Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | உற்பத்திக் காரணிகளின் இயல்புகள்
   Posted On :  27.07.2022 03:05 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

உற்பத்திக் காரணிகளின் இயல்புகள்

உற்பத்திக் காரணிகள் என்பது பண்டங்களை உற்பத்தி செய்யப் பயன்படும் வளங்கள் ஆகும்.

உற்பத்திக் காரணிகளின் இயல்புகள்

உற்பத்திக் காரணிகள் என்பது பண்டங்களை உற்பத்தி செய்யப் பயன்படும் வளங்கள் ஆகும். இது நான்கு வகைப்படும். நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு அல்லது தொழில் முனைதல். இங்கு நிலம் என்பது இயற்கை வளமாகும் (அதாவது மண், கனிமவளங்கள், கடல்கள், ஆறுகள், இயற்கை காடுகள், மீன்வளர்ப்பு, இன்னும் பல...). உழைப்பு என்பது மனிதவளம். நிலம் மற்றும் உழைப்பு என்பது முதன்மை உற்பத்திக் காரணிகளாகும்.

இந்த இரு காரணிகளும், நுகர்விற்காக சில பொருட்களை உற்பத்திச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. நுகர்விற்குப் போக சில பொருட்கள் எஞ்சியிருக்க வாய்ப்புண்டு. சேமிப்பு என்பது உற்பத்தியிலிருந்து நுகர்வு போக எஞ்சியதாகும். சேமித்த தொகை முதலீடாகும். அது உற்பத்திக்கான மூலதனமாக பயன்படுகிறது. அமைப்பு அல்லது நிறுவனம் என்பது உழைப்பின் சிறப்பு வடிவம் ஆகும். மூலதனம் மற்றும் அமைப்பு என்பது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணிகள்.

இந்த நான்கு காரணிகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. இவை ஒருங்கிணைந்து பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியை தீர்மானிக்கின்றன.


1. நிலம்

பொதுவாக நிலம் என்பது மண் அல்லது பூமியின் மேற்பரப்பு அல்லது தரைப் பரப்பினைக் குறிப்பதாகும். ஆனால் பொருளியலில் நிலம் என்பது இயற்கையின் கொடையாகும். இந்த நிலத்தினை உற்பத்திக் காரணியாக பயன்படுத்தி வருமானம் பெற முடியும். நிலம் என்பது அனைத்துப் பொருள் செல்வங்களையும் உள்ளடக்கியது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களைப் பொறுத்தே அந்நாட்டின் பொருளாதார வளம் அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயற்கைவளம் மிகுந்த பல நாடுகளில் ஏழைகள் அதிகமாக வாழ்கின்றனர். இயற்கை வளம் குறைவான நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகின்றன என்பதையும் மாணவர்கள் அறிய வேண்டும்.


மண் வளம், கால நிலை மற்றும் மழையளவு ஆகியவை வேளாண்மையின் செழுமையையும், உற்பத்தியின் அளவையும் தீர்மானிக்கின்றன. வேளாண் உற்பத்திப் பொருட்களே வாணிபம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அடிப்படையாக உள்ளன எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று வேளாண் தொழில் அல்லாத பிற தொழில்களே பல நாடுகளின் செல்வச் செழிப்புக்குக் காரணமாக உள்ளன.

மின் உற்பத்திக்கான தொழிற்சாலைகளுக்கு நிலக்கரிச் சுரங்கங்களும், நீர்வீழ்ச்சிகளும் ஆதாரமாக விளங்குகின்றன. விவசாயம், வணிகம், தொழிற்சாலை போன்ற அனைத்து பொருளாதார நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக உள்ள இயற்கைவளங்களே, பொருளியலில் நிலம் என்று குறிப்பிடப்படுகின்றது. 

நிலத்தின் சிறப்பியல்புகள் 

நிலம் என்பது முதன்மை உற்பத்திக் காரணியாகும். 

நிலம் என்பது செயலற்ற உற்பத்திக் காரணியாகும். 

நிலம் என்பது இயற்கையின் கொடை. 

நிலத்திற்கு உற்பத்தி செலவு இல்லை.

நிலத்தின் அளிப்பு மாறாதது, நெகிழ்ச்சியற்றது. 

நிலம் நிலையானது, அழிவற்றது. 

நிலம் என்பது அசைவற்றது, இடமாற்றம் செய்ய முடியாதது. 

நிலம் என்பது செழுமையினைப் பொறுத்து பல வகைப்படும். 

நிலம் என்பது பலவிதப் பயன்பாடுகளைக் கொண்டது. 

நிலத்தின் பயன்பாடு குறைந்து செல் விளைவு விகித விதியை அடிப்படையாகக் கொண்டது.


2. உழைப்பு

உழைப்பு என்பது செயல் உற்பத்திக் காரணியாகும். சாதாரணமாக உழைப்பு என்பது உடல் உழைப்பு அல்லது திறமைசாரா உழைப்பைக் குறிக்கும். பொருளியலில், வருமானத்தையோ வெகுமதியையோ எதிர்பார்த்துச் செய்யும் அனைத்து வேலைகளும் உழைப்பு எனப்படும். அந்த வேலை உடல் உழைப்பையோ அறிவினைப் பயன்படுத்தியோ அமையலாம். எடுத்துக்காட்டாக விவசாயி, சமையல்காரர், ரிக்க்ஷா இழுப்பவர் மற்றும் கொத்தனார் ஆகியோர் உடல் உழைப்பினை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள்.


மருத்துவர், ஆசிரியர், பொறியாளர் ஆகியோர் அறிவை அதிகமாகப் பயன்படுத்தி உழைப்பவர்கள், உடல் உறுப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துபவர்கள். சுருக்கமாக, பொருளியலில் உழைப்பு என்பது வருமானத்தைப் பெறுவதற்காக செய்யும் அனைத்துச் செயல்களாகும். வருமானத்தை எதிர்பார்க்காமல் அளிக்கின்ற உழைப்பு சேவை என அழைக்கப்படலாம்.

மார்ஷலின் கூற்றுப்படி, உழைப்பு என்பது உற்பத்திக் காரணியான உழைப்பாளர் வருமானம் ஈட்டுவதற்காக தனது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்துவதாகும்.

உழைப்பின் சிறப்பியல்புகள்  

உழைப்பு இடம் பெயரக் கூடியது. 

உழைப்பு என்பது செயல் உற்பத்திக் காரணியாகும். 

உழைப்பு என்பது பல வகைப்படும். உடலுழைப்பு (விவசாயி) மற்றும் அறிவு திறன் சார்ந்த உழைப்பு (ஆசிரியர், வழக்கறிஞர்). 

உழைப்பு அழியக்கூடியது. 

உழைப்பை "உழைப்பாளரிடமிருந்து" பிரிக்க இயலாது.

உழைப்பு இடங்களுக்கிடையேயும், தொழில்களுக்கிடையேயும் மெதுவாக நகரக் கூடியது. 

உழைப்பாளர்  உற்பத்திக்கு காரணமாகவும் அப்பொருளை பயன்படுத்தும் நுகர்வோராகவும் உள்ளார். 

உழைப்பின் அலகுகள் பலவகைப்பட்டவை. உழைப்பு திறமையைப் பொறுத்து மாறுபடும். 

கூலியானது உழைப்பாளரின் அளிப்பையும் திறனையும் பொறுத்து அமையும். 

தனி உழைப்பாளரின் பேரம் பேசும் சக்தி குறைவு.


3. மூலதனம்


"இயற்கையின் கொடை தவிர்த்த, வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம்" என மார்ஷல் கூறியுள்ளார். போம்-போவர்க் கூற்றுப்படி "மூலதனம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திக் காரணி ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டபடி மூலதனம் என்பது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணியாகும்.


உற்பத்தியின் ஒரு பகுதி சேமிக்கப்படுகின்றது. இந்த 'சேமிப்பே மூலதனம்' ஆகும். எடுத்துக்காட்டாக மாம்பழம் முழுவதும் உண்ணப்படுவதில்லை; மாம்பழத்தின் விதை சேமிக்கப்பட்டு, அது வருங்காலங்களில் அதிக மாம்பழங்களை உருவாக்க பயன்படுகிறது.

மூலதனம் என்பது ஓர் இருப்பாகும். அனைத்து மூலதனங்களும் செல்வமாகும். ஆனால் அனைத்து செல்வங்களும் மூலதனமாகாது. எடுத்துக்காட்டாக டிராக்டர் என்பது ஒரு மூலதன சொத்தாகும். டிராக்டரை உற்பத்திக்கு பயன்படுத்தும்போது அது மூலதன சொத்தாக கருதப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் டிராக்டர் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் பொழுது அது மூலதனமாகக் கருதப்பட மாட்டாது, சொத்தாகவே கருதப்படும்.

மூலதனத்தின் சிறப்பியல்புகள்

மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது. 

மூலதனம் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம் பெயரக்கூடியது.

மூலதனம் செயலற்ற உற்பத்திக் காரணியாகும். 

மூலதனத்தின் அளிப்பு நெகிழும் தன்மையுடையது. 

மூலதனத்தின் தேவை என்பது தருவிக்கப்பட்ட தேவையாகும். 

மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும். 

மூலதனம் வருமானம் தரக்கூடியது

மூலதனம் தேய்வுறக்கூடியது

முதலீடு புலனாகும் மற்றும் புலனாக முதலீடாக இருக்கலாம். உதாரணமாக கட்டிடங்கள், இயந்திரங்கள், தொழிற்கூடங்கள், உள்ளீடு இருப்புக்கள், சாலைகள் போன்றவை புலனாகும் முதலீடுகள். விளம்பரச் செலவுகள், தொழிலாளர் பயிற்சி போன்றவை புலனாகா முதலீடுகள்.

நிதி மூலதனம்

பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனத்திற்கு தேவையான செல்வம் - பணத்தின் மூலம் மதிப்பிடப்படுகிறது. இது பொதுவாக கடன்கள் மற்றும் பங்கு விற்பனை மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. இதன் முதன்மை நோக்கம் இலாப நோக்கிற்காக செல்வத்தை குவித்து வைப்பது ஆகும்.


4. தொழில் அமைப்பு



ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் 'தொழில் அமைப்பாளர்' (அ) ' தொழில் முனைவோர்' ஆவார். தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார். அவர் சிறப்பு உழைப்பினை மேற்கொள்பவர் ஆவார். ஜோசப் சும்பீட்டரின் கூற்றுப்படி புத்தாக்கத்தைப் பயன்படுத்தி, மற்ற உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு, பொருட்களை உற்பத்தி செய்பவரே தொழில் முனைவோர் ஆவர். தொழில் முனைவோர் என்பவர் தொழிலை ஏற்று நடத்துபவராக மட்டுமல்லாது இடர்ப்பாடுகளையும் ஏற்கிறார். பிற உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு மற்றும் மூலதனம் ஆகியவற்றிற்கான ஊதியத்தை அளித்த பிறகு எஞ்சியுள்ள ஊதியமே தொழில் முனைவோரின் வெகுமதி ஆகும். ஒரு தொழில் அமைப்பை நடத்தும்போது இலாபமோ, நட்டமோ, இலாப - நட்டமில்லா நிலையோ அமையலாம்.

தொழில் முனைவோரின் பணிகள் 

துவக்கப் பணி: தொழில் முனைவோர் தொழிலை தொடங்குபவர் ஆவார். தொழில்முனைவோர் தன்னிடம் உள்ள வளங்கள் மற்றும் சூழ்நிலைக்கேற்றவாறு திட்டமிட்டு உற்பத்தியை மேற்கொள்பவர் ஆவார். 

புத்தாக்கப் பணி: வெற்றிகரமான தொழில்முனைவோர் எப்பொழுதும் புத்தாக்கம் புனைபவர். உற்பத்தி முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துபவர். 

ஒருங்கிணைத்தல்: தொழில்முனைவோர் சரியான உற்பத்திக் காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்பவர். 

கட்டுப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையிடுதல் : தொழில்முனைவோர் தனது குறிக்கோளை அடைவதற்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்பவர். தொழில்முனைவோர் அனைத்து உற்பத்திக் காரணிகளின் செயல்பாடுகளை நெறிப்படுத்தி, மேற்பார்வையிட்டு அதன் மூலம் அதிக உற்பத்தியை பெருக்குவதற்கு வழிவகுப்பவர். 

இடர்ப்பாடுகளை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மை: தொழில் முனைவோர் தொழிலில் ஏற்படக்கூடிய இடர்பாடு மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டும். இடர்பாடுகளை காப்பீடு செய்ய முடியும். ஆனால் நிச்சயமற்ற தன்மையை காப்பீடு செய்ய முடியாது. இது இலாபத்தினைக் குறைக்கும்.

தொழில் முனைவோர் என்பவர் பல்வேறு உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயற்படுத்தி உற்பத்தியில் இலாபம் பெற முயல்பவர்.



11th Economics : Chapter 3 : Production Analysis : Features of the Factors of Production in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : உற்பத்திக் காரணிகளின் இயல்புகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு