தேசியம் | காந்திய காலகட்டம் - வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு வழிவகுத்த நடவடிக்கைகள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு வழிவகுத்த நடவடிக்கைகள்
1940 ஆகஸ்டு மாதம்,
காங்கிரஸ்
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசப்பிரதிநிதி
லின்லித்கோ ஒரு சலுகையை வழங்க முன்வந்தார். எனினும் குறிப்பிடப்படாத
எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை,
காங்கிரசுக்கு
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே வரையறைக்கு உட்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தை
காந்தியடிகள் அறிவித்தார் இதில் ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்டனர். 1940
அக்டோபர்
17ஆம் நாள் வினோபா பாவே சத்தியாகிரகப்
போராட்டத்தை முதன் முதலாக ஆரம்பித்தார். அந்த ஆண்டின் இறுதி வரை சத்தியாகிரகம்
தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கைது
செய்யப்பட்டனர்.
1942 மார்ச் 22ஆம்
நாள் அமைச்சரவை (காபினட்) அமைச்சர் சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு
தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது. உரிய அதிகாரத்தை உடனடியாக மாற்றித்தர
பிரிட்டன் விருப்பப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் கிரிப்ஸ் தூதுக்குழு இடையேயான பேச்சுகள்
தோல்வி அடைந்தன. கிரிப்ஸ் தூதுக்குழு கீழ்க்கண்டவற்றை வழங்க முன்வந்தது.
1. போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
2. பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக
இந்திய இளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
3. போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின்
கட்டுப்பாட்டில் இருப்பது.
காங்கிரஸ்,
முஸ்லீம்
லீக் இரண்டுமே இந்தத் திட்ட அறிக்கையை நிராகரித்து விட்டன. திவாலாகும் வங்கியில்
பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் இந்த திட்டங்களை அழைத்தார்.
கிரிப்ஸ்
தூதுக்குழுவின் வெளிப்பாடு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. போர்க்கால பற்றாக்குறைகளினால்
விலைகள் பெரிதும் அதிகரித்து அதிருப்தி தீவிரமடைந்தது. பம்பாயில் 1942
ஆகஸ்டு
மாதம் 8ஆம் நாள் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்டதுடன் இந்தியாவில் ஆங்கிலேய
ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட கோரிக்கை வைத்தது. செய் அல்லது செத்து மடி என்ற
முழக்கத்தை காந்தியடிகள் வெளியிட்டார். "நாம் நமது முயற்சியின்
விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம்,
அல்லது
நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்கமாட்டோம்”,
என்று
காந்தியடிகள் கூறினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் அகிம்சையான மக்கள்
போராட்டம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் அடுத்த நாள் காலை அதாவது 9
ஆகஸ்டு
1942 அன்று காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
காந்தியடிகள்
மற்றும் இதர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைபட்டதையடுத்து இந்த
இயக்கத்துக்கு சமதர்மவாதிகள் தலைமை தாங்கினார்கள். சிறையில் இருந்து தப்பிய
ஜெயபிரகாஷ் நாராயண், ராமாநந்த்மிஷ்ரா ஆகியோர் திரைமறைவு வேலைகளில்
ஈடுபட்டனர். அருணா ஆசப் அலி போன்ற பெண் தலைவர்கள் முக்கியப் பணி ஆற்றினார்கள். உஷா
மேத்தா நிறுவிய காங்கிரஸ் வானொலி திரைமறைவில் இருந்தபடியே 1942
நவம்பர்
மாதம் வரை வெற்றிகரமாகச் செயல்பட்டது.
இந்தியாவின்
பல பகுதிகளுக்கும் இந்தச் செய்தி பரவியதை அடுத்து அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே
வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. வேலைநிறுத்தங்கள்,
ஆர்ப்பாட்டங்கள்
மறியல் என தாங்கள் அறிந்த வகைகளில் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். இரும்புக்
கரம் கொண்டு அரசு இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்தியது. அரசுக் கட்டடங்கள்,
ரயில்
நிலையங்கள், தொலைபேசி மற்றும் தந்தி கம்பிகள்,
மற்றும்
பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடையாளங்களாக நின்ற அனைத்தின் மீதும் மக்கள் தாக்குதல்களை
நடத்தினார்கள். மதராஸில் இது முக்கியமாக தீவிரமாகப் பரவியது. சதாரா,
ஒரிஸா
(தற்போதைய ஒடிசா), பீகார்,
ஐக்கிய
மாகாணங்கள், வங்காளம் ஆகிய இடங்களில் இணை அரசுகள்
நிறுவப்பட்டன.
காங்கிரசை விட்டு விலகிய சுபாஷ் சந்திர போஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பிரிட்டிஷாரின் எதிரிகளோடு கைகோர்த்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த அவர் விரும்பினார். 1941 மார்ச் மாதம், அவர் தனது இல்லத்தில் இருந்து நாடகத்தனமாக (மாறுவேடமணிந்து) தப்பித்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். முதலில் அவர் சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற விரும்பினார். ஆனால் பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணிப் படைகளுடன் சோவியத் யூனியன் அரசு சேர்ந்ததால் அவர் ஜெர்மனிக்கு சென்றார். 1943 பிப்ரவரி மாதம், நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக ஜப்பான் சென்ற அவர், இந்திய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்தார். இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய இராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபாஜ்) ஜெனரல் மோகன் சிங் உருவாக்கினார், அதன்பிறகு இது கேப்டன் லட்சுமி செகல் என்பவரால் நடத்தப்பட்டது. இது காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், பெண்கள் பிரிவாக ராணி லக்ஷ்மி பாய் பிரிகேட் என மூன்று படையணிகளாக சுபாஷ் சந்திர போஸ் மறுசீரமைத்தார். சுபாஷ் சந்திர போஸ், சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார். 'தில்லிக்கு புறப்படு’ (தில்லி சலோ) என்ற முழக்கத்தை சுபாஷ் வெளியிட்டார். ஜப்பானிய படைகளின் ஒரு பகுதியாக இந்திய தேசிய இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் ஜப்பான் தோல்வி அடைந்த பிறகு இந்திய தேசிய இராணுவம் முன்னேறுவது தடைப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதால் சுதந்திரத்துக்காக போராடிய அவரது தீவிரப்பணிகள் முடிவுக்கு வந்தன.
பிரிட்டிஷ்
அரசு இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளை கைது செய்து செங்கோட்டையில் அவர்களை
விசாரணைக்காக வைத்தது. தேசியவாத பிரச்சாரத்துக்கு ஒரு மேடையாக இந்த விசாரணை
அமைந்தது. காங்கிரஸ் அமைத்த பாதுகாப்புத்துறை கமிட்டி ஜவகர்லால் நேரு ,
தேஜ்
பஹதூர் சாப்ரூ, புலாபாய் தேசாய்,
ஆசப்
அலி ஆகியோரை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் அதிகாரிகளுக்கு
எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக
அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய தேசிய இராணுவத்தின் தாக்குதல்களும் அதனை
அடுத்த வழக்கு விசாரணைகளும் இந்தியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.