Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

தேசியம் | காந்திய காலகட்டம் - 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  27.07.2022 05:04 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் ஒன்றாகும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் ஒன்றாகும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதன்படி, 11மாகாணங்கள், 6 தலைமை ஆணையரக மாகாணங்கள் மற்றும் இந்தக் கூட்டமைப்பில் சேர விரும்பிய அனைத்து சிற்றரசுகளும் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றன. மாகாணங்களின் தன்னாட்சிக்கும் இந்த சட்டம் வகை செய்தது. அனைத்து துறைகளும் இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வந்த இரட்டை ஆட்சி மத்திய அரசுக்கும் விரிவாக்கப்பட்டது. வாக்குரிமையானது சொத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்பட்டதால் மக்கள் தொகையில் பத்து சதவிகித மக்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றனர். இந்தச் சட்டத்தின்படி, பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது.


(அ) காங்கிரஸ் அமைச்சரவைகளும் அவற்றின் பணியும்

1937ஆம் ஆண்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதுடன் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்தால் காங்கிரஸ் பெரிதும் பலன் பெற்றது. சட்டப்பேரவை புறக்கணிப்பைக் கைவிட்ட காங்கிரஸ் தேர்தல்களில் போட்டியிட்டது. பதினோரு மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லை மாகாணம், சர் முஹம்மது சாதுல்லா தலைமையிலான அசாம் பள்ளத்தாக்கு முஸ்லீம் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு உட்பட எட்டு மாகாணங்களில் அது ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அரசுகள் பிரபலமான அரசுகளாக செயல்பட்டன. மக்களின் தேவைகளை அவை நிறைவேற்றின. அமைச்சர்களின் ஊதியம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது. தேசியவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. அரசிடம் அவசர கால அதிகாரங்களை தந்த சட்டங்களை அவர்கள் திரும்பப்பெற்றனர். கம்யூனிஸ்ட் கட்சி தவிர இதர கட்சிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை ரத்து செய்தனர். தேச அளவில் பத்திரிகைகள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அவர்கள் அகற்றிவிட்டனர். காவல்துறை அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அரசியல் பேச்சுக்கள் பற்றி சி.ஐ.டி. சார்பாக அறிக்கை தருவது விலக்கிக் கொள்ளப்பட்டது. விவசாயிகளின் கடன்கள் குறையவும் தொழிலக தொழிலாளர்களின் பணி நிலைமை மேம்படவும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

 

(ஆ) காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல்

1939இல் இரண்டாம் உலகபோர் மூண்டது. காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.


(இ) இரண்டாம் உலக போரின் போது தேசிய இயக்கம், 1939 - 45

காந்தியடிகளின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரானார். காந்தியடிகள் ஒத்துழைக்க மறுத்ததை அடுத்து, சுபாஷ் சந்திர போஸ் அப்பதவியிலிருந்து விலகி பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.



Tags : India Nationalism: Gandhian Phase தேசியம் | காந்திய காலகட்டம்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : First Congress Ministries under Government of India Act, 1935 India Nationalism: Gandhian Phase in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம் : 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைந்த முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள் - தேசியம் | காந்திய காலகட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்