற்றுள்ள, இலைகள் விளிம்பில் பள்ளங்களுடன் இலைகள் உள்ளன. இப்பள்ளங் களில் வேற்றிட மொட்டுக்கள் தோன்றும். இவை இலைவளர் மொட்டுக்கள் (Epihyllous buds) எனப்படும். பிரித் தெடுக்கப்பட்ட இலை அழுகியதும், இவ்வமைப்புகளில் வேர் உண்டாகி தனித் தாவரமாகும்.

 

27. ஒட்டுதல் மற்றும் பதியமிடல் வேறுபடுத்துக


ஒட்டுதல் 

* இரு வெவ்வேறு தாவரங்கள் ஒட்டுதலில் ஈடுபடுவதால் இரு தாவரங்களிலுள்ள நோய் எதிர்ப்பு, உயர் விளைச்சல் போன்ற பண்புகளை ஒரே  தாவரத்தில் பெற முடிகிறது. (எ.கா) எலுமிச்சை , மா, ஆப்பிள்

பதியமிடல் 

ஒரே ஒரு தாவரத்தின் பண்புகள் மட்டுமே பெற முடியும். புதிய பண்புகளைக் கொண்ட தாவரங்களை உருவாக்க இயலாது. (எ.கா) இக்சோரா, ஜாஸ்மினம் .

 

28. 'அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்' விவாதி. 

நுண் பெருக்கம் : 

* திசு வளர்ப்பின் மூலம் முழுத்தாவரமானது ஒரு தனி செல், சிறு துண்டுகளிலிருந்து திசு வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது. 

நிறைகள் : 

* விரும்பிய பண்புள்ள தாவரங்கள், குறைந்த காலத்தில் விரைவாகப் பெருகும். 

* உருவாகும் தாவரங்கள், ஒத்த மரபணு சார் பண்புகளைக் கொண்டிருக்கும். 

* எந்தபருவத்திலும் திசு வளர்ப்பை மேற்கொள்ளலாம். 

* உயிர்ப்பு திறனற்ற, முளைக்கும் திறனற்ற விதை களை உருவாக்கும் தாவரங்களை, திசு வளர்ப்பின் மூலம் பெருக்கமடையச் செய்யலாம். 

* அரிதான, அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட குறைந்த எண்ணிக்கையில் உள்ள தாவரங் களைப் பெருக்கமடையச் செய்யலாம். 

* ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் நோய்களற்ற தாவரங்களை உருவாக்கலாம். (Meristem culture) 

* திசு வளர்ப்பினால், செல்களை மரபணு சார் ரீதியாக மாற்றமடையச் செய்யலாம்.

* புரோட்டோபிளாச இணைப்பினால் உருவான செல்களைக் கொண்டும் திசு வளர்ப்பை மேற் கொள்ளலாம். (r DNA - technology) 

 

29. உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.

பாரம்பரிய முறைகள் 

அ) போத்துகள் (Cutting)

பெற்றோர் தாவரத்தின் வேர், தண்டு, இலைகளை போத்துக்களாகப் பயன்படுத்தலாம். இவை தகுந்த ஊடகத்தில் வைக்கப்பட்டு அதிலிருந்து வேர்களை உருவாக்கி புதிய தாவரமாகிறது. பயன்படுத்தப்படும் பாகத்தின் அடிப்படையில் 3 வகைப்படும். பெரும்பாலும் தண்டுப் போத்துக்களே பயன்படுத்தப்படுகிறது. 

i) வேர் போத்துகள் (மாலஸ்) 

ii) தண்டு போத்துகள் (ஹைபிஸ்கஸ்) 

iii) இலை போத்துகள் (பிகோனியா) 

ஆ) ஒட்டுதல் PTA -4

இரண்டு வெவ்வேறு தாவரங்களின் பாகங்கள் இணைக்கப்பட்டு ஒரே தாவரமாக வளர்கின்றன. தரையுடன் தொடர்புடைய தாவரம் வேர்கட்டை எனப்படும். ஒட்டுதலுக்கு பயன்படுத்தப்படுவது ஒட்டுத்தண்டு எனப்படும். -

i) மொட்டு ஒட்டுதல் (Bud Grafting)

வேர்க்கட்டையில் T வடிவ கீறல் ஏற்படுத்தப் படும். மரப்பட்டை தூக்கப்படும். ஒட்டுத்தண்டு கீறலில் பட்டைக்கு கீழே வைக்கப்படும். 

ii) அணுகு ஒட்டுதல் (Approach Grafting)

வேர்க்கட்டை, ஒட்டுத்தண்டுமே இரண்டுமே வேர் கொண்டுள்ளன. இரண்டும் ஒரே அளவு தடிப்புடையதாக இருக்க வேண்டும். இரண்டிலும் சிறிய சீவல் வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட பரப்புகள் நெருக்கமாக டேப்பினால் சுற்றப்படும். 4 வாரங்களுக்கு பின், ஒட்டுத்தண்டின் அடியும், வேர்க்கட்டையின் நுனியும் நீக்கப்பட்டு தனித் தனி தொட்டியில் வளர்க்கப்படுகின்றன. 

iii) நா ஒட்டுதல் (Tongue Grafting)

ஒரே தடிமனுடைய ஒட்டுத் தண்டு, வேர்க் கட்டையை சாய்வாக வெட்டி, 'டேப்' பயன்படுத்தி இரண்டையும் ஒட்ட வேண்டும். 

iv) நுனி ஒட்டுதல் (Crown Grafting)

வேர்க்கட்டை அளவில் பெரிதாக இருக்கும்போது அதில் உண்டாக்கப்பட்ட பிளவில் ஆப்பு வடிவ ஒட்டுத் தண்டுகள் செருகப்பட்டு மெழுகு கொண்டு ஒட்டப்படும். 

v) ஆப்பு ஒட்டுதல் (Wedge Grafting) 

வேர்க்கட்டையில், துளை (அ) மரப்பட்டையில் வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. அதில் ஒட்டுத் தண்டின் குச்சுக்கிளை சொருகப்பட்டு, இரண்டின் கேம்பியமும் இணைக்கப்படுகின்றன. 

இ) பதியம் போடுதல் (Layering) 

பெற்றோர் தாவரத் தண்டில் வேர்கள் தோன்றத் தூண்டப்படும். வேர் தோன்றிய பகுதி வெட்டி, புதிய தாவரமாகிறது (எ.கா. ஜாஸ்மினம், இக்சோரா) 

i) மண்முட்டு பதியம் (Mound Layering) 

அடிக்கிளையின் தண்டு மண்ணில் புதைக்கப் படும். புதைந்த தண்டிலிருந்த வேர்கள் தோன்றியபின் பெற்றோர் தாவரத்திலிருந்து வெட்டப்படும். 

ii) காற்றுப் பதியம் (Air Layering)

தண்டின் கணு செதுக்கப்பட்டு, ஹார்மோன் சேர்க்கப்படும். வேர் உருவாகிறது. இப்பகுதி ஈரமண்ணால் மூடப்பட்டு பாலீதீன் உறையிடப் படும் 2 - 4 மாதத்தில் இதிலிருந்து வேர்கள் தோன்றும். பின்பு தரையில் வளர்க்கப்படும்.

 

30. மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக


மண்முட்டு பதியம் (Mound Layering) 

1. நெகிழ்வுத் தன்மையுடைய கிளைகளை உடையதாவரங்களில் அடிக்கிளை வளைத்து தரையில் மண்ணில் புதைக்கப்படும் தண்டின் நுனி தரையின் மேல் உள்ளது. எனவே மண்முட்டுப் பதியம் எனப்படும்.

2. வேர் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்தினின்று வெட்டப்பட்டு தனித்தாவரமாக வளர்கிறது.

காற்றுப் பதியம் (Air Layering) 

1. நெகிழ்வுத் தன்மையுடைய நெகிழ்வுத் தன்மையற்ற தாவரத்தண்டின் கணுப்பகுதி செதுக்கப்படும். பதியம்-கிளைகளில் போடப்படுவதால் பதியத்தைச் சுற்றி காற்று காணப்படுகிறது. எனவே காற்றுப் பதியம் எனப்படுகிறது.

2. சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் வேரை உருவாக்கும். 

3. ஈரமான மண், பாலிதீன் பையால் மூடப்படும். 

4. 2 - 4 மாதத்திற்கு பின் வேர் தோன்றிய கிளைகள் தனியாக வளர்க்கப்படும்.

 

 

31. கான்தரோஃபில்லி என்றால் என்ன?

* வண்டுகளினால் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கை . 

* இவ்வண்டுகள் பூக்களின் மகரந்தம், ஈரச்சத்து மிக்கத் திசுக்களை உண்கிறது. 

* இவ்வகை மகரந்தச்சேர்க்கையுறும் வண்டுகளை ஈர்க்க துர்நாற்றத்தைப் பரப்புகின்றன. (எ.கா) நிம்பேயா சிற்றினத் தாவரம் – ரினோசாரஸ் வண்டு, இராட்சத நீர் அல்லி - ஸ்காரப் (scarab) 

 

32. தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியலிடுக 

i) இருகால முதிர்வு (Dichogamy)

மகரந்தப்பையும், சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும். இது இருவகைப்படும். 

அ) ஆண்முன் முதிர்வு (Protandry)

மகரந்த தாள்கள், சூலக முடிக்கு முன்னரே முதிர்ச்சி அடையும் (எ.கா) ஹீலியாந்தஸ். 

ஆ) பெண்முன் முதிர்வு (Protogyny)  (புரோடோகைனி ) 

சூலக முடி மகரந்ததாளுக்கு முன்னரே முதிர்ச்சி யடையும் (எ.கா) அரிஸ்டலோகியா. 

ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy) 

மகரந்தத்தாளும், சூலுக முடியும் அமைந்து இருக்கும் விதம், மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும். (எ.கா) குளோரியோசா சூபர்பா

 

33. எண்டோதீலியம் என்றால் என்ன? 

> ஒரு சில சிற்றினங்களில் (ஒரு சூலறையுடைய மென் சூல் திசு கொண்ட) சூலுறையின் உள்ளடுக்கு சிறப்பு பெற்று, கருப்பையின் ஊட்டத்திற்கு உதவுகின்றது. 

> இந்த அடுக்கு எண்டோதீலியம் அல்லது சூலுறை டபீட்டம் (Integumentary tapetum) எனப்படும். (எ.கா) ஆஸ்டரேசி

 

34. மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது'. ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்


மூடுவிதை தாவரங்களின் கருவூண் திசு 

1. (ஆஞ்சியோஸ்பெர்ம்) முடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மும்மடியத்தன்மை (3n) கொண்டது மூடாவிதைத் தாவரங்களில் மட்டுமே இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும் நடைபெறுகிறது. 2 துருவ உட்கரு + விந்து உட்கரு இணைவதால் மும்மடிய தன்மை (3n) உருவாகிறது.

2. கருவூண் திசுவானது (PEN) கருவுறுதலுக்குப் பின், கரு பகுப்படைவதற்கு முன், முதல்நிலை கருவூண் உட்கரு உடனடியாக பகுப்படைந்து உருவாகிறது.

3. இது வளரும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.

மூடாவிதை தாவரங்களின் கருவூண் திசு 

1. (ஜிம்னோஸ்பெர்ம்) மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசு ஒருமடியத் தன்மை (n) கொண்டது.

2. கருவுறுதலுக்கு முன் கருவுண் திசு உருவாக்கப் படுகிறது. 

3. இது பெண் கேமீட்டோபைட்டாகவும் ஊட்டமளிக்கும் திசுவாகவும் செயல்படுகிறது.

 

35. 'இருமடிய வித்தாக்கம்' என்ற சொல்லை வரையறு.

பெருவித்து தாய் செல் நேரடியாக இருமடிய கருப்பையாக மாறும். வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடைபெறுவதில்லை. (எ.கா) யூபடோரியம், ஏர்வா. இவ்வாறு குன்றல் பகுப்பு நடைபெறாமல் பெரு வித்து தாய் செல் நேரடியாக இருமடிய கருப்பை யாக மாறும் தன்மை இருமடிய வித்தாக்கம் எனப்படும்.

 

36. பல்கருநிலை என்றால் என்ன? வணிகரீதியில் இது எவ்வாறு பயன்படுகிறது? 

* ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு காணப்பட்டால் அது பல்கருநிலை எனப்படும். 

* சிட்ரஸ் தாவர சூல்திசுவிலிருந்து பெறப்படும் நாற்றுக்கள் பழப்பண்ணைக்கு நல்ல நகல்களாக உள்ளன. 

* பல்கருநிலை வழி தோன்றும் கருக்கள் வைரஸ் தொற்று இல்லாமல் உள்ளன. எ.கா. சிட்ரஸ் சைஸிஜியம்.

 

37. ஏன் முதல்நிலை கருவூண்திசு பகுப்படைதலுக்கு பின் மட்டுமே கருமுட்டை பகுப்படைகிறது? 

> கரு வளர்ச்சியின் போது கருவுக்கு உணவு தேவைப்படும். 

> கருப்பை (Embryo sac) சிறிதளவே உணவு அளிக்கும். 

> கருவுறுதலுக்குப்பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல்நிலை கருவூண் உட்கரு (Primary Endosperm nucleus) உடனடியாக பகுப்ப டைந்து கருவூண்திசு உருவாகும். 

> இது ஊட்டமளிக்கும் சீரியக்கி அமைப்புத் திசு. வளரும் கருவுக்கு ஊட்டமளிக்கிறது.

 

38. மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன?

தேனீக்களால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை இது. (மெலிட்டஸ் - தேன் (லத்தீன்)) பூச்சிகளில் தேனீக்கள் மலர்களை நாடிச் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளில் முக்கிய மானவை தேனீக்கள்.

எ.கா. ஆஞ்சியோஸ்ஃபெர்ம்கள் மூடுவிதை தாவரங்கள்

 

39. ‘எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது' - இக்கூற்றை நியாயப்படுத்துக. 

* இது மரகந்தப்பைச் சுவரின் ஒரு புறத்தோலுக்கு கீழாக ஆரபோக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களான அமைப்பாகும்.. 

* இவற்றில் செல்லுலோஸ், லிக்னினால் ஆன பட்டைகளை தோற்றுவிக்கிறது.

* இச்செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை. 

* இரண்டு வித்தகங்களை இணைக்கும் ஒரு மகரந்தமடல் பகுதியில் அமைந்த செல்களில் இப் பட்டைகள் காணப்படுவதில்லை. இப்பகுதி ஸ்டோமியம் எனப்படும். 

* எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சும் தன்மை மற்றும் ஸ்டோமியம் முதிர்ந்த மகரந்தப்பை வெடிப்பிற்கு உதவுகிறது. 

 

40. டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக

* வளரும் நுண் வித்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது. 

* யுபிஷ் உடலத்தின் மூலம், ஸ்போரோபொலனின் உற்பத்திக்கு உதவுவதால், மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் உதவும். 

* போலன்கிட்டுக்குத் தேவையான வேதிப் பொருட்களைத் தந்து, மகரந்தத்துகளின் பரப்புக்கு கடத்தப்படுகிறது. 

* சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான, எக்சைன் புரதங்கள் டபீட்ட செல்களினின்று பெறப்படுகின்றன. 

* மேலும் டபீட்டம் நுண்வித்தகத்தின் வளமான தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை கட்டுப்படுத்துகிறது. 

                           

41. போலன்கிட் பற்றி சிறுகுறிப்பு வரைக

* மகரந்தத்துகள்களின் புறப்பரப்பில் காணப்படும் பிசுபிசுப்பான பூச்சு கொண்ட எண்ணெய் அடுக்கு. 

* இதன் உருவாக்கத்தில், டபீட்டம் பங்களிக்கிறது 

* இதிலுள்ள கரோட்டினாய்டு, ப்ளேவோனாய்ட் இதற்கு மஞ்சள், ஆரஞ்சு நிறம் தருகிறது. 

* பூச்சிகளை இது கவர்கிறது. 

* புற ஊதாக் கதிர்களிலிருந்து மகரந்தத்துகளைப் பாதுகாக்கிறது.

 

42. மென் சூல்திசு மற்றும் தடி சூல்திசு வேறுபடுத்துக.

 

மென் சூல் திசு

1. வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியில் உள்ளது 

2. ஒரு அடுக்கு சூல் திசுவால் சூழப்பட்டுள்ளது 

3. மிகச் சிறிய சூல்திசுவைக் கொண்டிருக்கும். 

தடி சூல் திசு 

1. வித்துருவாக்க செல்கள், புறத்தோலடியின் கீழ்ப்பகுதியிலிருந்து தோன்றும் 

2. அதிக சூல் திசு கொண்டவை 

3. பல அடுக்கு செல்கள் சூல்திசுவில் உள்ளது. 

 

43. ‘திறந்த விதைத்தாவரங்களிலும், மூடுவிதைத் தாவரங்களிலும் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை வேறுபட்டது'. காரணங்களைக் கூறுக. 


திறந்த விதைத் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை 

1. நேரடியானது

2. மகரந்தத்துகள்கள் திறந்த நிலையில் உள்ள சூல்களை நேரடியாகச் சென்றடைகின்றன.

3. பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறுகிறது. 

மூடுவிதைத் தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை 

1. மறைமுகமானது 

2. மகரந்தத்துகள்கள் சூலக அலகின் சூல்முடியில் படிந்து மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது. 

3. இது தன் மகரந்தச்சேர்க்கை அயல் மகரந்தச்சேர்க்கை என இருவகைப்படும். 

 

44. மாற்று சூலகத்தண்டு நீளம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக. 

i) சில தாவரங்கள், 2 அல்லது 3 வெவ்வேறு வகையான மலர்களைத் தோற்றுவிக்கும் 

ii) இவற்றின் மகரந்தத்தாள்களும், சூலகத்தண்டும் வேறுப்பட்ட நீளத்தைப் பெற்றுள்ளன. 

iii) மகரந்த சேர்க்கை சமநீளத்தை உடைய இன உறுப்புகளுக்கு இடையே நடைபெறும் , 

அ) இரு சூலகத்தண்டுத்தன்மை (Distyly) 

2 வகை மலர்கள் உள்ளன. ஊசி மலர் நீண்ட சூலகத்தண்டு, குட்டையான மகரந்தத் தாள்கள் கொண்டவை. ஊசிக்கண் மலர்களில் குட்டை சூலகத் தண்டு, நீண்ட மகரந்தத் தாள்கள் உள்ளன. ஊசிக்கண் மலரின் சூலக முடியும், ஊசி மலரின் மகரந்தப்பையும் ஒரே மட்டத்தில் உள்ளதால், மகரந்தச் சேர்க்கை நடைபெறும். எ.கா. பிரைமுலா 

ஆ. மூன்று சூலகத்தண்டுத்தன்மை (Tristyly) 

சூலகத்தண்டு. மகரந்தத்தாள்களின் நீளத்தைப் பொறுத்து இத்தாவரம், 3 வகை மலர்களைத் தோற்றுவிக்கிறது. ஒரு வகை மலரின் மகரந்தத் துகள், மற்ற இரண்டு வகை மலர்களில் மட்டுமே மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும். அதே வகை மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தாது.

(எ.டு) லைத்ரம் 

                                

45. பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக. 

* பெரிதான மலர்கள், சிறிய மலர்கள் நெருக்கமான மஞ்சரியாகும். (எ.டு. ஆஸ்ட்ரேசி)

* மலர்கள் பிரகாசமான வண்ணம் (எ.டு பாய்ன்செட்டியா), மலரினைச் சுற்றியுள்ள பாகங்கள் அடர்ந்த வண்ணத்துடன் இருக்கும். 

* மணம், பூந்தேன் கொண்டவை. 

* மகரந்தமும், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதி. 

* ஈக்கள், வண்டுகளால் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் ஈர்க்க, துர்நாற்றம் பரப்பும் 

* சாறு செல்களைக் கொண்ட மலர்களின் சாற்றை பூச்சிகள் ஓட்டையிட்டு உறிஞ்சுகின்றன. 

 

46. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.


* இருமடிய நுண் வித்து தாய் செல் குன்றல் பகுப்படைந்து (ஒருமடிய நுண்வித்துக்களை உருவாக்குவதில் பல படிநிலைகள் உள்ளன.). 

* முதல் நிலை வித்து செல்கள் செல் பகுப்புக்கு உட்பட்டு வித்துருவாக்கத் திசுவைத் தோற்று விக்கின்றன. 

* வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்களாகச் செயல்படும் 

* நுண் வித்து தாய் செல்கள், பின் குன்றல் பகுப்பால் நான்கு இரு மடிய நுண்வித்துக்களைத் (நான்கமை நுண்வித்து) தோற்றுவிக்கும். 

* நுண் வித்துக்கள் விரைவில், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து, தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படும். 

* சில தாவரங்களில் நுண் வித்தகத்திலுள்ள நுண் வித்துக்கள் இணைந்து பொலினியம் (Pollinium) என்ற அமைப்பாகும்.

எ.கா. எருக்கு. 

 

47. தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.

* ஒன்று (அ) இரண்டு சூலுறைகளால் சூழப்பட்டு உள்ளது. பெருவித்தகம் என அறியப்படுகிறது. 

* முதிர்ந்த சூலில், ஒரு காம்பும், உடலும் உள்ளது. சூலகக்காம்பு, சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது. 

* சூலகக்காம்பு, சூலின் உடலோடு இணையும் பகுதி சூல் தழும்பு (Hilum) எனப்படும். 

* சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில் உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphae) எனப்படும். 

* சூல்திசுவைச் சூழ்ந்து, சூலுறை என்ற பாதுகாப்பு உறை உள்ளது. இதில் ஒற்றைச்சூலுறை சூல், இரட்டைச் சூலுறை சூல் என இருவகைப்படும். 

* சூலுறையால் சூழப்படாத, சூல் திசுப்பகுதி சூல்துளை (micropyle) எனப்படும். 

* சூல்திசு, சூலுறை, சூல் காம்பு இணையும் பகுதி சலாசா எனப்படும். 

* சூல்திசுவில் உள்ள முட்டை வடிவப் பை போன்ற அமைப்பு கருப்பை. 

* சூலுறையின் உள்ளடுக்கு எண்டோதீலியம், டபீட்டம் எனப்படும். எ.கா. ஆஸ்ட்ரேஸி 

* பெருவித்துருவாக்க செல்லின் அமைவிடத்தை பொறுத்து சூல்கள் இருவகைப்படும். 

மென்சூல் திசு

* பெருவித்துருவாக்கச் செல்கள் சூலின் புறத் தோலடியின் ஒரே ஒரு அடுக்காக சூல் திசுவால் சூழப்பட்டுள்ளது.

* மிகச்சிறிய அளவு சூல் திசுவைக்  கொண்டிருக்கும்.

தடிசூல் திசு 

* பெருவித்துருவாக்கச் செல்கள் சூலின் புறத் தோலடியின் கீழ் பகுதியில் இருந்து  தோன்றுகிறது.

* அதிக அளவு சூல் திசுவைக் கொண்டிருக்கும். 

 

சலாசா மற்றும் கருப்பையின் இடையே சூலின் அடிப்பகுதியில் காணப்படும் செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ் என்றும், சூல்துளைக்கும், கருப்பைக்கும் இடையே காணப்படும் தடித்த சுவருடைய செல்கள் எப்பிஸ்டேஸ் என்றும் அழைக்கப்படும்.


 

48. மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக 

* ஆண் கேமீட்டுடன் பெண் கேமீட்டு இணைதல் கருவுறுதல் எனப்படும். 

* ஆஞ்சியோஸ்ஃபெர்ம் தாவரங்களில் இரட்டைக் கருவுறுதல் நடைபெறுகிறது. 

இரட்டைக் கருவுறுதலின் நிகழ்வுகள் : 

i) சூலக முடியில் மகரந்தக்குழல் உருவாதல். 

ii) சூலக தண்டில் மகரந்தக்குழல் உருவாதல். 

iii) சூல்துளை நோக்கி மகரந்தக்குழாய் வளர்தல் 

iv) மகரந்தக்குழாய் கருப்பையில் நுழைதல். 

v) இரட்டைக் கருவுறுதல் & மூவிணைதல். 


* மகரந்தத்துகள் சூலகமுடி மீது படிந்து மகரந்தக் குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் சூலக அலகு இடைவினை (Pollen Pistil Interaction) எனப்படும். 

1. சூலக முடியில் மகரந்தக்குழல் உருவாதல் 

* சூலக முடியுடன் இணக்கமான மகரந்தத்துகள், முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்கும்.

* இதற்கு ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும், வறண்ட சூலக முடியின் மெல்லிய உறையும் காரணமாக உள்ளன. 

* இவை சூலக முடிக்கும், மகரந்தத்துகள்களுக்கும் இடையே உள்ள புரத வினைகளைக் கொண்டு இதை முடிவு செய்யும். 

* சூலக முடியில் மகரந்தத்துகள் நீரேற்றமடையும், மகரந்தச்சுவர்ப் புரதங்கள் வெளியேறும். 

* மகரந்தக்குழாயின் சைட்டோபிளாசப் பொருட்கள் நுனி நோக்கி நகர்கின்றன. 

* மகரந்தக்குழாயின் இதர பகுதி நுண் குமிழ்ப் பையால் ஆக்ரமிக்கப்படும். 

* நுண்குமிழ்ப்பை , குழாய் நுனியிலிருந்து, கேலஸ் அடைப்பால் பிரிக்கப்படும். 

* மகரந்தக் குழியின் நுனிப்பகுதி அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இது கேப் பிளாக் எனப்படும். இது மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று விடும். 

2. சூலக தண்டில் மகரந்தக்குழல் 

மகரந்தத் துகளின் வளர்ச்சி, சூலகத்தண்டின் வகையைப் பொறுத்து அமைகிறது. 

i) உள்ளீடற்ற சூலகத்தண்டு 

சூலகத்தண்டின் உள்ளீடற்ற கால்வாயில் சுரப்பு செல்கள் உள்ளன. இவை மியூசிலேஜ் பொருட் களைச் சுரக்கின்றன. இவை வளரும் மகரந்தக் குழாய்க்கு உணவு மற்றும் சூலகத்தண்டுக்கும், மகரந்தக் குழாய்க்கு உணவாகப் பயன்படும். சூலகத்தண்டுக்கும், மகரந்தக்குழாய்க்கும் இடையே ஒவ்வாமை வினைகளைக் கட்டுப்படுத்தும். 

ii) திட அல்லது மூடிய சூலகத்தண்டு

மகரந்தக்குழாய் மூடிய திட சூலகத் தண்டுகளில், ஊடு கடத்தும் திசு (Transmiting Tissue) செல்களின் இடைவெளி வழியே வளர்கிறது. 

3. மகரந்தக் குழாய் சூலினுள் நுழைதல் 3 வழிகளில் நுழைகிறது 

i) சூல் துளை வழியாக 

ii) சலாசா வழியாக 

iii) சூலுறை வழியாக 

4. மகரந்தக்குழாய் கருப்பையினுள் நுழைதல் 

சூல்துளை வழியாக நுழைய அமைப்பு வழி நடத்தி (obturator) வழிகாட்டுகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து, அதன் உள்ளடக்கப் பொருட்கள் வெளியேற்றப்படும். 

5. இரட்டைக் கருவுறுதல், மூவிணைதல் 

2 ஆண் கேமீட்டுகள் கருவுறுதலில் ஈடுபடுவதால் இரட்டைக் கருவுறுதல் எனப்படும். ஒரு ஆண் கேமீட் முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கும். மற்றொரு ஆண் கேமீட், இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல் நிலை கருவூண் உட்கரு வாகும். இது மூவிணைதல் ஆகும். இதனால் முதல்நிலை கருவூண் உட்கரு மும்மடியத்
தன்மையுடையது (3n). .
 

 

49. கருவூண் திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

கருவூண் திசு 

கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு. 

i) உட்கருசார் கருவூண் திசு 

முதல்நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.டு) அராக்கிஸ் 

ii) செல்சார் கருவூண்திசு

முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியாந்தஸ் 

iii) ஹீலோபிய கருவூண்திசு 

முதல்நிலை கருவூண் உட்கரு கருப்பையின் அடிப்பகுதிக்கு நகர்ந்து அங்கு பகுப்படையும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா. சலாசா அறை உட்கரு பகுப்படையும் (அ) - பகுப்படையாது. விதைகள் இருவகைப்படும் - கருவூண் திசு இல்லாத விதைகள் கருவூண் திசு கொண்ட விதைகள், முறையே அல்புமினற்ற விதைகள் மற்றும் அல்புமினுடைய விதைகள் எனப்படும். 

i) அல்புமினற்ற விதைகள் - எ.கா. பட்டாணி, நிலக் கடலை 

ii) அல்புமினுடைய விதைகள் - எ.கா. நெல், தென்னை , ஆமணக்கு. 

தொடர் விளிம்பற்ற கருவூண் திசு 

ஒழுங்கற்ற, சமமற்ற மேற்பரப்பு கொண்ட கருவூண் திசு. 

எ.கா. அரிக்கா கட்ச்சு (பாக்கு) பாசிஃபுளோரா, மிரிஸ்டிகா

 

50. இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.

விதையிலை

1. விதையிலை 

2. விதையுறை

3. கரு அச்சு

4. பாதுகாப்பு

5. கருவூண் திசு

6. ஸ்குடெல்லம் 

இரு விதையிலைத் தாவர விதை 

1. இரு விதையிலைகள் காணப்படும். 

2. தடித்த வெளியுறை, மெல்லிய உள்ளுறை 

3. நீண்ட அச்சு - இரு விதையிலைகளுக்கும் நடுவில் காணப்படும். அதில் முளைவேர் முளைக்குருத்து என இரு பகுதிகள் உள்ளது. 

4. கரு அச்சைச் சுற்றி பாதுகாப்பு உறை கிடையாது

5. குறைந்த அளவில் சேமிப்பு திசு உள்ளது. கருவிலிருந்து ஒரு வரையறுக்கப்பட்ட அடுக்கினால் தனிமைப்படுத்தப்படவில்லை.

6. இல்லை

ஒரு விதையிலைத் தாவர விதை 

1. ஒரு விதையிலை மட்டும் காணப்படும். 

2. பிரிக்க இயலாத ஒரே சவ்வு 

3. குட்டையான அச்சில் முளைவேரும், முளைக் குருத்தும் காணப்படும்.

4. முளைவேர் - கோலியோரைசா முளைக்குருத்து - கோலிஃயாப்டைல்' என்னும் பாதுகாப்பு உறையை உடையது.

5. சேமிப்புத்திசுவான கருவூண் திசு - விதையின் பெரும்பகுதியாக உள்ளது. வரையறுக்கப் பட்ட அடுக்கினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

6. கருவூண் திசுவிலிருந்து உணவுப் பொருட் களை உறிஞ்சி எடுக்க இந்த ஸ்குடெல்லம்  என்ற அமைப்பு உதவுகிறது.


 

51. கருவுறாக்கனி பற்றி விரிவான தொகுப்பு தருக. அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு சேர்க்க.

கருவுறாக் கனியாதல் - கருவுறுதல் நடைபெறாமல் சூலகத்திலிருந்து, கனி போன்ற அமைப்புகள் தோன்றலாம். இவை கருவறாக்கனிகள் எனப்படும். இவற்றில் உண்மையான விதைகள் இல்லை. வணிக முக்கியத்துவம் வாய்ந்த விதை களற்ற கனிகள் இவ்வாறு உருவாக்கப்படும் (எ.டு) திராட்சை , வாழை, பப்பாளி 

1963-இல் நிட்ச் - கருவுறாதலை மூன்று வகையாக வகைப்படுத்தினார். 

i) மரபணு சார் கருவுறாக் கனியாதல் இனக்கலப்பு, சடுதி மாற்றத்தால் உருவாகிறது. (எ.டு) சிட்ரஸ், குக்கர்பிட்டா . 

ii) சூழ்நிலை சார் கருவுறாக் கனியாதல்

மூடுபனி, குறை வெப்பநிலை, அதிக வெப்ப நிலை போன்றவை கருவுறாக்கனி உருவாவதைத் தூண்டும் (எ.டு) பேரிக்காய் 3 - 19 மணி நேரம் குறை வெப்பத்தில் வைக்கப்படும். 

iii) வேதிப்பொருள் தூண்டிய கருவுறாக் கனியாதல் ஆக்சின், ஜிப்ரலின். கருவுறாக் கனி உருவாக்கத்தை தூண்டும். 

முக்கியத்துவம் 

i) தோட்டக்கலையில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன 

ii) வணிக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. 

iii) ஜாம், ஜெல்லி, சாஸ், பழபானம் தயாரிக்கும் உணவுத்தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. 

iv) கனியின் பெரும்பகுதி உண்ணக் கிடைக்கும் என்பதால் பெரிதும் விரும்பப்படுகிறது.

Tags : Asexual and Sexual Reproduction in Plants | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Answer the following questions (Pure Science Group) Asexual and Sexual Reproduction in Plants | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (உயிரியல் தாவரவியல் குழு) - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்