Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளாதாரச் சிக்கனங்கள்

தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - பொருளாதாரச் சிக்கனங்கள் | 11th Economics : Chapter 3 : Production Analysis

   Posted On :  27.07.2022 03:20 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

பொருளாதாரச் சிக்கனங்கள்

'உற்பத்தி அளவு' என்பது உற்பத்தி காரணிகளின் விகிதத்தைக் குறிக்கிறது.

பொருளாதாரச் சிக்கனங்கள் (Economies of Scale)

பொருளாதாரச் சிக்கனம் என்பது உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரிக்கப்படுவதால் வரும் நன்மையாகும். உற்பத்திக் காரணிகளின் கிடைப்பளவு விகிதம் இடத்திற்கு இடம் மாறுபடும். உற்பத்திக்கு ஆகும் செலவு, உற்பத்தியின் அளவால் நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு உற்பத்தியாளரும் உற்பத்தி செலவை கட்டுப்படுத்த விரும்புவர். பொருளாதாரச் சிக்கனம் நிறுவனத்தின், அக மற்றும் புறக் காரணிகளால் நிர்ணயிக்கப்படும். மார்ஷலின் கூற்றுப்படி பொருளாதாரச் சிக்கனம் இரு வகையாக பிரிக்கப்படுகிறது.

1. அகச் சிக்கனங்கள் 

2. புறச்சிக்கனங்கள்


பொருளாதார சிக்கனங்கள் உற்பத்தி செலவை குறைக்கின்றன. சிக்கனமின்மைகள் உற்பத்தி செலவை அதிகரிக்கின்றன. பொருளாதாரச் சிக்கனங்களால் சராசரி உற்பத்திச் செலவு குறையும். இதனால் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கலாம்; நுகர்வும் அதிகரிக்கலாம்.


அகச் சிக்கனங்கள்

அகச்சிக்கனம் என்பது நிறுவனம் பொருளின் உற்பத்தி செலவினை குறைத்து பெறும் நன்மையினை குறிக்கும். நிறுவனமானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதாலும் புதிய முதலீட்டை உருவாக்குவதாலும் மேலாண்மை திறனை மேம்படுத்துவதாலும் உற்பத்தி செலவினை குறைக்கிறது. - இது பல வகைப்படும்.

தொழில்நுட்ப சிக்கனங்கள்

நிறுவனத்தின் அளவு பெரிய அளவாக இருப்பதால் கிடைக்கும் மூலதனமும் அதிகமாக இருக்கும். இதனால் ஒரு நிறுவனம் நவீன நுட்பங்களை புகுத்த முடியும். எனவே இதன்மூலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியினால் உற்பத்தியின் தரத்தை உயர்த்த முடியும். 

நிதிச் சிக்கனங்கள்

பெரிய நிறுவனங்கள் சந்தையில் பங்கு விற்பனை மூலம் மூலதன பெருக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சிறிய நிறுவனங்கள் எளிதாக பங்கு விற்பனையை செய்ய இயலாது. 

மேலாண்மை சிக்கனங்கள்

பேரளவு உற்பத்தி வேலைப்பகுப்பு முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் சரியான வேலையாட்கள் சரியான துறையில் இருப்பார்கள். 

உழைப்புச் சிக்கனங்கள்

பேரளவு உற்பத்தி வேலை பகுப்பு முறைக்கு வழிவகுக்கிறது. இதனை சிறப்பு உழைப்பு எனலாம். இது உழைப்பின் தரம் மற்றும்திறனை அதிகரிக்கும். நிறுவனத்தின் உற்பத்தி திறன் இதனால் அதிகரிக்கும்.

சந்தை சார்ந்த சிக்கனங்கள்

பேரளவு உற்பத்தியின் காரணமாக மூலப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க இயலும். தொலைதூர சந்தையில் பொருட்களை விற்க முடியும். இது உற்பத்தியாளரின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கிறது.

சந்தையில் தொடர்ந்திருப்பதன் சிக்கனங்கள்

பெரிய நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம். உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளின் சந்தையில் தோல்வியுற்று இழப்பு ஏற்பட்டாலும் வேறொரு பொருளின் இலாபத்தினால் இழப்பினை ஈடு செய்ய முடியும். ஒரே பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.


புறச் சிக்கனங்கள்

புறச் சிக்கனங்கள் என்பது நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் உற்பத்தியின் முறைகளில் ஏற்படும் மேம்பாடுகளைக் குறிக்கும். இது ஒரு நிறுவனம் மட்டும் பெறும் நன்மை அல்லாது, அனைத்து நிறுவனங்களும் பெறும் பயனாகும். முக்கியமான புறச்சிக்கனங்களை  பின்வருமாறு காணலாம்

1. மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் 

2. வங்கி செயல்பாடு சார்ந்த வசதிகள் 

3. நகரியல் வளர்ச்சி 

4. தகவல் மற்றும் தொலை தொடர்பு வளர்ச்சி


Tags : Production Analysis | Economics தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : Economies of Scale Production Analysis | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : பொருளாதாரச் சிக்கனங்கள் - தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு