Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம்

தேசியம் | காந்திய காலகட்டம் - முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  27.07.2022 06:10 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம்

இதனிடையே டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.

முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம்

இதனிடையே டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர். 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது. வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுடன், சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. 1930 ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.


(அ) உப்பு சத்தியாகிரகம்

1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்:

 இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.

முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.

நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.

உப்பு வரியை ரத்து செய்வது.


கோரிக்கை மனுவுக்கு அரசப்பிரதிநிதி பதில் தெரிவிக்காத நிலையில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுபூர்வமானமுடிவாகும். காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கானோர் சேரச்சேர அது நீண்டுகொண்டே போனது. காந்தியடிகள் தனது 61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று 1930 ஏப்ரல் 5ஆம் நாள் மாலை தண்டி கடற்கரையை அடைந்தார். அடுத்த நாள் காலை ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து உப்புச்சட்டத்தை மீறினார்.

மாகாணங்களில் உப்பு சத்தியாகிரகம்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை இதேபோன்ற ஒரு யாத்திரையை சி. ராஜாஜி மேற்கொண்டார். கேரளா, ஆந்திரா மற்றும் வங்காளத்திலும் உப்பு சத்தியாகிரக யாத்திரை நடந்தன. வடமேற்கு எல்லை மாகாணத்தில் கான் அப்துல் கஃபார்கான் என்பவர் இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்றார். செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட ‘குடை கிட்மட்கர்’ இயக்கத்தை அவர் நடத்தினார்.


ஆங்கிலேயர்கள் 1865ஆம் ஆண்டு முதலாவதுவனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். சுள்ளி எடுப்பதுகால்நடைத் தீவனம் மற்றும் தேன்விதைகள்மருத்துவ மூலிகைகள்கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருள்களையும் வனப்பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்கு தடைவிதித்தது. 1878ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது. நன்செய் மற்றும் தரிசு நிலங்களும் வனங்களாக கருதப்பட்டன. பழங்குடியினர் பயன்படுத்திய சுழற்சி முறை விவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வனப்பகுதிகளை தள்ளி வைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம். ராம்பா பகுதி ஆதிவாசிகளின் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக் குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922-24) மலபார் காவல்துறையின் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. வனவாசிகளின் நலனுக்காகப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு தியாகி ஆனார்.

காந்தியடிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். ஜவகர்லால் நேரு, கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இதர தலைவர்கள் விரைவாக கைதானார்கள். அந்நிய துணிகள் புறக்கணிப்பு, மதுக்கடைகள் முன் ஆர்ப்பாட்டங்கள், வரி கொடா இயக்கம், வனச்சட்டங்களை பின்பற்ற மறுப்பது ஆகியன உள்ளிட்ட பல ஆர்ப்பாட்ட வடிவங்கள் பின்பற்றப்பட்டன. பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர், மாணவர்கள் மற்றும் குழந்தைகளும் என சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களிலேயே இது மிகப் பெரியது.


(ஆ) வட்டமேசை மாநாடு

இந்த இயக்கத்தின் மத்தியில் 1930ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தார். காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

 

(இ) காந்தி-இர்வின் ஒப்பந்தம்

காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்கு போக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது. சட்டமறுப்பு இயக்கத்தை ரத்து செய்துவிட்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. 1931 செப்டம்பர் 7ஆம் நாள் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் ஏற்கவில்லை. இதன் விளைவாக, இரண்டாவது வட்டமேசை மாநாடு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.


  இரண்டாம் வட்டமேசை மாநாடு

 

(ஈ) சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல்

இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார். இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக இருந்தது. படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் செய்த மக்கள் படைகொண்டு அடக்கப்பட்டனர்.


சட்டமறுப்பு இயக்கத்துக்கு அழைப்பு

இதனிடையே, 1932ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் முதல் டிசம்பர் 24ஆம் நாள் வரை மூன்றாவது வட்ட மேசை மாநாடு நடத்தப்பட்டது. சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.


(உ) வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம்

1932 ஆகஸ்டு 16ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார். முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகிய B.R. அம்பேத்கர், தமது கருத்துப்படி தனித்தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரத்தை வழங்கும் என்று வாதிட்டார். 1932 செப்டம்பர் 20ஆம் நாள் காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கினார். மதன் மோகன் மாளவியா, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல தலைவர்கள் B.R. அம்பேத்கர் மற்றும் M.C. ராஜா மற்றும் இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

அதன் முக்கிய விதிமுறைகள்: 

 தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.

 ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

 

(ஊ) தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரம்

அடுத்த சில ஆண்டுகள் தீண்டாமையை ஒழிப்பதற்கு காந்தியடிகள் செலவிட்டார். அம்பேத்கர் உடனான அவரது தொடர்புகள் சாதி அமைப்புகள் பற்றிய காந்தியடிகளின் கருத்துக்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தமது இருப்பிடத்தை வார்தாவில் இருந்த சத்தியாகிரக ஆசிரமத்துக்கு மாற்றினார். அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப் பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும். 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.



Tags : India Nationalism: Gandhian Phase தேசியம் | காந்திய காலகட்டம்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : The Struggle for Poorna Swaraj and Launch of Civil Disobedience Movement India Nationalism: Gandhian Phase in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம் : முழுமையான சுயராஜ்ஜியத்துக்கான போராட்டம் மற்றும் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கம் - தேசியம் | காந்திய காலகட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்