தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - மாறும் விகித விளைவு விதி | 11th Economics : Chapter 3 : Production Analysis
மாறும் விகித விளைவு விதி
ஒரே ஒரு உள்ளீட்டினை மட்டும் அதிகப்படுத்தி, பிற உள்ளீடுகளை மாற்றாமல், உற்பத்தியைப் பெருக்க முயன்றால் மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் உயர்ந்து பின்பு குறிப்பிட்ட புள்ளியில் நிலையானபின் குறைந்து செல்லும். இறுதிநிலை உற்பத்தி எதிர்கணியமாக கடைசியில் காணப்படும்
ஸ்டிக்ளரின் கூற்றுப்படி. “உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிற காரணிகளின் அளவு நிலையாக இருக்கும்போது, ஓர் உற்பத்தி காரணி சம உயர்வாக அதிகரிக்கும்போது ஒரூ குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு மொத்த உற்பத்தியின் அளவு குறையும். அதாவது இறுதி நிலை உற்பத்தி பூஜ்ஜியத்தை விட குறையும்“.
• ஒரே ஒரு உற்பத்திக் காரணியின் அளவு மட்டும் உயர்த்தப்படுகிறது; ஏனைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறாமல் இருக்கிறது.
• மாறும் உற்பத்திக் காரணிகள் ஒரே தன்மையுடையவை.
• உற்பத்திப் பொருளானது பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
• தொழில்நுட்ப நிலையில் மாற்றம் இல்லை.
• பொருளின் விலையில் மாற்றம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்களின் அளவு மொத்த உற்பத்தியைக் குறிக்கும்.
இறுதிநிலை உற்பத்தியின் கூட்டுத்தொகையே மொத்த உற்பத்தி ஆகும். அதாவது TP = ∑MP
இதில் TP = மொத்த உற்பத்தி
MP = இறுதிநிலை உற்பத்தி.
∑ = மொத்தம்
மொத்த உற்பத்தியை உற்பத்தி காரணிகளின் அலகுகளால் வகுப்பதால் கிடைப்பது சராசரி உற்பத்தி ஆகும். ஓர் அலகு உற்பத்தி காரணியின் சராசரி உற்பத்தித் திறனே சராசரி உற்பத்தி ஆகும்.
கணித ரீதியாக AP = TP/N
இதில் AP = சராசரி உற்பத்தி
TP = மொத்த உற்பத்தி
N = மொத்த உள்ளீடுகளின் அலகு
ஏற்கனவே உள்ள ஓர் உற்பத்திக்காரணியின் அளவில் ஓர் அதிகரிப்பு செய்யும்போது, மொத்த உற்பத்தியில் ஏற்படும் கூடுகின்ற நிகர அளவு உற்பத்தியே இறுதி நிலை உற்பத்தி ஆகும். வேறு வகையில் கூறினால் இறுதிநிலை ஆக்கம் என்பது மொத்த உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தினை உள்ளீடுகளில் ஏற்படும் மாற்றத்தினால் வகுப்பதாகும்.
இதனை
MP = ∆TP / ∆N என குறிப்பிடலாம்.
இதில்
MP = இறுதிநிலை உற்பத்தி
∆TP = மொத்த உற்பத்தியில் ஏற்படும் மாற்றம்
∆N = உள்ளீடுகளின் அலகுகளில் ஏற்படும் மாற்றம். வேறு வகையில் கூறுவதனால்,
MP = TP(n) - TP (n-1)
இதில்
MP = இறுதி நிலை உற்பத்தி
TP(n) = n அலகு உள்ளீட்டு காரணிகளால் கிடைக்கும் மொத்த உற்பத்தி
TP(n-1) = (n-1) அலகு உள்ளீட்டு காரணிகளால் அதாவது, முந்தைய அளவு உள்ளீட்டு காரணிகளால் கிடைக்கும் உற்பத்தியின் அளவு
மாறும் விகித விளைவு விதியை கீழ்க்காணும் அட்டவணை மற்றும் வரைபடத்தின் மூலம் விளக்கலாம்.
அட்டவணை 3.1 -ல் மாறும் உற்பத்தி காரணியான உழைப்பு, பிற மாறா உற்பத்தி காரணிகளோடு பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டவணையின்படி உற்பத்தி மூன்று நிலைகளை கொண்டது. மொத்த உற்பத்தி முதல் நிலையில் அதிகரித்து, பின்பு சம நிலையை அடைந்து, நிலையாகி, பின்பு குறைகிறது. இறுதிநிலை உற்பத்தி அதிகரிக்கும்போது மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். இறுதிநிலை உற்பத்தி பூஜ்யமாகும் வரை மொத்த உற்பத்தி அதிகரித்துக் கொண்டே செல்லும். இறுதி நிலை உற்பத்தி எதிரிடையாகி மாறும்போது மொத்த உற்பத்தி குறைகிறது.
வரைபடம் 3.1 – ல் உழைப்பாளர்களின் எண்ணிக்கை X அச்சிலும். TP , AP மற்றும் MP ஆகியவை Y அச்சிலும் குறிக்கப்பட்டுள்ளன. மூன்று வகையான நிலைகளை வரைபடத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
முதல்நிலை I
முதலில் இறுதி நிலை உற்பத்தி மூன்று உழைப்பாளர்களை பயன்படுத்தும் வரை அதிகரிக்கின்றது. இது சராசரி உற்பத்தியை விட அதிகம். எனவே, மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் அதிகரிக்கும். மொத்த உற்பத்தி தொடக்கத்தில் வளர் விகிதத்தில் அதிகரித்து, A என்ற புள்ளியை அடைந்து பின்பு குறைந்தவிகிதத்தில் அதிகரிக்கின்றது. இப்புள்ளியே "வளைவு மாற்றப் புள்ளி" ஆகும்.
இரண்டாம் நிலை II
இரண்டாம் நிலையில் இறுதிநிலை உற்பத்தியானது குறைந்து 6 அலகு உழைப்பை பயன்படுத்தும் போது பூஜ்யமாகிறது. X அச்சை வெட்டுகிறது. நான்காவது உழைப்பை பயன்படுத்தும் போது MPL = APL இதில் MPL வளைகோடானது APL வளைகோட்டை விட கீழ் அமையும். TPL வளைகோடு குறைந்து செல் வீதத்தில் அதிகரிக்கும்.
மூன்றாம் நிலை III
மூன்றாம் நிலையில் ஏழு அலகு உழைப்பாளர்களை பயன்படுத்தும் போது உழைப்பின் இறுதிநிலை உற்பத்தித் திறன் எதிர் கணியமாகும். உழைப்பின் சராசரி உற்பத்தி திறன் குறைந்து சென்றாலும் நேர்மறை மதிப்பாகவே இருக்கும். 6 அலகு உழைப்புடன் கூடுதலாக 1 அலகு உழைப்பை பயன்படுத்தும் போது TPL குறையத் தொடங்கும்.