தேசியம் | காந்திய காலகட்டம் - விடுதலையை நோக்கி | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
விடுதலையை நோக்கி
1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல்
இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர். விரைவில் அங்கிருந்து வேறு
நிலையங்களுக்கும் பரவிய இந்த கிளர்ச்சியில் சுமார் 20,000க்கும்
மேற்பட்ட மாலுமிகள் ஈடுபட்டனர். இதேபோன்று ஜபல்பூரில் இருந்த இந்திய விமானப்படை,
இந்திய
சமிக்ஞை (சிக்னல்) படை ஆகியவற்றிலும் வேலைநிறுத்தங்கள் நடந்தன. இவ்வாறு
ஆயுதப்படைகளிலும் கூட பிரிட்டிஷாரின் மேலாதிக்க கட்டுப்பாடு இல்லை.
1945ஆம் ஆண்டு ஜூன் 14
ஆம்
நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதியின்
செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர்
இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது. போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர
துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன. எனினும் சிம்லா
மாநாட்டில் காங்கிரசும் முஸ்லீம்லீக்கும் ஓர் ஒப்பந்தத்தை எட்டமுடியவில்லை.
அனைத்து முஸ்லீம் உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்கில் இருந்துதான் இடம்பெற வேண்டும்
மற்றும் அவர்கள் அனைத்து முக்கிய விஷயங்களிலும் வீட்டோ அதிகாரங்களையும்
பெறவேண்டும் என்று ஜின்னா கோரினார். 1946ஆம்
ஆண்டு தொடக்கத்தில் நடந்த மாகாணத் தேர்தல்களில் பொதுத்தொகுதிகளில் பெரும்பாலானவையை
காங்கிரஸ் வென்றது. முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லீம் லீக்
வென்று தனது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.
ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி
பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பினார். அவர் பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டராஃபோர்ட் கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். பாகிஸ்தானை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அக்குழுவினர் பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்று வகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இந்திய அரசியல் சாசன நிர்ணயமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து சமூகங்களில் இருந்தும் பிரதிநிதித்துவம் கொண்ட இடைக்கால அரசு நிறுவப்பட வேண்டும். இந்த திட்டத்தை காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஏற்றுக்கொண்டன. எனினும் இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு சாதகமாக இந்த திட்டம் குறித்து விவரித்தன.
காங்கிரஸ்
ஒரு முஸ்லீம் உறுப்பினரை நியமித்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்
கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. தான் மட்டுமே முஸ்லீம்களின்
பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று வாதிட்ட முஸ்லீம் லீக் தனது ஆதரவை
விலக்கிக்கொண்டது. 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம்
நாளை ‘நேரடி நடவடிக்கை நாளாக’ ஜின்னா அறிவித்தார். ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்பு
போராட்டங்களும் நடந்தது விரைவில் அது இந்து - முஸ்லீம் மோதலாக உருவெடுத்தது. இது
வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. நவகாளி மாவட்டம் மிகமோசமாகப்
பாதிக்கப்பட்டது.
ஜவகர்லால்
நேரு தலைமையில் இடைக்கால அரசு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
அமைக்கப்பட்டது. சில தயக்கங்களுக்குப் பிறகு முஸ்லீம் லீக் இந்த இடைக்கால அரசில் 1946ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் இணைந்தது. அதன் பிரதிநிதி லியாகத் அலிகான் நிதி உறுப்பினராக
ஆக்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதவாக்கில்
அதிகாரமாற்றம் ஏற்படும் என்று 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
கிளெமன்ட் அட்லி அறிவித்தார். இந்த ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யும் பொறுப்புடன்
மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவுக்கு அரசுப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். 1947ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் மவுண்ட்பேட்டன் திட்டம்
அறிவிக்கப்பட்டது. கீழ்க்கண்டவை அதில் கூறப்பட்ட அம்சங்கள்:
• இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ,
பிரிட்டனின்
தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும்.
• சிற்றரசுகள் இந்தியா அல்லது
பாகிஸ்தானில் சேரவேண்டும்.
• ராட்கிளிஃப் பிரவ்ன்
தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகார மாற்றத்துக்குப்
பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.
• பஞ்சாப் மற்றும் வங்காள
சட்டப்பேரவைகள் அவைகள் பிரிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தும்.
1947ஆம் ஆண்டு ஜூலை 18ஆம்
நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றியதையடுத்து
மவுண்பேட்டன் திட்டத்துக்கு செயல்வடிவம் தரப்பட்டது. இந்தியாவின் மீதான ஆங்கில
ஏகாதிபத்தியத்தின் இறையாண்மையை இந்தச் சட்டம் ரத்து செய்தது. இந்தியா மற்றும்
பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இந்தியா பிரிக்கப்பட்டது. 1947ஆம்
ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது.