பொருளாதாரம் - அளிப்பு விதி | 11th Economics : Chapter 3 : Production Analysis

   Posted On :  27.07.2022 03:52 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

அளிப்பு விதி

"மற்றவை மாறாதிருக்கும் போது ஒரு பொருளின் விலை அதிகரிக்கும்போது அப்பொருளின் அளிப்பும் அதிகரிக்கும். மேலும், ஒரு பொருளின் விலை குறையும்போது அப்பொருளின் அளிப்பும் குறையும்"

அளிப்பு விதி

அளிப்பு விதி உற்பத்தி பகுப்பாய்வுடன் தொடர்புடையது. அளிப்பு விதி விலைக்கும் அளிப்புக்கும் உள்ள நேரடியான தொடர்பினை விளக்குகிறது. உதாரணமாக துணியின் விலை அதிகரித்தால் துணியின் அளிப்பும் அதிகரிக்கும். விலை அதிகரிக்கும் போது உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் இலாபம் பெற முயல்வதால் அளிப்பு அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், விலை அதிகரிக்கும் போது, உற்பத்தியாளர் உற்பத்தியை அதிகரிக்கிறார். உற்பத்தி அதிகரிப்பு இலாபத்தை அதிகரிப்பதனால் அளிப்பு அதிகரிக்கிறது.

அளிப்பு விதி ஒரு பொருளின் விலைக்கும், அப்பொருளின் அளிப்பிற்கும் உள்ள நேரடி உறவை விளக்குகிறது.

இலக்கணம்

அளிப்பு விதி கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகின்றது.

"மற்றவை மாறாதிருக்கும் போது ஒரு பொருளின் விலை அதிகரிக்கும்போது அப்பொருளின் அளிப்பும் அதிகரிக்கும். மேலும், ஒரு பொருளின் விலை குறையும்போது அப்பொருளின் அளிப்பும் குறையும்".


1. அளிப்பு சார்பு

ஒரு பொருளின் அளிப்பு, பொருளின் விலை, உழைப்பின் விலை, மூலதனத்தின் விலை, தொழில்நுட்பம், நிறுவனங்களின் எண்ணிக்கை, பதிலீட்டு பண்டங்களின் விலை, எதிர்காலத்தின் விலை பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும்.

கணித ரீதியாக அளிப்பு சார்பு கீழ் உள்ளவாறு குறிப்பிடப்படுகிறது.

Qs = f (Px Pr , , Pf, , T, 0, E) இதில்

Qs = X பண்டத்தின் அளிப்பின் அளவு 

Px = X பண்டத்தின் விலை

Pr = தொடர்புடைய பண்டங்களின் விலை

Pf = உற்பத்தி காரணிகளின் விலை 

T = தொழில் நுட்பம் 

O = உற்பத்தியாளரின் நோக்கம்

E = பொருளின் வருங்கால விலை பற்றிய எதிர்பார்ப்பு 

அனுமானங்கள் (Assumptions)

அளிப்பு விதி கீழ்க்காணும் எடுகோள்களை அடிப்படையாக கொண்டது. 

உற்பத்தி காரணிகளின் விலையில் மாற்றம் இல்லை. 

முதலீட்டு பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.

இயற்கை வளங்கள் மற்றும் அதன் கிடைப்பளவில் மாற்றம் இல்லை.

  பதிலீட்டு பண்டங்களின் விலைகளில் மாற்றம் இல்லை. 

 தொழில் நுட்பத்தில் மாற்றம் இல்லை. 

  காலநிலையில் மாற்றம் இல்லை. 

அரசியல் சூழ்நிலையில் மாற்றம் இல்லை .  

  வரிக் கொள்கையில் மாற்றம் இல்லை.

விளக்கம்

அளிப்பு சார்பு இவ்வாறு இருந்தால் 

Qs = f (P) எ.கா. Q = 20P 

P என்பது தன்னிச்சையான மாறி. இதன் மதிப்பு மாறும் போது அப்பொருளுக்கான அளிப்பின் (Q) மாறுபாட்டை அளவிடமுடியும். 

அளிப்பு அட்டவணை

அளிப்பு அட்டவணை என்பது பல்வேறு விலைகளில் பண்டங்களின் அளிப்பினை காட்டுகிறது. இதனைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அளிப்பு அட்டவணையின் மூலம் விளக்கலாம்.



2. அளிப்பு கோடு

அளிப்பு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் அளிப்பு கோடு வரையப்படுகிறது. ஒரு பண்டத்தின் விலை உயர்வால் அளிப்பு அதிகரிக்கும்; விலை குறைந்தால் அளிப்பும் குறையும். ஆகவே அளிப்பு கோடானது கீழிலிருந்து மேல் நோக்கி செல்லும். பண்டத்தின் அளிப்பின் அளவு X அச்சிலும், விலை Y அச்சிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. SS என்ற அளிப்புக் கோட்டில் அமைந்துள்ள a, b, c, d மற்றும் e என்ற புள்ளிகள் பல்வேறு விலைகளில் அளிப்பின் அளவினை குறிக்கின்றன. (வரைபடம் 3.12 பார்க்கவும்.)




3. அளிப்பை தீர்மானிக்கும் காரணிகள்

1. பொருளின் விலை

பொருளின் விலை அதிகமானால் அளிப்பின் அளவு அதிகமாகும். உற்பத்தியாளருக்கும் , விற்பனையாளருக்கும் அளிப்பினை அதிகரிக்க விலை ஒரு ஊக்கக் காரணி ஆகும். 

2. பிற பண்டங்களின் விலைகள் 

ஒரு பொருளின் அளிப்பு அப்பொருளின் விலை மட்டுமல்லாது, பிற பண்டங்களின் விலையைப் பொறுத்தும் அமையும். உதாரணமாக. பணப்பயிர்களான பருத்தி போன்ற பொருட்களின் விலை அதிகரித்தால் இப்பொருட்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும். இதன் காரணமாக, உணவுப் பயிர்களான கோதுமை போன்றவை பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறையலாம்.

3. காரணிகளின் விலை

உற்பத்திக் காரணிகளின் விலை அதிகரிக்கும் போது உற்பத்திச் செலவு அதிகரிக்கக் கூடும். இதனால் உற்பத்தியின் அளவு குறையும். 

4. விலை பற்றிய எதிர்பார்ப்பு

வருங்காலத்தில் விலைகள் பற்றிய எதிர்பார்ப்பு, தற்போதைய அளிப்பின் அளவை நிர்ணயிக்கும். உற்பத்தியாளர்கள் வருங்காலத்தில் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்த்தால், நிகழ்காலத்தில் அவர்களின் உற்பத்தி அளவை குறைத்து அங்காடியில் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்வர். 

5. தொழில் நுட்பம்

ஒரு நாட்டில் அதிக முன்னேற்றமான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தும் போது உற்பத்திச் செலவு குறைந்து, பேரளவு உற்பத்தி ஏற்பட வாய்ப்புள்ளது.

6. இயற்கை காரணிகள்

இயற்கை காரணிகளான பருவ நிலை, மழை அளவு, தட்பவெப்ப நிலை ஆகியவை வேளாண் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும். 

7. புதிய கச்சாபொருட்களின் கண்டுபிடிப்பு

மலிவான மற்றும் தரமான புதிய கச்சாப் பொருள்களின் கண்டுபிடிப்பு பொருளின் அளிப்பினை அதிகரிக்கலாம்.

8. வரிகள் மற்றும் சலுகைகள்

அரசு வழங்கும் உள்ளீடுகளுக்கான மானியம், மின் வசதிக்கான மானியம் ஆகியவை உற்பத்தியாளரை அதிக உற்பத்தி செய்யத் தூண்டும். அம்மானியங்களை திரும்பப்பெறும் போது உற்பத்தி குறையும். நேர்முக மற்றும் மறைமுக வரி உற்பத்தியை பெருக்க நினைக்கும் உற்பத்தியாளரின் திறமையையும் ஆர்வத்தையும் பாதிக்கலாம். 

9. நிறுவனத்தின் நோக்கம்

ஒரு நிறுவனத்தின் நோக்கம் தன் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பது அல்லது அங்காடியில் தன் பொருட்களின் பங்கை அதிகரிப்பது என்று இருந்தால் அந்த நிறுவனத்தின் அளிப்பு அங்காடியில் அதிகமாக இருக்கும்.


4. அளிப்பு நெகிழ்ச்சி

அளிப்பு நெகிழ்ச்சி என்பது விலை மாற்றத்திற்கு ஏற்ப அளிப்பில் ஏற்படும் மாற்ற வீதம் ஆகும்.

கணித ரீதியாக

அளிப்பு நெகிழ்ச்சி = அளிப்பின் அளவில் ஏற்படும் விகிதாச்சார

மாற்றம் / விலையில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம்

es=( ΔQs/Qs) / (ΔP/P); es = ΔQs / ΔP x P/Qs இதில் Q, என்பது அளிப்பு, P என்பது விலை, Δ என்பது மாற்றம்.


5. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள்

அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும். 

1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13) 

அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1). பொருளின் விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும் போது, பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும். 

2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1). விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீத மாற்றமே ஏற்படும். 

3. குறைவான நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே அமையும் (Es<1). விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும். 

4. முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பு நெகிழ்ச்சி பூஜ்யத்திற்கு சமமாக உள்ளது (Es = 0) விலையில் சமமாக ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 

5. முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (es=). விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை எற்படுத்தும்



6. அளிப்பின் நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் 

1. பொருட்களின் தன்மை

நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களை நீண்டகாலம் வரை பாதுகாக்கலாம். உற்பத்தியாளர் அப்பொருளுக்கு அதிக விலை கிடைக்கும் வரை காத்திருக்க முடியும். எனவே, நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களின் அளிப்பு நெகிழ்ச்சி அதிகம் விலை கூடியதும் அதிக அளவு பொருட்கள் சந்தைக்கு வரும். ஆனால் அழுகும் பொருட்கள் உடனே விற்றுத் தீரக்கூடியவை.

அழுகும் பொருட்களின் அளிப்பின் நெகிழ்ச்சி குறைவு. விலை கூடினாலும் அதிக அளவுப் பொருட்களைச் சந்தைக்கும், கொண்டு வர இயலாது. 

2. உற்பத்திச் செலவு

ஒரு நிறுவனம் வளர்ந்து செல் விளைவு அல்லது மாறா விளைவு நிலையில் செயல்பட்டால், எளிதில் அளிப்பின் அளவை அதிகரிக்க இயலும். அதனால் அளிப்பின் நெகிழ்ச்சி அதிகம். ஒருநிறுவனம் குறைந்து செல் விளைவு நிலையில் செயல்பட்டால் உற்பத்தி அதிகமாகும்போது உற்பத்தி செலவு வேகமாக அதிகரிக்கும். எனவே, அளிப்பை அதிகரிப்பது கடினம். ஆகையால் அங்கு அளிப்பின் நெகிழ்ச்சி குறைவாக இருக்கும். 

3. தொழில்நுட்பநிலை

பேரளவு உற்பத்தியில் அதிக மூலதனத்தை முதலீடு செய்யும்போது அளிப்பை அதிகரிப்பது சுலபமல்ல. எனவே அளிப்பின் நெகிழ்ச்சி குறைவு. மூலதன கருவிகளை குறைவாக பயன்படுத்தும்போதோ அல்லது எளிமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதோ, அளிப்பு அதிக நெகிழ்ச்சியுடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

4. கால அளவு

மிகக் குறுகிய காலத்தில் பல நிறுவனங்களுக்கு அளிப்பின் அளவை அதிகரிக்க இயலாது. எனவே அளிப்பின் நெகிழ்ச்சி மிகக்குறைவு. நீண்ட காலத்தில் எல்லா உள்ளீடுகளின் (மாறும் மற்றும் மாறா) அளவுகளையும் எளிதாக மாற்றலாம். எனவே, அளிப்பின் அளவும் மாறும். ஆகவே, அளிப்பு அதிக நெகிழ்வு தன்மை உடையது.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : Law of Supply Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : அளிப்பு விதி - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு