பொருளாதாரம் - அளிப்பை தீர்மானிக்கும் காரணிகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis
அளிப்பை தீர்மானிக்கும் காரணிகள்
1. பொருளின் விலை
பொருளின் விலை அதிகமானால் அளிப்பின் அளவு அதிகமாகும். உற்பத்தியாளருக்கும் , விற்பனையாளருக்கும் அளிப்பினை அதிகரிக்க விலை ஒரு ஊக்கக் காரணி ஆகும்.
2. பிற பண்டங்களின் விலைகள்
ஒரு பொருளின் அளிப்பு அப்பொருளின் விலை மட்டுமல்லாது, பிற பண்டங்களின் விலையைப் பொறுத்தும் அமையும். உதாரணமாக. பணப்பயிர்களான பருத்தி போன்ற பொருட்களின் விலை அதிகரித்தால் இப்பொருட்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும். இதன் காரணமாக, உணவுப் பயிர்களான கோதுமை போன்றவை பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறையலாம்.
3. காரணிகளின் விலை
உற்பத்திக் காரணிகளின் விலை அதிகரிக்கும் போது உற்பத்திச் செலவு அதிகரிக்கக் கூடும். இதனால் உற்பத்தியின் அளவு குறையும்.
4. விலை பற்றிய எதிர்பார்ப்பு
வருங்காலத்தில் விலைகள் பற்றிய எதிர்பார்ப்பு, தற்போதைய அளிப்பின் அளவை நிர்ணயிக்கும். உற்பத்தியாளர்கள் வருங்காலத்தில் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்த்தால், நிகழ்காலத்தில் அவர்களின் உற்பத்தி அளவை குறைத்து அங்காடியில் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்வர்.
5. தொழில் நுட்பம்
ஒரு நாட்டில் அதிக முன்னேற்றமான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தும் போது உற்பத்திச் செலவு குறைந்து, பேரளவு உற்பத்தி ஏற்பட வாய்ப்புள்ளது.
6. இயற்கை காரணிகள்
இயற்கை காரணிகளான பருவ நிலை, மழை அளவு, தட்பவெப்ப நிலை ஆகியவை வேளாண் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும்.
7. புதிய கச்சாபொருட்களின் கண்டுபிடிப்பு
மலிவான மற்றும் தரமான புதிய கச்சாப் பொருள்களின் கண்டுபிடிப்பு பொருளின் அளிப்பினை அதிகரிக்கலாம்.
8. வரிகள் மற்றும் சலுகைகள்
அரசு வழங்கும் உள்ளீடுகளுக்கான மானியம், மின் வசதிக்கான மானியம் ஆகியவை உற்பத்தியாளரை அதிக உற்பத்தி செய்யத் தூண்டும். அம்மானியங்களை திரும்பப்பெறும் போது உற்பத்தி குறையும். நேர்முக மற்றும் மறைமுக வரி உற்பத்தியை பெருக்க நினைக்கும் உற்பத்தியாளரின் திறமையையும் ஆர்வத்தையும் பாதிக்கலாம்.
9. நிறுவனத்தின் நோக்கம்
ஒரு நிறுவனத்தின் நோக்கம் தன் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பது அல்லது அங்காடியில் தன் பொருட்களின் பங்கை அதிகரிப்பது என்று இருந்தால் அந்த நிறுவனத்தின் அளிப்பு அங்காடியில் அதிகமாக இருக்கும்.