Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும்

தேசியம் | காந்திய காலகட்டம் - ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  27.07.2022 07:58 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும்

1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. (அ) வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம் (ஆ) சுயராஜ்ஜியக் கட்சியினர் (இ) காந்தியடிகளின் ஆக்கப்பூர்வத் திட்டம் (ஈ) சைமன் குழு புறக்கணிப்பு (உ) நேரு அறிக்கை

ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும் 

1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் (அமர்வில்) இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது. பின்னர் 1920 டிசம்பர் மாதம் சேலம் C. விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளாவன;

1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.

2. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.

3. நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.

4. அரசுப் பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.

5. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.

6. அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.

7. குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.

8. அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.


(அ) வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம்

1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார். இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின, குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின. காந்தியடிகள் நாடுதழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் அந்நியத் துணிகள் குவிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அரசு வேலைகளைத் துறந்தனர், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் கல்வியைக் கைவிட்டனர், பெருமளவிலான வழக்குரைஞர்கள் தங்கள் தொழிலை கைவிட்டனர். ஆங்கிலேயப் பொருள்கள் மற்றும் நிறுவனங்கள் புறக்கணிப்புத் தீவிரமாக நடந்தது. வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது. தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல் நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர். ஆனால் ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

 

(ஆ) சுயராஜ்ஜியக் கட்சியினர்

இதனிடையே காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அவையாவன, மாற்றத்தை விரும்புவோர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஆகும். மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் தலைமையிலான காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள். சட்டப் பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும் இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம்தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர். அவர்களே மாற்றத்தை விரும்புவோர்கள் என்று அழைக்கப்பட்டனர். வல்லபாய் பட்டேல், சி. ராஜாஜி உள்ளிட்ட காந்தியடிகளைத் தீவிரமாகப் பின்பற்றிய பலர் மாற்றத்தை விரும்பாதவர்களாக அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர விரும்பினார்கள். எதிர்ப்புக்கு இடையே மோதிலால் நேருவும் சி.ஆர். தாஸும் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கினார்கள். இந்தக் கட்சி பின்னர் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது. ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு (இம்பீரியல்) சட்டப் பேரவை மற்றும் பல்வேறு மாகாண சட்டப்பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசியவாதக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் சட்டப்பேரவையை ஒரு மேடையாகப் பயன்படுத்தினார்கள். வங்காளத்தில் அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் இந்தியர்களுக்கு என மாற்றப்பட்ட துறைகளில் பொறுப்பேற்க அவர்கள் மறுத்துவிட்டனர். காலனி அரசின் உண்மையான இயல்பை அவர்கள் வெளிக்கொணர்ந்தனர். எனினும் 1925இல் அக்கட்சியின் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு சுயராஜ்ஜிய கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன. மாற்றப்பட்ட துறைகளில் உள்ளாட்சி, கல்வி, பொதுசுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள், மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. 1935ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது.

 

(இ) காந்தியடிகளின் ஆக்கப்பூர்வத் திட்டம்

சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு ஆர்வலர்களும் மக்களும் அகிம்சை போராட்டம் குறித்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் உணர்ந்தார். அதன் ஒருபகுதியாக காதி இயக்க மேம்பாடு, இந்து - முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். "உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து - முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்.” என்று காந்தியடிகள் காங்கிரசாருக்கு அறிவுறுத்தினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் கதர் உடுப்பதை அவர் கட்டாயமாக்கினார். அகில இந்திய நெசவாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

(ஈ) சைமன் குழு புறக்கணிப்பு

1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம் பெற்றனர். இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலைகண்டு கொதித்தனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன. போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.


 

(உ) நேரு அறிக்கை

இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சைமன் குழு புறக்கணிப்பு ஒன்றிணைத்தது. சைமன் குழு முன்மொழிவுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு 1928இல் அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது. அதில் பரிந்துரை செய்யப்பட்டவை:

 இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.

 மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.

 மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையினராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு

 பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.


மத்திய சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஜின்னா சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். மூன்றில் ஒருபங்கு இடங்கள் முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். அவரை ஆதரித்த தேஜ் பஹதூர் சாப்ரூ இது பெரும் மாற்றத்தைத் தராது என்று வேண்டினார். எனினும், அனைத்துக் கட்சி மாநாட்டில் இவை அனைத்தும் தோல்வி கண்டன. பின்னர், ஜின்னாவின் 14 அம்சங்கள் என்று அழைக்கப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தார். எனினும் அதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்ட ஜின்னா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு முஸ்லீம்களுக்கு தனிநாடு என வலியுறுத்த ஆரம்பித்தார்.


Tags : India Nationalism: Gandhian Phase தேசியம் | காந்திய காலகட்டம்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Non-Cooperation Movement and Its Fallout India Nationalism: Gandhian Phase in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம் : ஒத்துழையாமை இயக்கமும் அதன் வீழ்ச்சியும் - தேசியம் | காந்திய காலகட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்