பொருளாதாரம் - தயாரிப்பு பகுப்பாய்வு: அறிமுகம் | 11th Economics : Chapter 3 : Production Analysis
உற்பத்தி என்பது பரிமாற்றத்தின் மூலம் மற்ற மனிதர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் செயல்பாடாகும்
- J.R.ஹிக்ஸ்
கற்றல் நோக்கங்கள்
1 பல்வேறு உற்பத்தி காரணிகளின் வகைகளையும் மற்றும் அவற்றின் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்ளுதல்.
2 குறுகிய கால மற்றும் நீண்டகால உற்பத்திச் சார்பினை அறிந்து கொள்ளுதல்.
3 அளிப்பு கருத்தினை அறிந்து கொள்ளுதல்.
முன்னுரை
உற்பத்தி என்பது பல்வேறு வகையான இடுபொருட்களைப் பயன்படுத்தி இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வுக்காக வழங்குதல் ஆகும். உற்பத்தி என்பது பொருளாதார நலத்தை உருவாக்குவதாகும். தேவைகள் உற்பத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. உற்பத்தி என்பது நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு என்ற நான்கு உற்பத்திக் காரணிகளின் ஒத்துழைப்பால் உருவாவது ஆகும். பொருளியலில் உற்பத்தி என்பது புதிதாக உருவாக்குதல் அல்லது மதிப்பைக் கூட்டுதல் ஆகும். சுருக்கமாக உற்பத்தி என்பது உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றுவது ஆகும்.
உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. உற்பத்தியின் அளவு உற்பத்திச் செலவினை தீர்மானிக்கிறது. பேரளவு உற்பத்தி இருக்கும் போது உற்பத்திக்கான சராசரி செலவு குறையும். இதன் காரணமாகவே தொழில் முனைவோர் அவர்களின் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க ஆர்வம் காட்டுவர். இதன் மூலமாக பொருளாதார நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் அங்காடியில் பொருட்களின் அளிப்பு அதிகமாகி பொருட்கள் குறைவான விலையில் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.