தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - சமஅளவு உற்பத்திக் கோடுகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis
சமஅளவு உற்பத்திக் கோடுகள் (Iso - quants)
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்தி காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி செய்வதைக் காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு என அழைக்கப்படுகிறது. கிரேக்கச் சொற்களான ஐசோ (ISO), குவான்ட் (quant) என்னும் இணைப்புத்தான் சமஅளவு உற்பத்திக் கோடு என அழைக்கப்பட்டது. ஐசோ (ISO) என்பது சமம் என்றும், குவான்ட்(quant) என்பது அளவு என்றும் பொருளாகும். இங்கு உழைப்பு மற்றும் மூலதனம் ஆகிய இரண்டு உற்பத்திக் காரணிகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
பொருளியலில் சம அளவு உற்பத்திக் கோடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்தி காரணிகளை பல்வேறு கலவைகளில் பயன்படுத்தி ஒரே அளவு உற்பத்தி செய்வதை குறிக்கும். சம அளவு உற்பத்தி கோடு, சமநோக்கு வளைகோட்டைப் போன்றதாகும்.
சம அளவு உற்பத்தி கோடு என்பது இரண்டு உற்பத்திக் காரணிகளின்(உழைப்பு, மூலதனம்) பல்வேறு கலவைகளில் ஒரே அளவு உற்பத்தியைத் தரும் பல்வேறு புள்ளிகளின் இணைப்பாகும் என வரையறுக்கப்படுகிறது. சம அளவு உற்பத்தி கோடு என்பதை 'சம உற்பத்திக் கோடு', 'பண்ட மாற்றுக் கோடு' என்றும் அழைக்கப்படுகிறது.
பெர்கூஸன், "சம அளவு உற்பத்திக் கோடு என்பது அனைத்து சாத்தியமான உற்பத்திக் கலவைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட பரும அளவு உற்பத்தி வெளியீட்டினை பெறுவதாகும்"- என வரையறுக்கிறார்.
சம அளவு உற்பத்திக் கோடுகள் கீழ்க்காணும் எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டவை.
1. உற்பத்திக்கு இரண்டு உற்பத்திக் காரணிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
2. உற்பத்தி காரணிகள் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட இயலும்.
3. தொழில்நுட்ப முறைகள் நிலையானவை.
4. இரண்டு காரணிகளையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். உற்பத்தி சார்பானது மாறும் விகித விளைவு விதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.
5. கொடுக்கப்பட்டுள்ள உற்பத்தி முறையில் உற்பத்திக் காரணிகளை அதிகபட்ச திறமையுடன் பயன்படுத்த முடியும்.
மேற்காணும் அட்டவணை 3.2-ன்படி உழைப்பு மற்றும் மூலதனத்தின் ஐந்து இணைப்பு கலவை ஒரே அளவிலான உற்பத்தியை தருகிறது. அதாவது 400 மீட்டர் துணி.
சம அளவு உற்பத்தி அட்டவணை
இரண்டு உற்பத்தி காரணிகளான உழைப்பு மற்றும் மூலதனத்தை எடுத்துக்கொள்வோம். சம அளவு உற்பத்தி கோடு அட்டவணையின் மூலம் இரு உற்பத்தி காரணிகளை பல்வேறு கலவைகளில் பயன்படுத்தி ஒரே அளவு உற்பத்தி செய்வதை காணலாம்.
சம அளவு உற்பத்திக் கோடு என்பது இரண்டு உற்பத்திக் காரணிகளின் பல்வேறு இணைப்புகளில் ஒரே அளவிலான உற்பத்தியைத் தருவதைக் காட்டுகிறது. சமஅளவு உற்பத்தி அட்டவணை வாயிலாக சம அளவு உற்பத்திக் கோட்டை வரையலாம்.
சமஅளவு உற்பத்திக்கோட்டு வரைபடம் என்பது உற்பத்திக் காரணிகளின் பல்வேறு இணைப்பில் உள்ள பல சம அளவு உற்பத்தி கோடுகளின் தொகுதி ஆகும். ஒவ்வொரு சமநோக்கு வளைகோடும் வேறுபட்ட உற்பத்தியைக் கொண்டவை.சுருங்கக்கூறின் சமநோக்கு கோட்டின் குடும்பம் சம அளவு உற்பத்தி வரைபடமாகும். வேறுவகையில் கூறினால், ஒரு வரைபடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சம அளவு உற்பத்திக் கோடுகள் இருந்தால் அது சம அளவு உற்பத்திக் கோட்டு வரைபடமாகும்.
1. சம உற்பத்திக் கோடுகள் எதிர்மறை சரிவைக் கொண்டவை.
சம உற்பத்திக் கோடுகள் இடமிருந்து வலமாக மேலிருந்து கீழ்நோக்கி செல்வதிலிருந்து காரணிகள் பதிலீடாக உள்ளன என்பதை அறியலாம். ஒரு காரணியை அதிகமாக பயன்படுத்தும்போது, மற்றொரு காரணியைக் குறைவாக பயன்படுத்தி வெளியீட்டின் அளவு மாறாமல் செய்ய இயலும்.
வரைபடத்த்தில் A -என்னும் இணைப்பில் K5 அளவு அதிக மூலதனத்தையும் L2 - குறைந்த உழைப்பையும் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. B, C மற்றும் D - ஆகிய இணைப்பிற்கு உற்பத்தியாளர் இடம்பெயரும்போது அதிக அளவு உழைப்பும், குறைந்த அளவு மூலதனமும் பயன்படுத்தப்படுகின்றன.
2. தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
உழைப்பு இரண்டு அலகுகள் வீதம் சம அளவில் அதிகரிக்கப்படுகிறது. எனினும் மூலதனம் B கலவையில் 8 அலகுகளும் (30-22) C கலவையில் 6 அலகுகளும் (22-16) D கலவையில் 4 அலகுகளும் (16-12) E கலவையில் 2 அலகுகள் மட்டும் (12-10) குறைவதைக் காணலாம். இறுதிநிலை பதிலீட்டு வீதம் அதிகரிக்கும்போது சமஉற்பத்திக்கோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாகவும் (Concave) நிலையான இறுதிநிலை பதிலீட்டு வீதம் இருந்தால் நேர்கோடாகவும் அமையும். இது சம உற்பத்திக் கோட்டின் இயல்பினை பொறுத்தது. இது மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றின் திறன்கள் அடிப்படையிலும் அமையும்.
இது உற்பத்திக் காரணிகள் ஒன்றுக்கொன்று பதிலீட்டுப் பண்டமாகும் என்பதை குறிக்கிறது. குறைந்த அளவு உழைப்பின் அலகுகள் மூலதனத்திற்கு பதிலீடாக பயன்படுத்தப்படும் போது சமஉற்பத்திக் கோடுகள் தோற்றுவாய் நோக்கி குவிந்து அமையும்.
3. சம உற்பத்திக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளா
IQ2 சமஉற்பத்தி வளைகோட்டில் உள்ள C என்ற புள்ளி அதிக உற்பத்தியையும், IQ1 சமஉற்பத்தி வளைகோட்டில் உள்ள B என்ற புள்ளி குறைவான உற்பத்தியையும் IQ, குறிக்கிறது. ஆனால் A என்ற புள்ளி இரண்டு சம உற்பத்தி வளைகோட்டிற்கும் IQ1, IQ2, பொதுவாக உள்ளது. இதன்பொருள் சமமற்ற இருவேறு புள்ளிகள் சமமாகிவிட்டது என்பதாகும் C=A, B=A, என்றால் C=B ஆனால் C>B, இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
4. உயர் சம உற்பத்திக்கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது.
சம உற்பத்திக் கோடுகள் உயரே செல்லச் செல்ல உற்பத்தி அளவும் உயர்ந்து கொண்டே செல்லும். கீழுள்ள சம உற்பத்திக் கோட்டை விட அதிக உற்பத்திக் காரணி பயன்படுத்தப்பட்டுள்ளதை உயர் சம உற்பத்திக்கோடு குறிப்பிடுகிறது.
படத்தில் உள்ள அம்புக்குறியானது சம உற்பத்திக் கோட்டின் உற்பத்தி வலப்புறமாக மேல்நோக்கி அதிகரிப்பதை உணர்த்துகிறது.
5. சம உற்பத்திக் கோடு X அச்சினையோ அல்லது Y அச்சினையோ தொடாது.
எந்த ஒரு சம உற்பத்திக்கோடும் X அச்சின் மேலோ அல்லது Y அச்சின் மேலோ அமையாது. ஏனென்றால் IQ1 ல் மூலதனம் மட்டுமே பயன்பட்டுள்ளது மற்றும் IQ2 வில் உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மூலதனம் அல்லது உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்துவது இயலாத செயல் என்று கருதப்படுகிறது.