Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள்

தேசியம் | காந்திய காலகட்டம் - சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  27.07.2022 05:04 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள்

1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்டு) கட்சி (CPI), 1920 அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது.

சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள்

1917ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்டு) கட்சி (CPI), 1920 அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்டது. 

M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் அதன் நிறுவன உறுப்பினர்களாவர். 1920 களில் அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுத்து கம்யூனிச இயக்கத்தை அடக்குவதற்கு இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் கம்யூனிசம் தொடர்பான அச்சுறுத்தலை அடக்கும் மற்றொரு முயற்சியாக M.N. ராய், S.A. டாங்கே , முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதித்திட்ட வழக்கிலும் விசாரிக்கப்பட்டனர்.


(அ) பொதுவுடைமை (கம்யூனிச) கட்சி நிறுவப்படுதல்

தங்கள் கருத்துக்களை பரப்பவும், ‘இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் உண்மையான முகத்தை’ எடுத்துக்காட்டவும் பொதுவுடைமைவாதிகள் இதனை ஒரு மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர். 

ஒரு கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியாக 1925ஆம் ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது. அதில் சிங்காரவேலர் தலைமை உரையாற்றினார். இந்திய மண்ணில் இந்திய பொதுவுடைமை கட்சியை ஆரம்பிக்க அது வழியமைத்தது. பல்வேறு முயற்சிகளின் பலனாக ‘அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ 1928ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.


(ஆ) புரட்சிகர நடவடிக்கைகள்

ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் திடீரென திரும்பப்பெற்றதால் குழப்பமடைந்த இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுத்தனர். காலனி ஆட்சியை ஆயுதக்கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் 1924இல் இந்துஸ்தான் குடியரசு இராணுவம் (HRA) கான்பூரில் உருவாக்கப்பட்டது. 1925ஆம் ஆண்டு ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் லக்னோ அருகே காகோரி என்ற கிராமத்தில் அரசுப்பணத்தை கொண்டுச்சென்ற ஒரு இரயில் வண்டியை நிறுத்திக் கொள்ளையடித்தனர். அவர்கள் காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேருக்கு மரணதண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.


பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர். பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர். லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார். 1929இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினார்கள். அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.

ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.


1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டது. சிட்டகாங்கில் இருந்த ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றிய அவர்கள் அங்கு புரட்சிகர அரசை நிறுவினார்கள். அரசு நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் தாக்குதல்களை நடத்தினார்கள். 1933ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சூர்யா சென் ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.


(இ) 1930களில் இடதுசாரி இயக்கங்கள்

உலகம் முழுவதும் நிலவிய பொருளாதார மந்தநிலை உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, 1930களில் இந்திய பொதுவுடைமை கட்சி வலுப்பெற்றது. பிரிட்டனில் இருந்த மந்தநிலை அதன்கீழ் இருந்த காலனிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்த பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக வர்த்தக லாபங்களிலும் வேளாண் பொருள்களின் விலைகளிலும் சரிவு ஏற்பட்டன. ஏற்கனவே சரிந்திருந்த வேளாண் பொருள்களின் ஐம்பது சதவிகித விலை வீழ்ச்சி காரணமாக கட்டாயமாக செய்யப்பட்ட அரசின் நிலவருவாய் வசூல் இருமடங்காக அதிகரித்தது. புழக்கத்தில் இருந்த பணம் திரும்பபெறப்படுவது, வளர்ச்சிப் பணிகளுக்கான பணியாளர்கள் எண்ணிக்கையும் செலவுகளையும் குறைப்பது ஆகியன அரசின் இதர நடவடிக்கைகளாக இருந்தன.


இந்தச் சூழலில் வருவாய் மற்றும் ஊதியக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்காகப் போராடிய பொதுவுடைமை கட்சி முக்கியத்துவம் பெற்றதையடுத்து 1934ஆம் ஆண்டு அக்கட்சி தடை செய்யப்பட்டது. தீவிர இடதுசாரி ஆதரவு முதல் தீவிர வலதுசாரி ஆதரவு வரையான அகன்ற அரசியல் சார்பு பெற்ற ஓர் இயக்கமாக சுயராஜ்ஜியம் என்ற குறிக்கோளுடன் காங்கிரஸ் கட்சி வலுவான அமைப்பாக உருவெடுத்தது. 1934ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ்நாராயண், ஆச்சார்ய நரேந்திரதேவ் மற்றும் மினுமசானி ஆகியோரின் முன்முயற்சியால் காங்கிரஸ் சமதர்ம (சோஷலிஷ) கட்சி உருவானது. தேசியவாதம் தான் சமதர்மத்துக்கான பாதை என்று நம்பிய அவர்கள் அதற்காக காங்கிரசுக்குள் இருந்து உழைக்க விரும்பினார்கள்.

ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்துவிடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும்போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும்.

- காந்தியடிகள்


Tags : India Nationalism: Gandhian Phase தேசியம் | காந்திய காலகட்டம்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Beginnings of Socialist Movements India Nationalism: Gandhian Phase in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம் : சமதர்மவாத (சோஷியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள் - தேசியம் | காந்திய காலகட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்